Thursday, November 27, 2014

குரங்கு மாறினால் பூமாலை தப்பிக்குமா !?

        
   "பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது ! அதற்கு ஏண்டா புனிதமான அரசியல பாவிக்கிறீங்க !?" என்பது ஒரு கலைக் கூத்தாடி சினிமாவில் பாவித்த வசனமாகும் .அபூஹுரைராவுக்கு (ரலி ) சைத்தான் கற்றுக் கொடுத்த ஆயதுல் குர்சி போல பொய்மையின் தெளிவான உருவமான சினிமா சொன்ன உண்மை இதுவாகும் .


                                           செல்வம் ,குடும்ப கௌரவம் ,ஆதிக்க வெறி என்ற நோக்கங்களுக்காக குடிமக்களை ஏமாற்றி குறித்த சிலரால் பயன்படுத்தப் படும் முக்கிய பொறிமுறையாக இன்று இந்த அரசியல் மாறி இருக்கின்றது .அமெரிக்காவாக இருந்தாலும் அரேபியாவாக இருந்தாலும் சிரியவாக இருந்தாலும் சிறீலங்காவாக இருந்தாலும் இதுதான் நடப்பு நிலவரமாகும் .

             அரசியல் என்பது புனிதமானது அது கட்டமைக்கப்பட்ட ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக மனித சமூகத்தின் அடிப்படை தேவைகளை பங்கீடு செய்யவும் ,சகஜ வாழ்வை பாதுகாக்கவும் இருக்கின்ற அமைப்பு முறையாகும் .இதனால் தான் இஸ்லாம் அரசியல் என்பது மக்களுக்கு நன்மை செய்வது .என ஆணித்தரமாக குறிப்பிடுகின்றது .

                   மக்களுக்காக அரசு என்பதுதான் அரசியல் அதிகார வடிவத்தின் மூல நாதமாகும் .ஆனால் இன்றைய யதார்த்தம் அப்படி இல்லை ;மாறாக தான்தோன்றிகளின் சொத்தாக மாறி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் துரோகமாய் ஆகிவிட்டது .ஊழல் ,அதிகார துஸ்பிரயோகம் அதன் மூலமான குறிப்பிட்ட சிலரின் சுகபோகம் என்பது அரசியலின் குறிக்கோளாக ஆகிவிட்டது .

               கிரேக்க கைசர்களின் (மன்னர்களின் ) ஏமாற்று வித்தையாக பாவிக்கப் பட்ட ஜனநாயகம் எனும் மாயா ஜாலத்தை நம்பி வாய் பிளக்கும் ஏமாளிகளாக இப்போதும் மக்கள் இருக்கிறார்கள் என்பது  மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது .கோடிக்கணக்கை நம்பி நாளும் இருபது ரூபா தண்டம் செலுத்தும் லாட்டரி சீட்டு கலாச்சாரம் போல எதிர்பார்ப்போடு வாக்குப்பெட்டி நிரப்புதல் நடைபெறும் !ஆனாலும் விளைவு என்ன !?தலைமைகள் மாறினாலும் அதன் தன்மைகளும் ,பண்புகளும் மாறாது .

                                                   அதன் காரணம் என்ன !? அப்படியானால் யார் ஏமாளிகள் !? ஒரு சித்தாந்தத்தின் பிரயோக கருவியாகவே அரசியல் அதிகாரம் இருக்கின்றது என்றால் இன்று உலகை ஆளும் சித்தாந்தம் எது என தேடிப்பார்த்தால் கிடைக்கும் விடை சுயநலம் பிடித்த முதலாளித்துவமே ! அப்படி இருக்க யாருக்கு வாக்களித்து என்ன பயன் !?    

         சித்தாந்தை மாற்றாமல் தலைமைகளை மாற்றுவதால் நடக்கப் போவது எதுவும் இல்லை .அரசியலை ஒரு புனிதமான பூமாலை ஆக எடுத்துக் கொண்டால் அதனை ஒரு குரங்கிடம் இருந்து பறித்து இன்னொரு குரங்கிடம் கொடுத்தால் கிடைக்கும் விளைவு என்ன !?சிந்திக்க வேண்டிய கேள்விதான் !அதோடு சரியான மாற்று சித்தாந்தம் எது என்பது மனித குலத்தின் தேடலாக மாறாத வரை விமோசனம் என்பது எட்டாக்கனியே !

No comments:

Post a Comment