Saturday, November 3, 2012

அரசியல் 'கோமா ' ஒரு ஆதாரப் பார்வை ....


              
                சூழ்நிலைகள் இலட்சியங்களை திசை மாற்றும் சக்தி வாய்ந்தவை . பருவமடையாமல் வெளிவருவது ஒரு அரசியல் தற்கொலை ஆவது போலவே ,இலட்சிய வாதத்தில் இருந்து சூழ்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது அப்பட்டமாக அது அரசியல் கோமா நிலை ஆகும்  . இந்த நிலை இலட்சியத்தை  இரண்டாம் மூன்றாம் நிலைக்கு இட்டுச் சென்று கடைசியில் அதை காணாமல் செய்து, பெயரளவில் ஒரு பேசுபொருளாக  ஆக்கி விடும் . அத்தோடு அழிவையும் நிச்சயப்படுத்தும் .
                                                               1985 இல் எனது பாடசாலை நாட்கள் மறக்க முடியாதவை . வெடியோசை , மோட்டார் குண்டுகள் , விமானத் தாக்குதல்கள் இதற்கு மத்தியிலும் சீருடை தரித்த மாணவர்களாய் ஒரு கல்வித்தேடல் . அகால மரணங்களில் அச்சத்தையும் ,அதுவே உறவினராகவும் நண்பர்களாகவும் இருந்தால் பீரிட்டு வரும் கண்ணீரையும் கைக்குட்டையால் துடைத்தவாறே புத்தகப் பைகளை சுமந்த காலமது .
                                                                                     யாழ் கோட்டைக்கு அருகில் தான் எமது கல்லூரி . யாழ் கோட்டை இலங்கை இராணுவத்தின் முதல் தர இராணுவ முகாம். இன வாதத்தில் நியாயங்களை தொலைத்ததால் எதிரி இலகுவாக அன்று இனம் காணப்பட்டான் . பசி எடுக்கும் போதெல்லாம் துவக்குக் குதிரை தாராளமாகவே மீட்டப்படும்.அப்போது தோட்டாக்கள் மனித உடல்களுக்குள் புகுந்து உயிர் பறித்து விளையாடியது ஒரு தரப்புக்கு பயங்கரவாதி ! அடுத்த தரப்புக்கு அரச கூலிப்படை ! மாறி மாறி நடக்கும் இந்த நர வேட்டையில் மாட்டிப் பலியானால் பல்கலைக்கழகம் போகாமல் பட்டம் மட்டும் நிச்சயம் .

                                                                        இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி காவல் கடமையில் ஒரு இனம் சார் ஆயுதக் குழு முகாமை சுற்றிய வீதிகளில் 'சென்றி பாயிண்ட் ' போட்டு காவல் காத்து வந்தது  அந்த சூழலில் அந்த இனம் சார் மக்களுக்கு அவர்கள் காவல் தெய்வங்கள் ! இந்த சூழ்நிலைக்குள் அனேகமாக எல்லோரும் புதைந்து போயினர் . வீச்சரிவாளோடு ஊர் எல்லையில் நிற்கும் ஐயநார் சிலையில் இருந்த பக்தியை விட 'கிளாஸ் நிகோ '  ரக ரைபிளோடு சென்றியில் நிற்கும் போராளி மீது ஒரு அதீத பக்தி .

                                                                                          நாங்கள் பாடசாலை சென்று வரும் ஒவ்வொரு நாளும் அந்த காவல் நிலையங்களை தாண்ட வேண்டிய சூழ்நிலை . பல்வேறுபட்ட ஆயுதங்களோடு நிற்கும் அந்த சிந்தனை 'ஜீரோக்கள்' எமக்கும் அன்றைய பொழுதுகளில் கவர்ச்சிகரமான 'ஹீரோக்கள்' . அவர்களோடு கதைப்பதற்கும் ,அந்த ஆயுதங்களை தடவிப் பார்ப்பதிலும் ஒரு சொல்லமுடியாத ஆர்வம் . மாத்திரை போடாத அந்த மயக்கம் சூழ்நிலையை சுவைத்ததால் தான் ஏற்பட்டது . இந்த கவர்ச்சியால் அவர்களோடு இணைந்தவர்கள் தான் ஏராளம் .


                                                                                          "சுடு அல்லது சுடப்படுவாய்" இந்த தாரக மந்திரத்தின் மீது தான் தமிழீழம் புதைக்கப்பட்டது என்பது முள்ளிய வாய்க்காலில் முடிவுரை எழுதப்படும் வரை பலருக்கு புரியவில்லை .அதுவரை அதிரடியான ஆயுத சாகசங்களில் மட்டுமே வெற்றி மீதான நம்பிக்கை ! இலட்சியத்தோல்வி என்பது முப்பது வருடங்களின் முன் என்பது இன்று புரியவில்லை'ஹிட்  அண்ட் ரன் ' என்பதன் எல்லை நந்திக் கடலோடு முடிந்து போனபோது அரசியல் கோமாவின் கோர முடிவிற்குள் ஒரு  வரலாறு முற்றுப்புள்ளி இடப்பட்டது .  






                             

No comments:

Post a Comment