Saturday, December 22, 2012

தீமையின் ஆணிவேர் எது ?



                    சட்டங்கள் ஆள்கின்றன என்பதை விட ,சட்டங்கள் ஆளப் படுகின்றன ; என்பது தான் உண்மை .வேலியாக வேண்டிய நீதி பயிரை மேய்கின்றது எனும் கருத்தியல் பரவலாக பேசப்படும் ஒரு பேசு பொருள் .யாரால் சட்டம் தரப்படுகின்றது ? யாருக்காக தரப்படுகின்றது ? எனும் வினாக்கள் இங்கு தொடுக்கப் பட்டால் மக்களால்  மக்களுக்காக எனும் பொதுப்படையான அதன் ஜனநாயக   பதிலில் கவர்ச்சி கரமான ஒரு போலித் தன்மை வெளிப்படுகின்றது .

                                 குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள் , புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என குறித்த 'சிகரட் ' பெட்டியிலேயே எழுதவும் பட்டிருக்கும் ; ஆனால் அதன் பாவனை ,பிரயோகம் தொடர்பில் சட்டம் அத் தீமைக்கும் காவலனாகி அனுமதி கொடுத்து பாதுகாக்கும் . ஒவ்வொரு சிவில் ,கிரிமினல் சட்ட நுணுக்கங்களை ஆய்ந்து பார்த்தால் குற்றங்களை தடுத்தல் எனும் அவசியத்தை விடவும் அதை செய்த பின் அதிலிருந்து தப்ப முடியும் என்ற ஓட்டைகளே அதிகமாக இருக்கின்றது .


                                  உண்மையைச் சொன்னால் தீமைகள் தடுக்கப் படுதல் ; என்பதை விட குற்றவாளி ,நிரபராதி என்ற பாரபட்சம் இன்றி 'புரெபெசனல் லெவலில் ' நீதித் துறை இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு வெளிப்படை உண்மை  .சரியானது, நீதியானது என்பது வாதத் திறமையிலும் ,ஆதாரங்களில் குளறுபடி செய்வதிலும் தான் தங்கி நிற்கின்றது என்பதும் உண்மை  . அப்படியானால்  இந்த விபரீதமான வேலியின் தேவைதான் என்ன ?

                                     கொள்கைகளே உண்மையில் வாழ்வியல் வழி முறைகளை தீர்மானிக்கின்றன . என்ற பொதுவான அடிப்படையில் தான் சட்டத் துறையும் அரசின் கீழ் தஞ்சமடைகின்றது . நீதிக்கு முன் யாவரும் சமன் என்று பொதுவாக சொல்லப் பட்டாலும் அதன் தூய்மைத் தன்மை அரசியல் கொள்கைகளால் விலை பேசப்பட்ட நிலையிலேயே மக்கள் மயமாகி உள்ளது .

                                          அந்த வகையில் இன்றைய தீமைகளின் ஆணி வேறாய் இருப்பது தீய அரசுகள் தாம் ; என்றால் அது  மிகையான கருத்தல்ல . அதாவது தூய்மையற்ற கொள்கைகளோடு அரசுகள் இயங்கும் போது நீதித் துறையும் தூய்மை அற்றே இருக்கும் . இங்கு சட்டம் ஒழுங்கிலும் சுயநலமே மேலாதிக்கம் செலுத்தும் . முதலாளித்துவம் அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் , முழு உலகிலும் ஒரே விளைவையே ஏற்படுத்தியுள்ளது .

No comments:

Post a Comment