Wednesday, February 13, 2013

மேற்கின் குட்டையில் ஊறிய எம் மட்டைகள் யார் ?



மேற்கு எனும் குட்டையில் ஊறிய
நமது மட்டைகளே இந்த ஒபெக், O .I .C எல்லாமே !!
இது எதிரிக்கு எண்ணை வார்த்து அந்த குப்ரிய
வண்டிகளில் பல்லாக்கு பவனி வரும்
செல்லாக் காசுகளே !!! ஓ என் முஸ்லீம் உம்மத்தே !
'யகூதிய ' உடும்புகளின் அநீதப் பொந்துகளில்
அரசியல் தஞ்சமாகியிருக்கும் இந்த
வெட்கக் கேடுகளை நீ புரிந்து கொள் .
உன் விடுதலையும் நீதியின் மறு வரவும்
கிலாபாத்தின் உதயத்தில் மாத்திரமே .

    கடந்த வாரம் 57 அரபு நாடுகளின் கூட்டமைப்பான O .I .C அமைப்பின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றது . இந்த தலைவர்களில் நேற்று இவர்களோடு இதே போல் ஒரு மாநாட்டில் கலந்து இன்று பலாத் காரமாக கம்பி எண்ணும் முன்னாள் தலைவர்கள் ,பலாத் காரமாக கபுரில் நுளைவிக்கப் பட்ட முன்னாள் தலைவர்கள் என கூட்டிக் கழித்துப் பார்த்தால் புதிய முகங்கள் , அதே மேற்கின் 'ஸ்பீக்கர்' களாக அமர்ந்து அமர்க்களப் படுத்தினார்கள் . 


       ஒபெக் . மற்றும் இந்த O .I .C போன்ற அமைப்புக்கள் தமது தனித்துவத்தை எடுத்துக் காட்டும் அளவில் இதுவரை சாதித்தது என்ன ? என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் அதற்கான விடையை இஸ்ரேலிய தொழில் நுட்ப உற்பத்தி நிறுவனங்களும் , அமெரிக்க சார் தொழில் நுட்ப உற்பத்தி நிறுவனங்களும் தான் தகுந்த பதிலை தரும் எனும் அளவுக்கு அரபுலகின் அற்புத வளமான பெற்றோலியம் பக்குவமாக பகல் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதும் அடிக்கப் படுவதும் உங்களுக்கு தெரிய வரலாம் .


    அரபுலகிலோ ,அல்லது ஆபிரிக்காவிலோ , அல்லது ஆசியாவிலோ ,உலகின் எப்பகுதி ஆயினும் இத்தகு வளச் சுரண்டலுக்கான பண்ணை அரசியல் தரத்தில் தான் காலனித்துவ அதிகாரங்கள் நவ காலனித்துவ வடிவம் எடுக்கும் போது தேசங்கள் ,தேசியங்கள் என்ற பாகுபாட்டுடன் விட்டுச் சென்றது . இங்கு காலனித்துவ ஏகாதி பத்தியங்களின் எதிர்பார்ப்பு தொடர்ச்சியான மூலப் பொருள் வரவும் , தமது உற்பத்திகளை விற்பனை செய்ய தகுதியான சந்தைகளையும் பேணுவது என்ற அடிப்படையிலேயே சுதந்திரம் என்ற சொல்லாடலை பயன் படுத்தியது .


        உண்மை என்னவென்றால் காலனித்துவத்தின் கீழ் இருந்த எந்தவொரு நாடும் இன்றுவரை தனது கொள்கை ரீதியில் ஒரு ஏகாதிபத்திய வல்லரசை சார்ந்தே வாழவேண்டிய(' ராஜாவுக்கு கூஜா தூக்கும் ' பராக், பராக் ) அரசியல் பொருளாதார வழிமுறையையே பின் பற்றவேண்டி இருந்தது . 'சார்பாக மாறு அல்லது மாற்றப் படுவாய் ' என்ற சண்டித்தன அரசியலின் முன் 'கரணம் தப்பினால் மரணம் ' எனும் 'சர்கஸ் தர கோமாளிகளே எம்மை சூழ உள்ள அரசியல் தலைவர்கள் என்றால் அது மிகையான 
கருத்தல்ல . 



   1990 களின் ஒரு பொழுதுகளில் 'Victor John Ostrovsky என்ற இஸ்ரேலிய மொசாத் உளவுப் பிரிவின் உளவாளி வெளியிட்ட பல்வேறு தகவல்களில் ஓன்று தான் இலங்கை விவகாரம் பற்றியதாகும் . அந்தத் தகவல் இதுதான் . இஸ்ரேலின் ஒரே இராணுவ பயிற்சி முகாமில் இரண்டு வேறுபட்ட பகுதிகளில் இலங்கை கடற்படைக்கும் , விடுதலைப் புலிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட விவரமாகும் . 


       அதன் படி" இஸ்ரேலிய தயாரிப்பான ' டோரா ' எனும் தாக்குதல் படகை எவ்வாறு செலுத்துவது என இலங்கை கடற்படைக்கும் , விடுதலைப் புலிகளுக்கு வேகமாக செல்லும்' டோரா ' படகொன்றை எவ்வாறு குறிவைத்து தாக்குவது" என்றும் பயிற்றுவிக்கப் பட்டதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார் . இங்கு புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் தமது சந்தைக்கான அரசியலை எவ்வாறு பேணுவது ? என்பது தான் முதலாளித்தவத்தின் குறிக்கோள் ஆகும் . இதிலிருந்து உலக நிலவரங்களின் பல விடயங்கள் அரசியல் தரத்தில் யாரின் இலாபத்துக்காக ? என்பது கேட்கப்படவேண்டிய கேள்விதான் . பகையில் , படுகொலைகளில் , அடக்குமுறைகளில் என இன்றைய இலங்கை முதல் கெய்ரோவின் O .I .C மாநாடு வரை ஒரு இடைத்தொடர்பு தெரியும் அதுதான் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஆபத்தான கரங்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை . 






No comments:

Post a Comment