Thursday, December 12, 2013

ஈராக்கில் வலுப்பெறும் “I.S.I.S.( Islamic State of Iraq and Sham)”

  வாஷிங்டன் போஸ்ட் (Washington Post), அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை. 1877-வது ஆண்டு முதல் இது வெளிவந்து கொண்டிருக்கிறது. அண்மைய அதனது முதன்மை செய்தியில் “I.S.I.S.( Islamic State of Iraq and Sham) ஈராக்கின் பல பகுதிகளை அண்மைக் காலத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன், அங்கே இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளது. மேலும் அந்த செய்தியில் “அல்-காயிதாவின் ஈராக்கிய கனவை நனவாக்கும் சக்தியாக I.S.I.S.உருவெடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது. 


     ”உலகம் முழுவதும் சிரியாவில் I.S.I.S.-யின் செயற்பாடு பற்றி உற்று நோக்கிய வேளை, அவர்கள் ஈராக்கில் தங்கள் பாதங்களை நிலைப்படுத்தி விட்டனர். அல்-காயிதாவிற்கும் அவர்களிற்கும் எந்த முரண்பாடும் மோதலும் கிடையாது. எல்லாமே தந்திரமான நாடகமாகும்” என வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

  வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தியினை விடவும் மேலும் பல தகவல்கள் இவர்கள் பற்றி வெளியாகியுள்ளன. 

  சிரியாவில் சண்டையிடும் முக்கிய இராணுவ குழுக்களில் ஒன்று . இது ஈராக்கையும் சிரியாவையும் (அஷ்-ஷாம்) இணைத்து இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. அபூ முஸ்ஸப் அல்-ஷர்க்கவி, அபூ அய்யூப் அல் மஸ்ரி, அபூ உமர் அல் பக்தாதி போன்றவர்களினால் வழி நடாத்தப்பட்ட இந்த அமைப்பினர் தற்போது அபூ பக்ர் அல்-பக்தாதியின் தலைமையில் செயற்பட்டு வருகின்றனர். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய இந்த அணியினர் பின்னர் சிரியாவில் சண்டைகளை ஆரம்பித்தனர். அல்-காயிதாவின் வழி நடாத்தலுடன். ஜபா அல்-நுஸ்ராவின் தலைமையின் கீழ். 

   சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி என்ற கோதாவில் போராடிய இவர்கள் திடீரென ஈராக்-சிரியா இணைந்த இஸ்லாமிய கிலாபா பற்றி அறிவித்தனர். அதனை அல்-காயிதாவின் தலைவர் என அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஷேய்ஹ் அய்மன் அல்-ஸவாஹிரி அவர்கள் விமர்சனம் செய்தார். ஜபாவின் தலைமையின் கீழ் செயற்படுமாறு பணித்தார். அதனை I.S.I.S. யின் தலைவர்கள் வன்மையாக மறுத்தார்கள். தனித்தவமான தங்கள் செயற்பாடு பற்றி அறிவித்தார்கள். 

 “இவர்கள் நூற்றிற்கும் மேற்பட்ட தாக்குதல்களை மிக அண்மை காலத்தில் மேற்கொண்டு 6,000 இற்கும் அதிகமான ஈராக்கிய அரசின் பாதுகாப்பு படையினரை கொன்றுள்ளனர். இதில் அதிகமானவர்கள் ஷியாக்களாவர். அபூ கிரைப் சிறைச்சாலையுடைப்பு இவர்கள் மேற்கொண்ட் மிக முக்கிய தாக்குதல் ஆகும். அது போலவே அண்மையில் நடந்த “கிர்க்குக்” தாக்குதலின் போது I.S.I.S.-யினர் சுமார் 12 மணித்தியாலங்களிற்கு மேல் களத்தில் நிலைபெற்றிருந்தனர்.
அல்-காயிதாவின் ஈராக்கிற்கான பிரிவான I.S.I.S.-யினர் ஈராக்கின் அன்பார் மாகாணத்தின் பாலைவனப் பகுதியில் 40% விகிதமான நிலப்பரப்பை தங்கள் வசம் வைத்துள்ளனர். அன்பார் மாகாணமே சிரிய ஈராக்கிய எல்லையாகும். பலூஜாவை கடந்த இரண்டு மாதகாலமாக தாக்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் இவர்கள். 

  ஈராக்கிய படையினரிடம் ஆயுதங்கள் இருந்த போதும் சண்டையிடும் மனவலு இல்லாமையும், அவர்களது அணிகளிற்கு இடையிலான தொடர்பாடல் வசதிகளில் உள்ள குறைபாடுகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளிற்கு தாக்குதல்களை விரிவுபடுத்தவும், வெற்றிகரமாக மேற்கொள்ளவும் ஏதுவான காரணிகளாக மாறியுள்ளன. 

     பஸரா மற்றும் கூபா தவிர்ந்த ஈராக்கின் பல மாகாணங்களிலும் I.S.I.S.-யின் சினைப்பர் தாக்குதல் அணிகளும், பிஸ்டல் குழுக்களும், ஷஹாதா தாக்குதல் அணிகளும் விரவியுள்ளன. இவர்களை கட்டுப்படுத்துவது என்பது ஈராக்கிய அரசினால் முடியாத சவாலான விடயமாக மாறியுள்ளது. இவர்களின் வெற்றிகளிற்கு பின்னால் ஈராக்கிய பொதுமக்களின் அரசு எதிர்ப்புணர்வும், ஷியாக்களிற்கு எதிரான மனோபாவமும் இருப்பது அடிப்படையாகும். 

    I.S.I.S. சிரியாவிலும் ஈராக்கிலும் ஏககாலத்தில் தங்கள் செயற்பாடுகளை வெகுவாக விஸ்தரித்துள்ளார்கள். இந்த உண்மையைத்தான் வொஷிங்டன் போஸ்ட் செய்தியாக வெளியிட்டுள்ளது.
I.S.I.S. (Islamic State for Iraq and Sham) வெளியிட்ட தாக்குதல் வீடியோ - புதிய வரவு



***


No comments:

Post a Comment