Wednesday, August 7, 2013

கிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?

அகீதாவை நோக்கி அழைப்போம். சரியாகச் சொன்னீர்கள். அகீதா தான் முதல் கட்டப்பணி இது தான் நபி வழியும் கூட.நாம் எடுக்க வேண்டிய முதல் முயற்சியும் இது தான்.

இஸ்லாம் பூரணத்துவமாகிவிட்டது. ஆனால் இஸ்லாத்தின் பூரணத்துவம் ஏட்டில் தான் இன்று இருக்கின்றது.ஏட்டில் இருக்கின்ற சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வழி முறைகளையும் காட்டித் தந்த மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான்.

ஆண்கள் ஐவேளைத் தொழுகையை வீட்டிலும் தொழலாம்.ஏன் பள்ளிவாசல் கட்டி அங்கு இமாமைத் தொடர்ந்து தொழுகின்றோம்? இது தான் நபி வழியில் அமைந்த தொழுகையை நடை முறைப்படுத்திய ஒழுங்கு.இந்த அழகிய நபி வழியை வாழ்வின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு வருவது அவசியமாகும். இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

நாம் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, இறந்ததன் பின் அந்த குழந்தைகளுக்கு எமது சொத்துக்கள் எப்படிப்போய்ச் சேர வேண்டும் என்பதை கடமையாக்கிய மார்க்கம் இஸ்லாம். ஆனால் அந்தக் கடமையைச் செய்வதற்கான ஒழுங்கை கட்டி எழுப்புவது தான் இந்த வாரிசுச் சட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கான நபி வழி. இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

நாம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகிறோம்.எமது சகல கொடுக்கல் வாங்கலும் ஹலாலான முறையில் இருக்க வேண்டும்.வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டம் ஒழிக்கப்பட்டு வட்டியில்லா பொருளாதாரக் கொள்கை நம் வீட்டில் மாத்திரமல்ல.நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஸக்காத் என்ற கடமையை நபிவழியில் நிறை வேற்றவும், நமது நாடுகளில் பரவிக் கிடக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான நீர்,நெருப்பு (சகல விதமான கனிப் பொருட்கள்) ,பயிர் நிலம்; ஆகியவற்றை அடுத்தவர்களுக்குத் தாரை வார்த்து குறிப்பிட்ட சிலர் வயிறு வளர்ப்பதை இல்லாமல ஒழித்து, அவற்றை சரியாக பாதுகாத்து, அதலிருந்து பயன் பெறுவதற்கான வசதிகளைச் செய்வது என இஸ்லாம் பணிக்கும் பொருளாதாரத் திட்டத்தை நடை முறைப் படுத்துவதும் நபி வழியாகும். இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

எமது உயிர் மானம் உடைமை ஆகியவற்றைக் காப்பது கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக போராட்டம் செய்வதை எமது மார்க்கம் எமக்கு விதித்துள்ளது.இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் ஏக தலைவர் எமக்கென்று என்றும் இருந்தே வந்தார். எம்மைப் பாதுகாப்பதோடு, இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் பணியையும் அவர் செய்தார். இது தான் நபி வழியிலான அரசியல் ஒழுங்கு. இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

எப்படி பள்ளிவாசலைக் கட்டி இமாமை நியமித்து அவரைப் பின்பற்றித் தொழுகின்றோமோ அது போல் தான் இதுவும்.அகீதாவுக்கு அழைப்பது தான் முக்கியம், பள்ளிவாசலையும் இமாமையும் அவரைப பின்பற்றுவதையும் பற்றிப் பேசுவதில் என்ன பலன்? என்று நான் கூற மாட்டேன்.நீங்களும் கூறமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன்.

எமது ஊரில் பலருக்கும் எழுத வாசிக்கத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் டாக்டராக சிலர் வரவேண்டும் என்று முயற்சிக்காமல் இருப்பதா? இப்படி இருப்பது உலக நடை முறையைத் தெறியாததாலும் இஸ்லாம் என்ற அழகிய மார்க்கத்தின் இயல்பைப் புரியாததாலும் மாத்திரமே நிகழ முடியும்.உங்கள் குடும்பத்திலேயே எத்தனை படிப்பாளிகள் உருவாகி விட்டார்கள் என்பது உங்களுக்குத் தான் நன்கு தெரியும். டாக்டராக்க வேண்டும் என்ற சிந்தனையும், அதற்கான முயற்சிகளும், தியாகங்களும் இன்றி யார் டாக்டர் ஆனார் என்று சொல்ல முடியுமா?

குர்ஆன் ஹதீஸின் படி அமைந்த இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டம் ஏட்டிலேயே இருக்கட்டும் என்று எந்த முஸ்லிமும் ஆசை வைக்க மாட்டான். இந்த வாழ்க்கைத் திட்டத்தை எப்படி நபிகளார் நடை முறைப்படுத்தினார்கள் என்பதை அறிவதற்கு முயற்சி செய்வான். நல் வழி நடந்த நம் முன்னோர் செய்ததும் சொன்னதும் எம்மில் இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் கூறக் கூடிய கருத்துக்களைவிட சிறந்தது என்பதைக் கண்டு கொள்வான். இந்தக் கருத்து நபிகளாரின் கருத்தாகும். இதைக் கூட ஏற்காத நம்மவர்கள் நாம் சொல்வதையா கேட்கப் போகிறார்கள்..

கிலாபத் பற்றி ஏன் இப்போது பேசுகிறோம் என்றால் இமாமைப் பின் தொடர்ந்து தொழுவது நபி வழி என்பதை எப்படி விளங்கிக் கொண்டோமோ அவ்வாறே கலீபாவின் பின்னால் இருந்து இஸ்லாத்தை அதன் மொத்த உருவில் நடை முறைப்படுத்த அவருக்குத் துணையாக இருப்பதும் இஸ்லாத்தின் ஜோதியை அழைப்புப் பணி அறப் போர் என்ற அடிப்படையில் உலகெங்கும் அவர் எடுத்துச் செல்லும் போது, வெற்றியை அல்லது வீர மரணத்தை அடைவதும் நபி வழி என்பதை நம்புகின்றோம். அதனால் தான் கிலாபாவைபப் பற்றி இன்றே சிந்திக்கிறோம், பேசுகிறோம், அதன் பால் அழைக்கிறோம்.

கிலாபத் சிந்தனையை ஏற்க மறுப்பது இஸ்லாம் பூரணத்துவமாக நடை முறைப்படுத்தப் படுவதற்கான ஒழுங்கை மறுப்பதாகும். இஸ்லாம் முஸ்லிம்ம்களாலேயே தவறாகப் புரியப்பட்டு விட்டதற்கு இது சிறந்த சான்றாகும்.

சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!

ஆக்கம்:அபூ அய்யூப் முஹம்மது

No comments:

Post a Comment