Friday, March 28, 2014

விலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ஒரு சுதந்திரப் போராளி .

                                                                                       
(குப்ரிய சிந்தனா வாத போராட்டத்தில் தன்னை இணைத்து தவறு புரிந்தபோது ,மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீமின் உண்மைக் கதை .இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)

     நான் சொல்லப்போவது அல்லாமா இக்பாலை பற்றியது அல்லதான் ஆனால் இந்த சமூகத்தினதும் மனித நேயத்தினதும் உணர்வுகளின் பங்காளிகளாய் மாறி சரியானதை தேடி பிழையான வழிமுறை மூலம் தனது உயிரை அர்ப்பணிக்க களமிறங்கிய ஒரு இளைஞனை பற்றியதே . சமூக நேசமும் ,நியாயத்தின் தேடலும் இவனிடம் இருந்தது என்பதை என்னால் கூறமுடியுமே தவிர இறைவனிடத்தில் இவனின் நிலை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது .

        நாங்கள் இருவரும் 1980 களின் சூடு பிடித்த இனவாத யுத்தத்தின் வெப்பத்தில் ஒரே மஸ்ஜிதில் தொழுதவர்கள் .எங்களது எதிர்காலப் பாதைகளை பற்றி புரியாமலே நட்புறவாடியவர்கள். இலங்கையின் வடக்கில்
யாழ் நகரில் தான் எமது வசிப்பிடம் . கொலை வெறியோடு துப்பாக்கி கலாச்சாரத்தின் முன் தமிழ் இளைஞ்சர்கள் தஞ்சமடையத் தொடங்கிய அந்த கருப்பு யூலை 1983 இல் இருந்துதான் நான் சொல்லும் அந்த இக்பால் எனும் இளைஞ்சனில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின .

        நேற்று கண்டு கதைத்தவர்கள் வயது வித்தியாசம் இன்றி இன்று பிணமானதை இவன் கண்டான் . ஒவ்வொரு தமிழனின் சாவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பயங்கர வாதியாக பட்டமளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு ஒரு சிறந்த பெருபேற்றுடன் உயர் தரம் படிக்க யாழ் இந்துக் கல்லூரியை தேர்ந்தெடுத்தும் இருந்தான் . அவனது மாற்றங்களுக்கான வாயில் கதவு இங்கேதான் திறக்கப்பட்டது .

      உயர் தரம் படிக்க பாடசாலை சென்ற சில மாதங்களிலேயே அவனில் பல மாற்றங்கள் . ஒருமுறை என்னை "வா ஒரு படம் பார்ப்போம் " என யாழ் நகரில் இருந்த 'ரீகல் தியடரை' நோக்கி அழைத்துச் சென்றான் . அது யாழ் கோட்டை ஸ்ரீ லங்கா இராணுவ முகாம் இருந்தபகுதி ; இராணுவ கெடுபிடி மிக்க காவலரண்கள் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் தான் 'ரீகல் தியடரும் ' அமைந்திருந்தது . எனக்கோ உள்ளூர பயம் . அவனிடமும் சொன்னேன் சிரித்தவாறே ஒரு பதிலை சொன்னான் "சாவைப் பற்றி பயந்தால் சரித்திரம் படைக்க முடியாது " இந்த வார்த்தையின் ஆழத்தை என்னால் உணர முடிந்தது. அது அவன் பழைய இக்பால் இல்லை என்பதே .

        அன்று நாங்கள் பார்த்த படம் ' THE DOG'S OF WAR ' கிறேநேடா என்ற அமெரிக்க கண்டத்தின் கருப்பினர்கள் வாழும் ஒரு தீவை அமெரிக்க இராணுவம் அவர்களுக்கு சார்பில்லாத ஆட்சி இருந்த காரணத்தினால் பென்டகனின் கட்டளையின் பேரில் ஆக்கிரமித்து அமெரிக்க அடி வருடிகளை ஆட்சி ஏற்றி விட்டு செல்வதே அந்தக் கதை. ஒரு உண்மையை 'ஹோலி வூட் ' அமெரிக்க நியாயத்தோடு காட்டியது .

        படம் முடிந்து திரும்பும் போது அந்த படத்தை பற்றி கருத்துப் பரிமாறினோம் . இக்பால் கூறினான் "ஒவ்வொரு அரச பயங்கர வாதமும் தமது மீடியாக்களை தமது செயல்களுக்கான நியாயத்துக்காகவே வைத்திருக்கின்றன" அதற்கு உதாரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன் மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்பிய தனது சக மாணவ தோழன் சுட்டுக் கொல்லப்பட்டதை இலங்கையின் மீடியாக்கள் ஒரு பயங்கர வாதி இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப்பட்டான் ; என்று காட்டியதை கூறினான் .

        அவனது மாற்றங்கள் அவனது வீட்டிலும் தெரிய ஆரம்பித்ததால் மஸ்ஜித் கதீபை அவனோடு பேச வைக்க முடிவு செய்தார்கள் . நிகழ்வும் நடந்தது நானும் அருகில் இருந்தேன் கதீபின் அறிவுரைகளை மௌனமாக கேட்டுக்கொண்டிருந்த அவன் கேட்ட முதல் கேள்வி "அநீதிக் கெதிரான இஸ்லாத்தின் தீர்வென்ன ? " "அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் " இது கதீப் ! " அப்படியானால் அது ஓமர் முக்தாருக்கு அது தெரியாதா? " கதீப் வாயடைத்துப் போனார் . இவனுக்கு இஸ்லாம் தெரியாது தான் அனால் ஓமர் முக்தார் பற்றி தெரிந்திருந்தது. ஜிஹாத் பற்றி தெரியாது ஆனால் அபூ ஜிஹாத் பற்றியும் அல் பதாஹ் பற்றியும் நன்றாகவே தெரிந்திருந்தது .

         1984 களின் தொடக்கத்தில் திடீரென காணாமல் போய் விட்டான் . வீட்டில் ஒரு கடிதம் மட்டும் இருந்தது . அதில் உணர்வுகளை அவன் பிழிந்து எழுதி இருந்தான் சுருக்கமாக "பேரினவாத காட்டு மிராண்டித்தனத்தில் இருந்து உங்களுக்காக விடுதலை வேண்டி செல்கிறேன் " என்று இறுதியாக முடிக்கப்பட்டிருந்தது . அதன் பின்னால் சில கடிதங்கள் மட்டும் அவனது வீட்டாருக்கு வருவதாக சொன்னார்கள் . ஒருமுறை அவனது தந்தை என்னை காண வந்திருந்தார் . அவரது கையில் ஒரு கடிதம் அது இக்பால் எனக்கு அனுப்பியிருப்பதாக அவர் தந்து விட்டுச்சென்றார் .எனக்கு உள்ளூர ஒரு சந்தோசம் என்னை அவன் இன்னும் மறக்கவில்லை என்பதே .

        கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன் அதில் எனக்கான சில அறிவுரைகள் தரப்பட்டிருந்தன .ஒரு ஆழமான அனுபவம் அதில் பேசியது . நேற்று இனவாதம் என ஒற்றையில் பேசியவன் , இனவாதங்கள் என பன்மையில் எழுதியிருந்தான் . விடுதலை அந்நிய சக்திகளிடம் விலை பேசப்பட்டு இப்போது தீர்க்கமாக மக்களை பலி எடுக்கும் பல்வேறு கூலிப் படைகள் தான் உன்னைச் சூழ உள்ளனர் . என்ற அதில் இருந்த வரிகள் அப்போது என்னால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாதிருந்தது ; இக்கடிதம் கிடைத்தது 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்த காலப் பகுதியில் ஆகும் . அதில் இறுதி வரிகள் "சரியானதை சரியாகத் தேடு பிழையாக மாட்டி விடாதே " .

          பின் 1987 இல் அந்த ஒக்டோபர் யுத்தம் தொடங்கியது இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அது நடந்தது . நிறையவே இழப்புக்களையும் சோதனைகளையும் தமிழ் பேசும் (தமிழ் ,முஸ்லீம் ) மக்களாகிய நாம் அனுபவித்தோம் .அப்போது இக்பாலின் அந்த கடித வரிகளில் சில ஞாபகம் வந்தது அதில் "வங்கம் தந்த பாடம்" என்ற இந்திய இராணுவ 'பயோ டேட்டா' புரிய ஆரம்பித்தது . அத்தோடு அந்நிய சக்திகளின்
கூலிப்படை என்ற வாசகங்களும் புரிய ஆரம்பித்தது .

      யுத்தம் சற்று ஓய்ந்த 1987 இன் டிசம்பர் காலப்பகுதியில் தான் அந்த செய்தி கிடைத்தது . தகவலை உறுதிப்படுத்த அவனது தாயும் தந்தையும் வன்னிக்கு சென்றனர் .தகவல் உறுதிப்படுத்தப்பட்டது . இக்பால் கொல்லப்பட்டு விட்டான் எனும் தகவலே அது . உள்ளத்தின் குமுறலில் வார்த்தைகள் விம்ம கண்ணீர் துளிகள் எனக்கு பீறிடத் தொடங்கியது . உள்ளூர ஒரு சந்தோசம் விலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ஒரு சுதந்திரப் போராளி என்பதே அது .

No comments:

Post a Comment