Thursday, September 19, 2013

ரத்த சகதியில் மலர்ந்த தேசியம் !

  ( இது ஒரு உருவகக் கதை ,ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட யதார்த்தத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி நிற்கிறது . இரண்டு இனவாதங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் உம்மா பற்றிய பார்வை குறைந்த பட்ச மனிதத் தன்மைகளோடு அணுக அவர்களது இனவாத இலட்சியம் இடம் கொடுக்கவில்லை அத்தகு மிருகங்களில் ஒரு பிரிவை பற்றிய காலம் பிந்திய அறிமுகமே இது  )
                                                                                                                      - அபூ ருக்சான் 

                                                         

“துப்பாக்கி குழல்களில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது”  (மா-வோ) எனும் கம்யூனிஸ கோட்பாட்டை முதலாளித்து சிந்தனை கொண்ட விடுதலை இயக்கங்களின் தலைமைகள் தங்களின் இயக்க கோட்பாடாக கொண்டிருப்பது வேடிக்கையைானது. “துப்பாக்கி குழல்களில் இருந்து புறப்படும் ஒவ்வொரு குண்டிற்கும் அரசியல் தெளிவு இருக்க வேண்டும்” (லெனின்) என்ற இன்னொரு கோட்பாட்டை முதலாளித்துவ சார்பு விடுதலை இயக்க தலைமைகள் மட்டுமல்ல சோசலிச சார்பு விடுதலை இயக்க தலைமைகளும் கூட மனமுரண்டாக நிராகரிக்கின்றன. இது தான் இயக்கபாங்கு. இந்த புரிதலுடன் தொடர்ந்து வாசிப்போம். 


காத்தான்குடியை கொளுத்து - சரி அண்ணே
எல்லா சோனகரையும் துரத்து - சரி அண்ணே
மக்காவுக்கு போட்டு வந்தவனை ஒரேடியாய் மக்காவுக்கு அனுப்பு - சரி அண்ணே
தொழும் நேரம் பள்ளிவாசலில் வைத்து போடு. வெட்டிக் கொல் - சரி அண்ணே

எல்லா பதில்களும் மாவட்ட தளபதிக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கும்

நம் மொழி தமிழ். நாம் தமிழர்கள் - ஆமாம் அண்ணே
அவன் மொழி தமிழ். ஆனால் சோனவன் - ஆமாம் அண்ணே
நம் சாமி பிள்ளையார். அவன் சாமி அது அல்ல - ஆமாம் அண்ணே
நாம் போராடுகிறோம். சோனகன் அதனை காட்டிக்கொடுக்கிறான் - ஆமாம் அண்ணே

முட்டாளாய் இருப்பதில் நிறைய சொகரியங்கள் இருக்கின்றன. எதற்குமே நம்மிடமிருந்து பதில் சொல்ல தேவையில்லை. தலைமை சொல்வதை செய்தால் மட்டும் போதும். கொல் என்றால் கொல்ல வேண்டும். கொளுத்தென்றால் கொளுத்த வேண்டும். அவ்வளவுதான். 

எனது கொப்பர் எனக்கு வைத்த பெயர் சுதாகரன். கொம்மா சுதா என்றே கூப்பிடுவா. இயக்கப்பெயர் ராஜன். யாழ்ப்பாணத்தில் வன் சொட் ராஜன் என மாமா கூப்பிடுவார் முன்பு. மட்டக்களப்பில் பொட்டு ராஜன். பொட்டு என்றால் சோனியில் தலையில் நான் இறக்கும் ரவுன்ட்ஸ்களினால் வந்த வினைப்பெயர். 

நான் படுபாதக தவறு செய்வது எனக்கு புரிகிறது. எனது மரணம் அகால மரணம் என்பதும் தெளிவாக தெரிகிறது. இருள் சூழ்ந்த கிணற்றடியில் என் மூளையை சொறி நாய் ஒன்று நக்குவது போன்ற பிரமை. போராட்டத்தின் இறுதி கண நினைவுகளாக கூட இது எனக்கு இருக்கலாம். 

போராட்டம் என்ற பெயரில் செய்த கொலைகள், சித்திரவதைகள்,  கொள்ளைகள், சொத்தழிப்புக்கள்.. நினைக்கவே வெறுப்பாய் இருந்தது. சோனவனின் வயலிற்கு தீ வைப்பது. அவன் மாடுகளை வெட்டி சாய்ப்பது. அவர்களின் ட்ரக்டர்களை, லொறிகளை கடத்துவது. போக்கடியில் வைத்து அவர்களை கண்ட துண்டமாய் வெட்டுவது, கூலி வேலைக்கு வரும் சோனிகளை பெற்றோலை ஊற்றி கொளுத்துவது. செய்த சிலதே ஞாபகம் வந்தது. பலது மறந்து போனது. 

எனது தகப்பன் ஒரு சோனக வீட்டிலேயே மில்லில் வேலை செய்தவர். அவர்கள் தந்த சோறு, மாட்டிறச்சி கறி என்பனவே இன்று எனது ஏ.கே.யின் ஹுக்கை லோட் செய்ய என் கரங்களிற்கு பலம் தந்தவை. தோளில் இருந்து சீறிச்செல்லும் ஆர்.பி.ஜீ. ரொக்கெட் லோஞ்சரின் பெக் பயரை கூட தாங்கும் தோள்கள். இது சோனி போட்ட தீனியினால் தான் நிகழ்ந்தது. நினைக்க அருவருப்பாய் இருந்தது. சோனியின் தீனியை தின்றோமே என்ற அருவருப்பை விட சோறு போட்டவனை வேரறுத்தோமே என்ற அருவருப்பு மிகைத்து நின்றது. 

மனது களைத்துப் போனது. கண்ணை சில நிமிடம் மூடினால் மீண்டும் எனது சிதறடிக்கப்பட்ட மூளை. அதே சொறி நாய். நிம்மதி என்பது கிடைக்காத ஈழம் போல தூரமாகிப்போனது. 

ஒரு வாரம் கழித்து முகாம் திரும்பினேன். பொருப்பாளர் வாசலில் வைத்தே விசாரணையை ஆரம்பித்தார். 
“எங்க போனனீர். ஒரு கிழமையா தகவல் இல்லை”
‘மனசு சரியில்லை. வீட்டில் நின்ட நான்‘
“போராளிக்கு மனசு என்று ஒன்டு இல்லை. தெரியும் தானே. வேதாரண்யத்தில் இருந்து வண்யேறேக்கேயே அதை சவுக்குத்தோட்டத்தில் புதைச்சு போட்டு தானே வந்தனீர். பிறகென்ன மனசு?” பொருப்பாளர் தத்துவம் பேசினார்.

பிறகு சொன்னார். யாழ்ப்பாணத்தில் இருந்து தகவல் வந்தது. நம்மட வேலையில் திருப்தி இல்லையாம். கொஞ்சம் பாஸ்டாய் வேலை செய்ய வேண்டுமாம். அதனால் நாம் சோனியை அம்புஸ் பண்ண வேண்டும் என்றார். எனக்கு புரியவில்லை. அவரை பார்த்து கேட்டேன் ..

“அண்ண... ஈழ போராட்டத்தின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களை கொல்வதற்கும் என்ன தொடர்பு”
அண்ணைக்கு கோபம் வந்து விட்டது.
‘நீ என்ன சோனவத்தியை லவ் கிவ் பண்றியே?‘. அவர் மட்டத்தில் அவர் புத்தி வேலை செய்தது. இல்லை என்றேன். 

“பின்ன என்ன மசிருக்கு காக்காவின் குன்டி கழுவுகிறாய்”. நக்கலாய் கேட்டார் பொருப்பாளர். 

பிறகு என்னருகில் வந்து என் முதுகை வருடியவாறு சொன்னார். நான் எப்படி பொருள்பாளராக மாறினேன் தெரியுமா என்று. அவரே பதிலையும் சொன்னார். சவளக்கடையில் சிங்கள இராணுவம் தமிழர்களை சுட்டதற்கு பதிலாக நான் காங்கேயன் ஓடையில் வைத்து 20 சோனியை தட்டினேன். அரசியல் பிரிவில் இருந்த என்னை இராணுவ பிரிவிற்கம் பொதுாவாக பொருப்பாளராக்கியது தலைமை. இது போல் நீயும் செய்ய வேண்டும். மேலும் சொன்னார்..

“ சோனியை போடுர போட்டில் யாழ்ப்பாணத்திற்கு நியூஸ் போக வேண்டும். புரியுதே”.சரி என்றேன். 

யாழ்ப்பாணத்தில் இருந்து உளவுத்துறை பொருப்பாளர்கள் இருவர் வந்துள்ளனர். வா அவர்களுடன் பேசுவோம் என்று அழைத்து சென்றார். இருவர் ஒரு அறையில் இருந்தனர். கண்களில் குரோதமும் வாயில் சிரிப்புமாக என் கைகளை குலுக்கினர். பெயர் என்ன என்றார் அவர்களில் ஒருவர்.

“ராஜன். பொட்டு ராஜன் என்றென்“.

“இவர் தான் மன்னார் பள்ளிவாசலில்........ பொருப்பாளர் சுந்தரம் மாஸ்டர் முன்னையவரை அறிமுகம் செய்தார். அவர்களிற்கும் என்னை பற்றிய விபரங்கள் தெரிந்து தான் இருந்தது. மற்றவர் என்னை நோக்கி நீங்கள் தானே அம்பிளாந்துறை சந்தியில் வைத்து மக்காவுக்கு போன மௌலவிமாரை...... இழுத்தார் இதமாக. நான் வெட்கத்துடன் தலை குனிந்தேன். 

மற்றையவரையும் சுந்தரம் மாஸ்டர் அறிமுகம் செய்து வைத்தார். 

இவர் தான் கந்தன் கருணை அட்டாக் செய்ததிலில் மெயின் ஆள். விசாரண பிரிவு பொருப்பாளர். ஆளை தட்டிப்போட்டு பொடியை சித்திரவதை செய்து விசாரிப்பதில் கை தேர்ந்தவர். பொருப்பாளர் பைத்தியக்காரன் போல் பிதற்றிக்கொண்டிருந்தார். அதனை அந்த யாழ்ப்பாணத்து உளவுப்பிரிவுகள் ரசித்துக் கொண்டிருந்தன. 

“உங்கள் அடக்கத்தை நினைக்க சந்தோசமாக இருக்கிறது. சோனியின் தலைகளை கொய்த ஒரு வீரப்போராளி நீங்கள். ஆனால் தலைகுனிந்து பவ்வியமாக நிற்கிறீர்கள். வெரிகுட்” என்றார் மற்றையவர். 

“காத்தான்குடியில் அமைக்க வேண்டும்”. முன்னவர் இறுக்கமாக சொன்னார்.

“எதற்காக” என்றேன் வினயமாக. 

“உமக்கு விசரே. காக்காவை தட்ட காரணம் தேவையே. காக்காவின் ரத்தம் தான் ஈழ விடுதலையின் உரம்”. மீண்டும் புரியாத பாசிச தத்துவம் பேசினார் யாழ் விசாரணை பிரிவு பொருப்பாளர். 

“ஏன். அவையள் என்ன செய்தவை என்றேன் சற்று கோபமாக”. 

இரண்டு யாழ்ப்பாண பொருப்பாளர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் ஒருவர் சொன்னார் “அவையள் காட்டி கொடுக்கினம் போராட்டத்தை. அதான் யாழ்ப்பாணத்தில் அவர்களை துரத்தியடிச்சம். அத ஒரு வித்தியாசமான அனுபவம் என்றார் அவர். 

“ஏன் எங்கட சனமும் தான் காட்டி கொடுக்கினம். அதற்காக முழு யாழ்ப்பாணத்தானையும் அனுப்புவியலோ?” சூடாக திருப்பி கேட்டேன். 

“அதான் எங்கட தமிழ் துரோகிகளை தட்டிட்டம் தானே”. அரசு, போயா.. என பெயர் சொல்ல ஆரம்பித்தார் பொருப்பாளர். 

பின்னர் மீண்டும் சொன்னேன். 

“அப்படியென்டால் காக்காமாரிலும் காட்டிகொடுத்தவைனை மட்டும் தட்டலாம் தானே”. 

இப்போது அவர்களிற்கு கோவம் வந்து விட்டது. கந்தன் கருணை இறுக்கமான குரலில் சொன்னார் உமக்கு சத்திய பிரமானணம் ஞாபகம் இல்லையே. இப்படி கதைப்பது தமிழீழத்திற்கு செய்கிற துரோகம் என அண்ணைக்கு ரிப்போட் பண்ணுவம்” வொர்னிங் பண்ணினார் பனங்கொட்டை.

சத்தியபிரமாணம் என்றதுமே என் மூளை விறைத்தது. இதயம் இரும்பானது. எனக்குள் இருந்த, இயக்கத்தால் உரமூட்டி வளர்க்கப்பட்ட அந்த மிருகம் விழித்துக்கொண்டது. மீண்டும் நான் மனிதம் தொலைத்து அந்த மிருகமாக மாறினேன். 

என் ஈ...............
தேசத்துக்காகவும்.......................
........................ தேசிய
........................ உயிரையும் ..................
......................... விடுதலை வேள்வியில் 
......................... என்னை நானே...................
......................... உயிராயுதம் ......................
......................... தாகம் ........................தாயகம்

சத்தியபிரமாணம் என்னை இயங்க வைத்தது. மூளை வியூகம் வகுக்க ஆரம்பித்தது.மண்டையில் காத்தான்குடியின் வரைபடம் விரிந்தது. அதில் பள்ளிவாசல் தெரிந்தது. தொழுகை நேரம் புரிந்தது. கைகள் ஏ.கே. யை அணைத்தன. மகசீனுடன் இன்னொரு மகசீனை வைத்து பக்கிங் பண்ணும் சலோடேப்பால் இறுக வரிந்து ஒட்ட ஆரம்பித்தேன். 

ஜசாக்கல்லாஹ் ...கைபர் தளம் 

No comments:

Post a Comment