Friday, September 27, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 03)





'சோனி' ,காக்கா , முக்கால் , தொப்பி பிரட்டி ,என்ற காரண இடுகுறிப் பெயர்களால் அனேகமாக வடபகுதி தமிழர்களால் அழைக்கப்படும் முஸ்லீம்கள் அந்த 1990 அக்டோபர் மாதம் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக விடுதலைப் புலிகளால் விரட்டப் பட்டனர் .

         இந்த இனத்துடைப்புக்கு புலிகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை காரணம் சொன்னார்கள் .முஸ்லீம்கள் துரோகிகள் ! காட்டிக் கொடுத்தார்கள் என்றார்கள் ! இந்தக் காரணங்கள் எனக்கு சரியானதாக புரியவில்லை . ஏதோ ஒன்று இடித்தது ?



              வட தமிழ் ஈழ எல்லையையும் தென் தமிழ் ஈழ எல்லையையும் பற்றி புரியாமல் , மகசீன் , கொகிங்காண்டில் , பிஸ்டல் கிரிப் , ரிகர் ,எ ய் மின்மர் , பரல் என்ற எல்லைக்குள் நின்று கிளஸ் நிகோ ரைபிளை ஏதோ ஈழம் பெற்றுத்தரும் 'டூளாக' நம்பிக் கொண்டிருக்கும் அவர்களது போராளிக்கே தெரியாத விடயம் அது . எனக்கும் என் சமூகத்துக்கும் மட்டும் எப்படித் தெரியும் !?


ஆழ்ந்த சிந்தனையோடு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப பொழுதுகளை ,அதாவது விடுதலைப் புலிகளின் பாசையில் சொன்னால் முதலாம் கட்ட ஈழப் போருக்குள் நுழைந்தேன் ....


     'தந்தனத்தோம் என்று சொல்லியே ... ' என்று ஆரம்பிக்கும் வில்லுப்பாட்டு அனேகமாக எல்லோருக்கும் தெரியும் . விடுதலைப் புலிகளும் ஒரு வில்லுப்பாட்டு ஒலி நாடாவை 1980களில் வெளியிட்டனர் .புராணங்களையும் ,இதிகாசங்களையும் ,ஆன்மீக விளக்கங்களையும் வில்லுப்பாட்டாக கேட்ட தமிழ் மக்களுக்கு இந்த புலிகளின் வில்லுப்பாட்டு சுவையாகவும் ,வித்தியாசமாகவும் இருந்தது .


              தமிழ் ஈழம் சம்பந்தமாக சிந்தாந்த விளக்கம் அதில் இருக்கவில்லை . தாக்குதல் , வெறியூட்டல் சம்பந்தமாகவே அந்த அழைப்பு இருந்தது .இலங்கை இராணுவத்தின் மிக கீழ்த்தரமான வன்முறைகள் இத்தகு கள நிலவரத்தை விரும்பும் நிலையில் தமிழ் மக்களை ஆக்கியிருந்தது .


               அந்த வில்லுப்பாட்டில் இருந்து வரும் ஒரு கட்டம் இப்படி இருந்தது .புலிகளின் ஒரு கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தை அது இவ்வாறு சொன்னது ..." பிரிகேடியர் ஆரிய பெருமா ஆருயிர் என்று அறியாத நிலையில் வாகனத்தோடு பதினைந்து அடி உயரம் வரை எழுந்து கீழே விழுந்து மாண்டு போனார் " என்ற வசன வரிகள் தமிழ் மக்களை புல்லறிக்க வைத்தது. 


             ஒரு சிங்கள இராணுவ பிரிகேடியரை சிதற அடிக்கும் தரத்தில் பொடியன் மார் வந்துள்ளனர்! என்ற பெருமிதம் மறுபக்கத்தில் இலங்கை அரசு' பபலோ' கவச வாகனங்களை கொள்வனவு செய்ய தென்னாபிரிக்காவோடு 
 ஒப்பந்தம் போடப்போகும் யுத்த அரசியல் பற்றி உணர மறுத்தது .இத்தகு பிரச்சார உத்திகளை கொண்டு ஆதரவு ,மற்றும் நிதி தேடும் பலத்த போட்டி அப்போது நிலவியது .


         LTTE,TELO,PLOT,EPRLF, EROS, TELA, போன்ற பல இயக்கங்கள் இருந்த அந்த காலப்பகுதியில் TELO 
இயக்கம் பல படிகள் முன்னேறி சாவகச்சேரி போலீஸ் விசேட அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலை வீடியோ பிரதியாக வெளியிட்டது .



         ஆங்கில சினிமாவில் மட்டுமே யுத்தம் பார்த்த தமிழர்களுக்கு அதில் வரும் கதாநாயகர்கள் போல் போராளிகள் மாறிக்கொண்டிருந்தனர் . ஆனால் தாம் 'இரத்தக் காட்டேரிகளை , வளர்க்கிறோம் என்பது புரிய வெகுகாலம் எடுக்கவில்லை .


     இந்த சூடான இரத்தத்தில் இலாப அறுவடைகளை ஏகாதிபத்திய முதலாளித்துவம் பக்குவமாக பெற்று வந்தது .எப்படி ? இந்த 
 ஈழத்தின் பெயரில் எழுந்த யுத்த பிரபுத்துவ சாம்ராஜியத்தில் முஸ்லீம் மட்டும் இவர்கள் குறிவைத்துப் பழகும் சராசரி இலக்காக எப்படி
 மாறினான் ! ?
அடுத்த பதிவில் 
இன்ஷா 
அல்லாஹ் 
சொல்கிறேன் . 
                                                                                                               (இன்னும் வளரும் ...)

No comments:

Post a Comment