Thursday, December 12, 2013

இஸ்லாமிய இலட்சியவாத தியாகத்தில் எம் முன்னோர்களும் நாமும் !!!


''நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று மட்டும் கூறுவதனால் விட்டுவிடப்படுவார்கள் ; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக்கொண்டார்களா ,என்ன ? உண்மையில் இவர்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம் .அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது ;உண்மையாளர்கள் யார் ,பொய்யானவர்கள் யார் என்பதை ! (29:2,3)


"இப்பொழுது நீங்கள் எந்தநிலையில் இருக்கின்றீர்களோ ,அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கயானவர்களை ஒருபோதும் வைத்திருக்கமாட்டான் .தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். "    (3:179)

"உங்களில் (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்தவர்கள் யார், இன்னும் அல்லாஹ்வையும் , அவனுடைய தூதரையும் , இறைநம்பிக்கயாளர்களையும் விடுத்து வேரெவரையும் அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என அல்லாஹ் இன்னும் வேறுபடுத்தி அறிந்திடாத நிலையில் நீங்கள் வெறுமனே விடப்பட்டு விடுவீர்கள் என்று நினைத்துகொண்டீர்களா ? நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ்  நன்கு தெரிந்தே இருக்கிறான் "      (9:16)  

         இலட்சியக் கனவுகளின் தூரத்தை கடக்கத் துடிக்கும் யதார்த்த நகர்வுகள் , சோதனை முட்படுக்கையில் நிர்ப்பந்த வலிகளோடு ஓய்வெடுக்கும் அசாதாரணப் பொழுதுகள் ஏராளம் தாராளம் . அதில் சிலபோது விரக்தியால் சிலர் ஆரத் தழுவப் படுவது போராட்டத்தின் நியதி !அது மெளனங்களை உடைத்த வார்த்தைகளாக கப்பாப் பின் அர்த் (ரலி) அவர்களின் வேண்டுதலாக அன்றைய மக்கா சூழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முன்வைக்கப்படுகின்றது .  

    "இந்த சூழ்நிலையை   மாற்ற  எங்களுக்காக அல்லாஹ்விடம்  பிரார்த்திக்க கூடாதா ?" என்ற ஏக்கம் கலந்த கோரிக்கையில் குறைஷிக் காபிர்களின் கொடூரங்கள் மிகத் தெளிவாகவே பளிச்சிட்டுநின்றன . இஸ்லாம் எனும் இலட்சியத்தை பேசியதற்காக மட்டும் அந்த  சிறுபான்மை  உம்மத்  மரண வலி வரை   இழுத்து வரப்பட்டிருந்தார்கள்  !?விழுப்புண்களை அவர்களது உடல்கள் தாரளமாகவே சந்தித்திருந்தன ! ஏளனப்பெச்சுக்கள் அவமதிப்புக்கள்  அங்கு அன்றாட சராசரி  நிகழ்வாக மாறிப்போய் இருந்தது .

    தங்களுக்கு சுவர்க்கம் உண்டு என்ற ஒரே ஒரு நம்பிக்கையை தவிர வேறு உத்தரவாதம் அவர்களுக்கு இருக்கவில்லை .இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் குரைசிக் காபீர்களுக்கு விசித்திரமாகவும் ,விநோதமாகவும் தோன்றியது . அவர்களது நிகழ்கால வாழ்வை கேள்விக்குறியாக்கி ஒரு புதிய வாழ்வுத் தளம் பற்றிய எத்ர்வு கூறலை அடித்துச் சொன்னது, அந்த முஹம்மதின் (ஸல் ) விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த சிறு தொகை சமூகம் !ஆட்கள் தொகையால் குறைவாக இருந்த போதும் குப்ர் எனும் மாற்று சித்தாந்த முகாமை இஸ்லாம் எனும் சித்தாந்தத்தால் துல்லியமாகவே குறிவைத்திருந்தது அந்த முஸ்லீம் உம்மாஹ் !


     கண் பார்வை தெரியாத ஒரு முஸ்லீம் கூட தனது சித்தாந்தப் பார்வையால் ஏளனப்படுத்தி அந்த குப்ரிய சித்தாந்தத்தை பார்க்கிறான் ! வெகுண்டு எழுந்தார்கள் குப்ரிய குலத் தலைவர்கள் ! அற்பப் பதர்களாய் எம் பாதணி துடைத்தவர்கள் நெஞ்சை நிமிர்த்தி எமது வாழ்வியல் மீது கேள்வி எழுப்புவதா !? என என்னும் அளவுக்கு  ஒவ்வொரு குப்ரிய தலைவனின் தன்மானத்தோடும் அந்த இஸ்லாத்தின் இலட்சிய வீரர்கள் போர் தொடுத்து இருந்தார்கள் . 

         கொதிக்கும் சுடு மணலில் கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை ஏற்றியபோதும் "அஹத் ,அஹத்" என்ற வீரமான வார்த்தைகள் மூலம் அந்தக் கொடூரிகளுக்கு பிலால் (ரலி ) வார்த்தையடி கொடுத்தார் . குப்ரிய ஆணவத்தை அந்த உச்சக்கட்ட இயலாமையும் எதிர்த்தே நின்றது . வெந்தணலில் கிடத்தப்பட்ட கப்பாப் பின் அர்த் (ரலி ) அவர்களின் கொழுப்பு உருகி அந்த தணலை அணைத்தபோது ,ஆணவம் பிடித்த அல்லாஹ்வின் எதிரிகளின் நெஞ்சங்கள் குமுறின !! இப்படியெல்லாம் சோதனைகளை கண்டசிறுபான்மை  சமூகத்தில் இருந்தே அந்த வார்த்தைகள் வந்தன.  "இந்த சூழ்நிலையை   மாற்ற  எங்களுக்காக அல்லாஹ்விடம்  பிரார்த்திக்க கூடாதா ?" 


       அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) பதில் அளிக்கிறார் . அதன் சாரம்சம் இதுதான் " உங்களுக்கு முன் ஒரு சமூகம் இந்த சத்தியத்தை சுமந்ததட்காக இரும்புச் சீப்புகளால் வாரப்பட்டார்கள் , கொதிக்கும் எண்ணையிலே போடப்பட்டார்கள் , ரம்பங்கள் கொண்டு இரு கூறுகளாக பிளக்கப்பட்டர்கள் . நீங்கள் ஏன் பொறுமையிழந்து !நிற்கிறீர்கள் . இன்ஷா அல்லாஹ் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இன்றி சன் ஆ வில் இருந்து ஹலரல் மௌத் வரை (ஒரு நீண்ட தூரம் ) பயணிப்பாள்,ஒரு ஆட்டிடையன் தனது ஆடுகளை ஓநாய்கள் பிடித்துச் சென்று விடுமோ என்ற அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமின்றி இருப்பான் " என்ற வார்த்தைகளே பதிலாக கிடைத்தது . 



                     நான் மேலே தந்த அல்குர் ஆன் வசனங்களையும் இடையில் இஸ்லாம் எனும் இலட்சியத்துக்காக சஹாபாக்கள் கண்ட துன்பங்களையும் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கொடுத்த பதிலையும் , நீங்கள் இன்னொரு தடவை வாசித்துப் பாருங்கள் . இத்தகு சத்தியத்தை சுமந்த நாம் !!!!!!!!தியாகம் இல்லாவிட்டால் வெற்றியின் தூரம் ...............!!!!!!!!


   

No comments:

Post a Comment