Friday, December 13, 2013

ஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது!


 95 வயதில் நெல்சன் மண்டேலாவின் மரணதிற்கான உத்தியோகபூர்வ துக்க அனுசரிப்பு, தோற்றப்பாட்டளவில் முன்னுதாரணம் இல்லாத அளவிற்கு, ஓர் உலகளாவிய நடைமுறையை தொட்டுள்ளது. வெறுக்கப்பட்ட நிறவெறி ஆட்சியின் கீழ் சட்டத்தடைகள், அடக்குமுறை மற்றும் சிறைவாசம் என அவர் நிறைய ஆண்டுகளைக் கழித்த போது—தங்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் இழந்த ஏனைய ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து—அந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரால் காட்டப்பட்ட தைரியத்திற்கும், தியாகத்திற்கும் தென் ஆப்ரிக்காவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி உழைக்கும் மக்கள் மரியாதை செலுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


        இருந்த போதினும் உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசுகளும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் அவர்களின் சொந்த காரணங்களுக்காக இரங்கலைக் காட்ட முந்திக் கொண்டுள்ளன. இவற்றில் தென்னாப்ரிக்காவின் நிறவெறி ஆட்சியை ஆதரித்த மற்றும் ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர் மண்டேலாவை ஒரு "பயங்கரவாதி" என்றரீதியில் பிடித்து கைது செய்ய உதவிய அரசு தலைவர்களும் உள்ளடங்கி உள்ளனர்.


 குவண்டனாமோவின் கொடூரங்களுக்கும் மற்றும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களைச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருக்கும் அமெரிக்க சிறைத்துறைக்கும் தலைமை வகிக்கும் பராக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், அவர் ரோபண் தீவில் 27 ஆண்டுகள் கழித்த ஒரு மனிதரிடமிருந்து "உத்வேகத்தைப் பெறும் கணக்கில்லா மில்லியன் கணக்கானவர்களில் தானும் ஒருவர்" என்று அறிவித்தார்.


   பிரிட்டனின் 10 டௌனிங் வீதியில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்ட வலதுசாரி டோரி கட்சியின் நிலையான-சுமைதாங்கி பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், "நம்முடைய காலத்தில் ஒரு தலைசிறந்த பிரபலமாக, வாழ்வில் ஒரு காவியமாக விளங்கிய மண்டேலா இப்போது இறந்துவிட்டார்—அவர் ஒரு நிஜமான உலக நாயகன்," என்று அறிவித்தார்.


      நியூ யோர்க்கில் கொடிகளை கீழே இறக்கி பறக்கவிட உத்தரவிட்ட மைக்கேல் புளூம்பேர்க் போன்ற பில்லினியர்களும் மற்றும் பில் கேட்ஸூம் அவர்களின் சொந்த அறிக்கைகளைக் கட்டாயம் வெளியிட வேண்டுமென உணர்ந்தார்கள்.


      தென் ஆபிரிக்காவின் வரலாறு மற்றும் அரசியலோடு பிரிக்க முடியாதபடிக்கு அந்த மனிதரின் வாழ்க்கை எந்தவிதத்தில் பிணைந்துள்ளதோ அது முற்றிலுமாக அரசியலற்ற, ஒரு துறவு சாயம் பூசப்பட்ட பிம்பமாக,ஒபாமாவின் வார்த்தைகளில் கூறுவதானால், “வெறுப்பால் அல்ல, மாறாக அன்பால் வழிநடத்தப்பட்டு வந்ததாக" திருப்பப்பட்டு இருப்பது தான் மண்டேலாவின் மரண நிகழ்வின் மீது ஊடகங்களால் சேவை செய்யப்பட்ட அந்த பரவச உளறல்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

  

        ஒரு நாடு மாறி ஒரு நாட்டின் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்கள் மண்டேலாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதன் பின்னால் நிஜமாக என்ன இருக்கிறது? ஓர் ஒடுக்குமுறை அமைப்புமுறையை எதிர்ப்பது அவரின் விருப்பமாக இருக்கவில்லை என்பது தெளிவாக உள்ளது—அவ்வாறான ஒன்றுக்குதான், சிறைவாசம் அல்லது டிரோன் ஏவுகணை படுகொலை கொண்டு தண்டிக்க அவர்கள் அனைத்து தயாரிப்புகளும் செய்து வைத்துள்ளனரே.


     அதற்கு மாறாக, தென்னாபிரிக்காவை பீடித்துள்ள தற்போதைய சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்தும் மற்றும் அதனோடு சேர்ந்து மிக வெடிப்பார்ந்த நிலைமைகளின் கீழ் அந்நாட்டில் முதலாளித்துவ நலன்களைக் காப்பாற்றி வைப்பதில் மண்டேலா ஆற்றிய வரலாற்று பாத்திரத்தோடும் சேர்த்து இதற்கான விடையைக் காண வேண்டி உள்ளது.


    மண்டேலாவின் மரணத்திற்கு ஒருநாள் முன்னர், நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தென்னாபிரிக்க அமைப்பு ஓர் ஆண்டு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். அது, ஓர் ஆய்வுக்கு உட்படுத்தியவர்களில் பெரும்பான்மையினர் தென் ஆபிரிக்க சமூகத்தில் வர்க்க சமத்துவமின்மை அனைத்திற்கும் மேலான பிரச்சினையை பிரதிநிதித்துவம் செய்வதாக உணர்ந்தனர் என்பதைக் எடுத்துக்காட்டியது. அந்த ஆய்வில் “தேசிய நல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது"வர்க்கமா, இனமா எனக் கேட்கப்பட்டதற்கு இனம் (14.6%) என்பதை விட இரண்டு மடங்கிற்கு நெருக்கமானவர்கள் வர்க்கமே (27.9%) என்றனர்.


     நிறவெறி கொள்கையின் சட்டபூர்வ இன ஒடுக்குமுறை முடிவுக்கு வந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், சுரங்கத் தொழிலாளர்களின் வீரமான பாரிய போராட்டங்கள் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸோடு நேரடியாக மோதலுக்குள் வந்துள்ள தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளின் போராட்டங்களோடு சேர்ந்து, தென் ஆபிரிக்காவில் வர்க்கப் பிரச்சினை முன்னுக்கு வந்துள்ளது.


   மாரிக்கானாவில் உள்ள லோன்மின் பிளாட்டினம் சுரங்கத்தில் 2012 ஆகஸ்ட்16இல், வேலைநிறுத்தம் செய்து வந்த 34 சுரங்க தொழிலாளர்களின் படுகொலையில் இந்த வெடிப்புகள் அதன் கூர்மையான வெளிப்பாட்டை கண்டன. அந்த மக்கள் படுகொலை, அதன் இரத்தந்தோய்ந்த பிம்பங்களில்Sharpesville மற்றும் Sowetoஇன் இனவெறி ஒடுக்குமுறையின் மோசமான அத்தியாயங்களை நினைவுப்படுத்தின. இருந்த போதினும், இந்த முறை, அந்த இரத்தக்களரி ANC அரசாங்கம் மற்றும் உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு COSATUஇல் இருந்த அதன் கூட்டாளிகளால் நடத்தப்பட்டன.


   இன்று இந்த புவியில் தென் ஆபிரிக்கா சமூகரீதியில் மிகவும் சமத்துவமற்ற நாடு என்றரீதியில் நிற்கிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியும், வறிய தென் ஆபிரிக்கர்களின் எண்ணிக்கையும் இரண்டுமே 1990இல் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வந்தபோது இருந்ததை விட அதிகமாக உள்ளன. நாட்டின் வருவாயில் முழுவதுமாக 60 சதவீதம், மேலே உள்ள 10 சதவீதத்திற்கு போகிறது,அதேவேளையில் அடியில் உள்ள 50 சதவீதத்தினர், ஒட்டுமொத்தமாக மொத்த வருவாயில் 8 சதவீதத்திற்கும் குறைவாக பெற்று, வறுமை கோட்டிற்கும் கீழே வாழ்கின்றனர். பாதிக்கும் மேற்பட்ட இளம் தொழிலாளர்கள் உட்பட குறைந்தபட்சம் 20 மில்லியன் மக்கள் வேலையின்றி உள்ளனர்.


      இதற்கிடையில், "கறுப்பின மக்களின் பொருளாதார மேம்பாடு" போன்ற திட்டங்களின் கவசத்தின் கீழ், கறுப்பினத்தைச் சேர்ந்த முன்னாள் ANCதலைவர்களின் ஒரு மெல்லிய அடுக்கு, தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் சிறிய வியாபாரிகளும் இயக்குனர் குழுவிற்குள் இணைந்தும், பங்குகளைக் கையகப்படுத்தியும், மற்றும் அரசின் ஒப்பந்தங்களில் இருந்தும் செல்வந்தர்களாகி உள்ளனர். இந்த நிலைமையின் கீழ் தான், மண்டேலாவைப் பின்பற்றிய ANC அரசாங்கங்கள், முதலில் Thabo Mbeki மற்றும் தற்போது Jacob Zuma இன் கீழ், ஒரு செல்வ செழிப்பான ஆளும் அரசியலமைப்பின் ஊழல் பிரதிநிதிகளாக பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளனர்.


     ஆயினும் அந்நாட்டின் அரசியல் வாழ்வில் மிக மிக சிறிய ஆக்கபூர்வமான பாத்திரம் வகித்த மண்டேலா, ANCக்கான ஒரு முகப்பு தோரணமாக சேவை செய்தார். அந்த முகப்பு தோரணம், ANCஇன் சொந்த ஊழலை அதுவே சுயமாக கையாண்ட விதத்தை மறைக்க அவரது தியாக வரலாற்றின் மீதும்,அடக்கமான கண்ணியத்தின் அவரது பிம்பத்தின் மீதும் பவனி வந்தது. அந்த முகப்பு தோரணத்திற்கு அப்பாற்பட்டு, நிச்சயமாக சுமார் 200 தனியார் நிறுவனங்களில் ஆக்கபூர்வமாக இணைந்துள்ள அவரது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு சேர்ந்து, மண்டேலாவும் அவரது குடும்பமும் மில்லியன்களைக் குவித்தனர்.


          “மண்டேலாவின் மரணம் தென் ஆபிரிக்காவை அதன் தார்மீக மையமின்றி விட்டுவிடுகிறது," என்ற கவலை தோய்ந்த தலைப்பின் கீழ் வெள்ளியன்றுநியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை பிரசுரித்தது. மண்டேலாவின் மரணம் தீவிர வர்க்க போராட்டங்களுக்குப் பாதை திறந்துவிட்டு, ANCஇன் மீது விட்டு வைக்கப்பட்டிருக்கும் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையையும் வெட்டுவதற்கே சேவை செய்யும் என்ற அச்சம் அங்கே மிக தெளிவாக நிலவுகிறது.


  தென் ஆபிரிக்காவின் தற்போதைய நெருக்கடியில் மண்டேலா மறைவின் தாக்கங்கள் குறித்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் மத்தியில் நிலவும் கவலைகள், அந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் ANC தலைவரிடம் இருந்து கிடைத்த சேவைகளுக்காக அவற்றின் நன்றியுணர்வோடு பிணைந்துள்ளன. 1980களின் மத்தியில்,நிறவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மீது, தென் ஆபிரிக்க ஆளும் வர்க்கம் மண்டேலா மற்றும் ANC உடன் அதன் பேரங்களை தொடங்கியபோது, அந்நாடு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்குள் இருந்ததோடு ஒரு உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் பல்லிளித்துக் கொண்டிருந்தது. கருப்பின தொழிலாள வர்க்க நகரங்களில் கட்டுப்பாட்டை இழந்து, அரசு ஒரு அவசரகால நெருக்கடி நிலையை அறிவிக்க நிர்பந்திக்கப்பட்டு இருந்ததாக உணர்ந்தது.


       தென் ஆபிரிக்க மற்றும் சர்வதேச சுரங்க பெருநிறுவனங்களும், வங்கிகளும் மற்றும் ஏனைய நிறுவனங்களும், நிறவெறி ஆட்சிக்குள் இருந்த மிக நனவுபூர்வமான உட்கூறுகளோடு சேர்ந்து, ஒரு புரட்சிகர மேலெழுச்சியை அடக்க ANCஆல்—குறிப்பாக மண்டேலாவால்—மட்டுமே முடியுமென்பதை உணர்ந்தன. அந்த நோக்கத்திற்காக தான் அவர் 23 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


      ஆயுதமேந்திய போராட்டங்களோடு இருந்த அதன் தொடர்புகள் மற்றும் அதன் சோசலிச வார்த்தைஜாலங்கள் மூலமாக பெற்றிருந்த அதன் கௌரவத்தைப் பயன்படுத்தி, கட்டுப்படுத்தவோ அல்லது விரும்பி ஏற்கவோ முடியாத மக்களின் மேலெழுச்சியைத் தணிக்கவும் மற்றும் ஒரு பேரம்பேசப்பட்ட உடன்படிக்கைக்கு அதை அடிபணிய செய்யவும் ANC வேலை செய்தது.அப்படியான அந்த உடன்படிக்கைகள் சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் அந்நாட்டின் வெள்ளையின முதலாளித்துவ ஆட்சியாளர்களின் செல்வத்தையும் சொத்துக்களையும் காப்பாற்றி வைத்தது.


பதவி ஏற்பதற்கு முன்னால், மண்டேலாவும் ANCயும் இயக்கத்தின் வேலைதிட்டங்களின் பெரும் பகுதிகளை, குறிப்பாக வங்கிகள், சுரங்கங்கள் மற்றும் பிரதான தொழில்துறையின் பொது உடைமை தொடர்பான கொள்கைகளை குழி தோண்டி புதைத்தனர். அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் வரவு-செலவு கணக்கில் கடுமையான வெட்டுக்கள் செய்வது,வட்டிவிகிதங்களை உயர்த்துவது மற்றும் சர்வதேச மூலதனம் ஊடுருவுவதில் உள்ள அனைத்து தடைகளையும் உடைப்பது உட்பட கட்டுப்பாடற்ற சந்தை கொள்கைகளை நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்து ஒரு இரகசிய உடன்படிக்கை கடிதத்தில் கையெழுத்திட்டனர்.


அவ்வாறு செய்ததன் மூலமாக, சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் விளக்கி இருந்த ஒரு தொலைநோக்கு பார்வையை மண்டேலா கைவரப் பெற்றார், அப்போது அவர் எழுதினார், ANCஇன் வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதானது, “இந்த நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர் அல்லாத முதலாளிமார்கள் தங்களின் சொந்த பெயரை மற்றும் உரிமையைப் பெற வாய்ப்பை வழங்கும். மில்கள் மற்றும் தொழிற்சாலைகள், வியாபாரம் மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியும், மலர்ச்சியும் அடையும்" என்பதை அர்த்தப்படுத்தும் என்று எழுதினார்.


     எவ்வாறிருந்த போதினும், கறுப்பின பல கோடி-மில்லியனர்களின் ஒரு அடுக்கை உருவாக்கிய அதேவேளையில் நாடுகடந்த சுரங்கத்தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபங்களையும் உயர்த்திய இந்த"மலர்ச்சிக்கு", தென் ஆபிரிக்க தொழிலாளர்களின் மீதான தீவிர சுரண்டலே விலையாக கொடுக்கப்பட்டுள்ளது.


    ANC நடந்து வந்த அவமானகரமான பாதை பிரத்யேகமானதல்ல. அதே காலக்கட்டத்தில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திலிருந்து சான்டிநிஸ்டா வரையில், தேசிய சுதந்திர போராட்டங்கள் என்றழைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு குறுகிய அடுக்கிற்கான செல்வ வளம் மற்றும் தனிச்சலுகைகளைப் பின்தொடர்ந்து,தோற்றப்பாட்டளவில் இதேபோன்ற கொள்கைகளையே பின்பற்றின.

       

நன்றி கைபர் தளம் .

     


   


  




   




  







No comments:

Post a Comment