Friday, December 6, 2013

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள மூன்று சதிமுக அரசியல் வடிவங்கள் !(ஒரு சுருக்கப் பார்வை )

  (நபியே !) அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டு விட்டானோ ,அக்கூட்டத்தினரை சிநேகிதர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அத்தகையோர் பக்கம் நீர் பார்க்க வில்லையா ?அவர்கள் உங்களில் உள்ளவர்கள் அல்லர் ;அவர்களிலும் உள்ளவர்களல்லர் ; அவர்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில(உங்களைச் சேர்ந்தவர்களென )பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர் .    (அல் முஜாதிலா : வசனம் 14)

         சிந்தனை வீழ்ச்சியின் காரணமாக முஸ்லீம்களது கைகளில் இஸ்லாம் வெறும் ஆன்மீக மதமாக அமர்ந்திருக்கின்றது .இஸ்லாம்தான் தீர்வு என்பதிலும் ,இஸ்லாத்தில் இருந்து மட்டுமே தீர்வு எனவும் ஒவ்வொரு முஸ்லிமும் ஏதோ ஒரு வகையில் நம்புகிறான் . இருந்தும் அதை நோக்கிய நடைமுறைகள் ,பிரயோகம் , செயற்பாடுகள் ,நிலைப்பாடுகள் ஸுன்னாவின் ஆதாரங்களின் அடிப்படையிலும் ,அதனை ஒப்பு நோக்கிய நிகழ்கால நகர்வு குறித்தும் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது .  

              இத்தகு நிலையை பயன்படுத்தியே மேற்கின் குப்ரிய சிந்தனைத்தரம் தனது குப்ரிய அகீதாவை தழுவிய தீர்வுப் பாதைக்குள் முஸ்லீம் உம்மாவை கொண்டுவருவது இலகுவாகியது .மனித இயல்பான இச்சை முதல் நிலைப்பட உலகியல் மோகம் முஸ்லிமையும் பீடித்திருந்தது .இது குப்ரியத்துக்கு மேலதிக சந்தர்ப்பமாக மாறியது .முடிவாக குப்ர் இஸ்லாமிய வடிவமெடுக்கும் அரசியல் பாத்திரங்களாக முஸ்லீம் உலகு சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றப்பட்டது . இஸ்லாத்தின் அரசியல் அதிகாரமா !?இதோ இருக்கிறதே ! என ஒவ்வொரு முஸ்லிமும் திசைகாட்டும் ஆபத்தான பாத்திரங்களாக இன்று அவை காணப்படுகின்றன . அவை பற்றி ஒரு சுருக்க அறிமுகத்தை நோக்குவோம் .


         1924 ஆம் ஆண்டு உதுமானிய கிலாபா வீழ்த்தப்பட்டதன் பின்னர் இஸ்லாத்தின் அரசியல் அகீதா பற்றிய புரிதல்கள் மாறிப்போகத் தொடங்கின . தேசியம் ,குடியரசு ,மன்னராட்சி என்ற வட்டங்களை சுற்றிய பிரிகோடுகள் முஸ்லீம்களால் விரும்பியோ வெறுத்தோ ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன . இருந்தும் முஸ்லீம்களின் தனிநபர் சமூக நடத்தையில் தாக்கம் செலுத்தும் இஸ்லாத்தின் தீர்வுகள் இஸ்லாத்தின் நிலைப்பாடான 'அணைத்து மார்க்கங்களையும் மிகைத்தல் (9:33) ' என்ற அரசியலை நோக்கி வழி நடாத்தும் என்பதை உணர்ந்த குப்ரிய ஏகாதிபத்தியங்கள் அத்தகு நிலையில் இருந்து தமக்கான பாதிப்பை தவிர்ந்து கொள்ள இஸ்லாமிய சாயல் கொண்ட போலி அதிகார வடிவங்களை அங்கீகரிக்கிறார்கள் . அந்த மாற்று அரசியலின் மூத்த வடிவமே 'கிங்க்டோம் ஒப் சவூதி அரேபியா '!!


        இரண்டு புனிதத் தளங்களின் பரிபாலனம் ,இஸ்லாம் தொடர்பான வரலாற்று உறவு , மற்றும் இவற்றுக்கு மேலதிகமாக இஸ்லாமிய சரீயாவின் சட்டப்பிரயோகம் என்பன ஒரு பிரமாண்டமான இஸ்லாமிய அரசியலின் தரத்தில் சவூதியை கொண்டு நிறுத்தியது . அத்தோடு தமது மன்னரிச அதிகாரத்தை ஒத்துப் பாடும் உலமாக்கள் மற்றும் நிறுவனங்களை தமது நிதிகள் மூலமாக உருவாக்கி ,கட்டுப்படுத்தி தமது அங்கீகாரத்தை வேண்டிய பிரச்சாரத்தை உலகெங்கும் செய்யவைப்பதன் ஊடாக உலகளாவிய முஸ்லீம் உம்மத்தை கிலாபா அரசை அடிப்படையாக கொண்ட ஓர் தலைமை சாம்ராஜியத்தின் பக்கம் மீண்டும் சிந்திக்க விடாமல் இருப்பதற்கும் இத்தகு வடிவம் மிகுந்த உதவியாக அமைந்தது .
          
            'கிலாபத்து ஆபத்து !' என 'போஸ்டர்' அடித்து பிரச்சாரம் பண்ணும் அரசியல் சதி இந்த சவூதி தளத்தை மூல வேராகக் கொண்டே தொடங்கப்பட்டது . இஸ்லாத்தின் அரசியலும் முஸ்லிம் உம்மத்தின் கேடயமுமான ஒரு அடிப்படையான  ஸுன்னாவை புறந்தள்ளுதல் , பட்டும் படாமல் தொட்டுப்பேசல் என்ற போலி முகங்களோடு , இஸ்லாமிய கிலாபத் தொடர்பாக உழைக்கும் இயக்கங்கள் மீது மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் மூலம் கரிபூசி முஸ்லீம் உம்மத்தை குழப்பத்திலும் பிரிவினையிலும் கொண்டு செல்லும் மேற்கின் அரசியல் சதியின் உத்தியோகபூர்வ இயங்கு தளமே இந்த சவூதி அரேபியா . 

  
      இத்தகு கோட்பாட்டு அரசியலை லாரன்ஸ் ஒப் அரேபியா என அறியப்பட்ட பிரித்தானியாவின் கிறிஸ்தவ உளவாளியைக் கொண்டே சவூதி கட்டமைத்தது (என்பது தொடர்பில் முன்பு ஒரு பதிவில் தெளிவு படுத்தியுள்ளோம் .) "யூத கிறிஸ்தவர்களை உங்களது பாதுகவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம் " என அல் குர் ஆன் பல இடங்களில் தெளிவாகவே கூறியிருக்க கிறிஸ்தவ பிரித்தானிய அதிகாரத்தை நம்பியே இந்த மன்னரிச தேசியம் மலர்ந்தது என்ற உண்மையை முஸ்லீம் உம்மத் உணரத் தலைப்பட்டபோது இன்னொரு மாற்றுத் திட்ட அரசியலை பக்குவமாக இம்முறை சற்று வித்தியாசமாக அங்கீகரித்தது .அது யார்  எவ்வாறு !?

                    ஈரான் இஸ்லாமிய குடியரசு !!! எனும் மாயை பிளஸ் பிரமாண்டம் கொண்ட 'நெகடிவ் ரோல் 'அரசியலே அதுவாகும் . இந்தத் தூண்டிலுக்கு இரையாகப் போடப்பட்டது பாலஸ்தீன் விவகாரமே . ஷியா இசத்தின் அகீதா புரழ்வு அமெரிக்க மற்றும் சியோனிச இஸ்ரேல் எதிர்ப்பு 
என்ற முஸ்லீம் உம்மத்தோடு ஒத்துப்போகும் விடயங்களை தூக்கிக்  காட்டியதால் மறைக்கப்பட்டது .  பலத்தை காட்டி வலம்வரும் முஸ்லீம் சார்புச் சண்டியனாக ஈரான் வலம்வரத் தொடங்கியது .  

     இஸ்ரேல் எதிர்ப்பு என்ற 'இமேஜ் ' பாலஸ்தீன் விவகாரத்தில் உணர்ச்சி மிகுந்த முஸ்லீம் உம்மாவுக்கு ஒரு அவசியமாகவும் மாறிப்போனதில் சந்தேகமில்லை . சுற்றி வர இருந்த சுகபோக அரபி தேசங்கள் மேற்கை வால்பிடித்து வஹி காட்டிநின்ற மூன்றாவது புனிதத் தளமான 'பைத்துல் முகத்திசை ' யூதனிடம் விட்டுக்கொடுப்பது பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்க ,வளத்தோடும் பலத்தோடும் வரும் ஈரானின் உதவிக் கரம் அவசிய அரசியலாக நோக்கப்பட்டது . ஆனால் மறுபுறம் இதையே காரணம் காட்டி இஸ்ரேல் தனது ஆயுத பலத்தையும் ,வளத்தையும் பன்மடங்காக்கி ஒரு அணு ஆயுத நாடாக தன்னை பிரகடனப் படுத்தியது . இங்கு ஒரு 'நெகடிவ்' ரோல் அரசியல் மூலம் மேற்கு ஒரு தெளிவான 'பொசிடிவ்' இலக்கை அடைந்ததுதான் மிச்சம் .

    'ஒபரேசன் சக்சஸ் பட் மிஷன் பெயில் ' என்ற 'மிலிடரி' ஜோக்கை தவிர இஸ்ரேல் விவகாரத்தில் ஈரானால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியவில்லை! 'கீரைக்கடைக்கும் சரியான எதிர்க்கடை தேவை 'என்ற உத்தியை மேற்கு ஒரு அரசியல் பந்தாக்கி முஸ்லீம் உம்மாவின் மத்தியில் போட்டது அவ்வளவுதான் !  இந்த ஏமாற்று அரசியலும் அதிக காலம் தாக்குப் பிடிக்கவில்லை .இப்போது மேற்கு தனது மூன்றாவது பொறியை பக்குவமாக வைத்தது அது என்ன !?  

        நிகழ்கால துருக்கி பற்றிய மாயை அனேகமாக எல்லா இஸ்லாமிய வாதிகளிடமும் காணப்படுகிறது . அது நாளைய இஸ்லாமிய மீள்வருகையின் கனவாகவே பேசப்படுவதும் எழுதப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . ஆனால் இறுதியாக இஸ்லாமிய கிலாபா அரசு அங்குதான் இருந்தது என்ற வரலாற்று காரணத்தை அடிப்படையாக காட்டி மேற்கு அங்கீகரித்த புதிய பொறியே இன்றைய துருக்கி அரசியலாகும் . மேற்குடனும் ,அதன் வாழ்வியல் உடனும் முடிந்தவரை ஒத்துப் போதல் ,பலதை விட்டுக்கொடுத்தல் மூலம் இஸ்லாமிய எழுச்சி காணல் ! எனும் சரணடைவு மூலோபாயமாக காட்டப்பட ,மேற்கின் தரத்தில் கற்ற இஸ்லாமிய புத்திஜீவிகளுக்கு அது அமுதமாகியது !!!

         நேட்டோவோடு உறவு ,ஐரோப்பிய பொருளாதரத்தில் தங்கி வாழ்தல் , மதச் சார்பின்மையை மீறாத அரசியல் கொள்கை , I .M .F போன்ற நிபந்தனா தர குப்ரிய நிதி அமைப்புகளுடன் நெருங்கிய உறவு இப்படி பல விடயங்களை காரணம் காட்டி இதுவும் இஸ்லாமிய பெயர்தாங்கி பொய் முக அரசியலே என எம்மால் கூறமுடியும் . மேலும் மேற்கின் அஜன்டாவின் அடிப்படையிலேயே துருக்கி அண்மையில் பர்மிய விவகாரத்தில் தலையீடு செய்தது . பர்மாவுக்கு அண்மையில் இருந்த இந்தோனேசியா ,மலேசியா ,பங்களாதேஷ் என்பன மௌனித்திருக்க துருக்கியை அவ்விடத்தில் பிரதி நிதித்துவம் பண்ணியது மேற்கின் திட்டமே ! இதன்மூலம் முஸ்லீம்களில் சிலருக்கு இதோ முஹம்மத் இப்னு காசிம் வரப்போகிறார் என்ற தவறான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அது இத்தகு மேற்கின் அரசியல் நிலைப்பாட்டின் மீது வெற்றியை ஏற்படுத்தியது .


 இந்த ஒட்டுமொத்த பொய் முகங்களின் உண்மை உருவம் கூட்டாக வெளித்தெரிவது இன்று சிரியாவின் விவகாரத்திலே தான் என்றால் அது மிகையாகாது .மன்னரிச அரசியல் ,குடியரசு அரசியல் , மதச் சார்பின்மை இஸ்லாமிய !!! ஜனநாயக அரசியல் என்ற போலிகளை பொய்ப்பித்து இஸ்லாத்தின் உண்மை அரசியலான கிலாபா அரசு பற்றி சிரிய போராட்டம் எதிர்வு கூறுவது குப்ரோடு சேர்த்து அதன் கைப்பாவைகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . எனவே அதற்கு எதிரான கருத்துகளையும் சிந்தனைகளையும் உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தி வருகிறார்கள் .
    
  எனவே முஸ்லீம் உம்மாவே ! நாம் சிந்திக்க வேண்டிய திசை என்ன ?
 " தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும் ,முற்றிலும் ஒருமைப் பட்டவர்களாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை .  (அல் குர் ஆன் 98:5)

                                   என்ற வஹியின் வசனத்தை நினைவில் கொண்டு தவறான அரசியல் மூலம் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற பாவத்தை செய்யாமல் முஸ்லீம் உம்மத ஸுன்னா வரையறுத்த அரசியலும் ,காலத்தின் தேவையுமான கிலாபா      அரசியலை நோக்கிய  வழியில் தனது சிந்தனையையும் , பாதையையும் தேடிக்கொள்வது கட்டாயக் கடமையாகும் .

1 comment: