Tuesday, December 24, 2013

முஸ்லீம் உம்மாவின் அரசியல் போராட்டம் எது ?

(இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு . சமத்துவம் அதற்காக சமரசம் அதன் மூலம் சகவாழ்வு !!! இந்த சரணடைவு அரசியலை தவிர உருப்படியான மாற்றுத் தீர்வு இலங்கை முஸ்லீம் புத்தி ஜீவிகளால் பேசப்படவோ கருத்தாடப்படவோ இல்லை . இவர்களுக்கு தெரிவதெல்லாம் சிதறிய நெல்லிக்காய் போல் வாழும் ஒரு நாக்கிலிப் புழு சமூகமும் ! தப்பிச் செல்ல முடியாத வேலியாய் ஒரு சமுத்திரமும் தான் ஆகும் !அதில் முஸ்லீம் என்பவன் இஸ்லாமிய பெயர் எச்சமாக ஒட்டி நிற்க ,அடங்கி அச்சப்பட்டு வாழ்வது மட்டுமே காலத்தின் தேவையாக ,புத்தி சாதுரியமாக கருதப்படுகிறது .


         காரணம் இஸ்லாம் எனும் இலட்சியத்தை விட அது காட்டும் சத்தியத்தை விட உலகத்தை தேடவேண்டும் என்ற பேராசை தன்னை இலட்சியவாத சமூகமாக காட்டி களமிறங்காமல் தயங்க வைத்து விட்டதே ஆகும் . இன்று அடக்குமுறையாளர்கள் தமது இரண்டாம் கட்ட நகர்வை தெளிவாகவே தொடங்கி விட்டனர் . அந்த நேரடித் தலையீடு குப்ரிய சட்டங்களின் துணையோடு முஸ்லீம்களின் உரிமையை பறித்தெடுக்கும் அராஜகமாக தொடங்கி விட்டது . இப்போது என்ன செய்வது !? சில புரிதல்களுக்காக இந்தப் பதிவை மீள் பதிவிடுகிறேன் . )


                                               


                            "தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமூகத்திற்கு எதிர்காலமே கிடையாது "     (வரலாற்றாய்வாளர் இப்னு கல்தூன் )


                                         உங்கள்  மூதாதையர்களோ (கடவுள்களாக வணங்கப்பட்ட ) சிலைகளை உடைத்த 'இப்ராஹீம்களாக 'இருந்தார்கள் .நீங்களோ (இப்ராஹிம் (அலை ) அவர்களின் தந்தையாராகிய ) சிலையை விற்று வாழ்க்கை நடத்திய 'ஆசர்களாக ' உள்ளீர்கள் ! நீங்கள் தானா முஸ்லீம்கள் ?               
                                                                                                (கவிஞர் இக்பால் )


                   முஸ்லீம்களாகிய எமது போராட்டம் என்பது இன்று மிகத் தெளிவாக புரியப்பட வேண்டும் . எமது தவறுகள் , அறியாமைகள் , உள்வீட்டு சண்டைகள் இவை அனைத்தையும் தாண்டி குப்ரியத்தின் மிக மோசமான ஒரு ஒடுக்கு முறை வடிவம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் நிலங்களில் இன்று முஸ்லீம்களுக்கு எதிராக புலப்படத் தொடங்கியுள்ளது .                   
                                                                  இலங்கையின்  முஸ்லீம் எதிர்ப்பாளர்களின் நகைப்புக்கிடமான நடவடிக்கையாக அண்மையில் மேற்கொண்டது 'ஹலால் ' எதிர்ப்பு போராட்டமாகும் . அதாவது தாம் சார்ந்த  சமூகத்தை" 'ஹலால் ' என்ற சின்னம் பொறிக்கப் பட்ட உணவு வகைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் " என்ற கோரிக்கையை முன்வைத்தும் , உற்பத்தியாளர்களை" 'ஹலால் ' சான்றிதல் பெறவேண்டாம்" என்ற கோரிக்கையை முன்வைத்துமே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது , மேற்கொள்ளப் படுகின்றது .

                  ஆனால் இங்கு நடந்த நிகழ்வு என்னவென்றால் 'ஹலால் ' என்றால் என்ன ? என்ற வினாவைச் சுற்றி பெரும்பான்மை சமூக மட்டங்கள் மெது மெதுவாக இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளது .

      சந்தர்ப்பங்களை நாம் தேடிச் செல்லாத போதும் , எம்மைத்தேடி இப்போது சந்தர்ப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன ! என்றுதான் இன்றைய நிலையை சொல்ல முடியும் . முஸ்லீம் என்பவன் ஒரு இனம் என்ற பார்வையை விட்டும் சற்று மேலதிகமாக சென்று அவனுள் ஒரு கொள்கை இருக்கின்றது .என்ற உண்மை அந்நிய சமூகங்கள் மத்தியில் இனி வெளிச்சமாகும் சந்தர்ப்பங்கள் மிக அதிகமாகியுள்ளன .

                                         ஆனால் 'ஹலால் ,ஹராம் ' என்ற வட்டத்தைச் சுற்றியே ஒரு முஸ்லிமின் வாழ்வு அமைந்துள்ளது என்ற உண்மையையும் , வெறும் உணவுப் பொருட்களை மட்டும் கருத்தில் கொண்டு 'ஹலால் ' என்ற வரையறை பேணப் படவில்லை எனும் உண்மையை சொல்வதன் ஊடாக இஸ்லாத்தின் இறைக் கொள்கையை தெளிவு படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது .


                                           'கொள்கைக்கான வாழ்வுமுறை எப்போது பின்தள்ளப் படுகின்றதோ ,அப்போதே அந்த சமூகம் கொள்கைவாத சமூகம் என்ற வரையறையில் இருந்து பின்தள்ளப் படும்.' என்ற உண்மையை முஸ்லீம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் . இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது எமது வாழ்வுக்கான போராட்டமா? எமது கொள்கைக்கான போராட்டமா ? என்ற வினாவில், நாம் வாழ்வதில் தான் எமது கொள்கை வாழும் என்ற நொண்டிச் சாட்டை முன்வைத்து ' சபூர் 'கோட்பாடு 'அட்ஜஸ்ட் மெண்ட் ' பெகேஜாக ' இன்று பொதுவாக முன்வைக்கப் படுகின்றது .


                                         இஸ்லாம் கொச்சைப் படுத்தப் பட நாம் வாழ்தல் என்ற கோட்பாடு முன்வைக்கப் படுமாக இருந்தால் அதுதான் (ஹுப்புத் துன்யா ) உலகாசை . மௌனமோ, வன்முறையோ தான் இங்கு தவறானது; தவிர துன்பங்களை அனுபவித்த நிலையிலும் சத்தியத்தை தெளிவாக  சொல்லுதல் என்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை  . இப்போது முஸ்லீம் எதிர்ப்பு எனும் போர்வையில் ஆட்டத்தை யார் ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களே வினாக்களோடு வருவார்கள் என்பதுதான் உண்மை . அதற்கான விடைகளில் இறைக்  கொள்கை (இலாஹ் , ரப் ) என்ற வட்டத்தை நோக்கி திருப்பும் பணியை நாம் செய்ய வேண்டிய கடமை தான் எமக்கு முன் உள்ளது .

No comments:

Post a Comment