Friday, November 15, 2013

'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தில் சாதிக்க நினைப்பது என்ன ?

       

       சிரியப் போராட்டம் பற்றி பல முன் பின் முரணான செய்திகள் ஊடகங்கள் மூலம் உலாவருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது . அண்மையில் கூட டமஸ்கஸில் ஒரு மஸ்ஜிதில் நடந்த குண்டு வெடிப்பில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன . அங்கு போராடும் இஸ்லாமிய போராட்ட அணிகள் தொடர்பில் பல உள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் தகவல்கள் பரப்பப் படுகின்றன . 

         அங்கு நடைபெறும் போராட்டத்தின் யதார்த்தத்தை , மாற்றும் திசைதிருப்பும் , கலங்கப் படுத்தும் இத்தகு செய்திகளின் உண்மைத்தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு தொடர்பில் எவ்வித ஆழ்ந்த ஆய்வுகள் இன்றி வெளிவிடப்படும் இத்தகு செய்திகளின் பின்னால் ஒரு தெளிவான சதித்தனம் புலப்படுவதை அவதானிக்க முடிகிறது .

          உண்மையில் சிரிய விவகாரம் தொடர்பில் பலத்த இருட்டடிப்பு மேற்கின் ஊடகங்களால் செய்யப் படுவதோடு ,தமது அதிர்ச்சியையும் ,எதிர்பார்ப்பையும் கற்பனா வாதமாக காட்சிப் படுத்துவதன் ஊடாக முஸ்லீம் உம்மத்தின் பார்வையையும் ,உலகின் பார்வையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்த மீடியாக்கள் முயல்கின்றன . இந்த வகையில் ஹிட்லரின் வலது கையான கோயாபல்சு சொல்வது போல் "ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் போது அது உண்மையாக மாறிவிடும் " என்ற தத்துவத்தையே இந்த மீடியாக்கள் பயன்படுத்துகின்றன .


   கருத்து வேறுபாடுகள் என்பது முஸ்லீம் உம்மத்தில் இயல்பானது சஹாபாக்கள் காலம் தொடங்கி இன்றுவரை அது இருந்து கொண்டுதான் இருக்கிறது . அது சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம் .அதை ஊதி பெருப்பித்து காட்டுவதுடன் அதை பயன்படுத்தி தனக்கான ஒரு உதவி அணியை சிரியாவில் இஸ்லாமிய போராளிகள் மத்தியில் இருந்து 
எடுக்க முடியாதா ? என்ற நப்பாசை இத்தகு மீடியா புரளிகளின் அடிப்படைக் காரணமாகும் .


         இஸ்லாமிய வரலாற்றின் ஒரு கசப்பான பொழுதில் கலீபா அலீ (ரலி ) அவர்களுக்கும் முஆவியா (ரலி ) அவர்களுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டு மோதல் ஏற்பட்டதை நாம் அறிவோம் . இத்தகு சூழ்நிலையை பயன்படுத்தி ரோமின் அரசன் ஒரு சதித்தனமான தூதுச் செய்தியை முஆவியா (ரலி ) அவர்களுக்கு அனுப்புகிறான் .


   அதன் படி தனது முழுப்படை பலத்துடன் இஸ்லாமிய கிலாபாவின் தலைநகரமான பக்தாதை அழிக்க தான் உதவுவதாக அந்த செய்தி இருந்தது . செய்தியை படித்த முஆவியா (ரலி ) கண்கள் சிவந்தவராக கடும் கோபத்துடன் கடுமையான வார்த்தைகளால் ரோமின் மன்னனை சாடிவிட்டு சொன்ன வார்த்தைகள் முஸ்லீம் உம்மத்தின் உயிரோட்டதை அப்படியே பிரதிபலித்தது .


    அந்த வார்த்தைகள் இதுதான் " அப்படி ஒரு நிலை வந்தால் அலி (ரலி ) அவர்களின் படையில் முதல் போராளியாக நானிருப்பேன் " என்று கூறினார்கள் . தமக்குள் ஆழமாக சிந்திக்கப் படாத ,சூழ்நிலை புரியாத கருத்து வேற்றுமை அல்லாஹ்வின் எதிரிகளால் நன்கு பயன்படுத்தப் பட்டதே பின்னர் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு காரணமாகியது .

'அல்ஹம்து லில்லாஹ்' சிரியாவின் போராளிகள் இன்றுள்ள கள நிலவரத்தின் படி தமது கருத்து முரண்பாடுகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு சகோதரப் புரிந்துணர்வை மிக நிதானமாக வெளிப்படுத்துகிறார்கள் . சிரியக் களத்தை பொறுத்தவரை சலபி முதல் கலபி வரை தமது பொது எதிரி பசர் அல் அசாத் மட்டுமல்ல என்பதை உணர்ந்துள்ளார்கள் . இஸ்லாம் மட்டுமே முஸ்லீம் உம்மத்துக்கு தீர்வு ,இஸ்லாத்தில் இருந்தே தீர்வு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் .


          இத்தகு நிலையை மாற்றி தமது கடிவாளத்தை போடும் கபடத் தனத்தின் மீதுதான் ஜெனீவா 2 பொறியும் அங்கு போடப்பட்டுள்ளது . அமெரிக்க ,ரஷ்ய, சவூதி அராபிய கூட்டுக்கள் தாம் அடையநினைக்கும் இலக்குகளை நோக்கி மிகத் துல்லியமான மீடியா சினைப்பர்களை பாவிக்கத் தொடங்கியுள்ளது . இவர்களின் இலக்குகள் இதுதான் .


1. சமாதானம் என்ற களத்தை திறப்பதன் மூலம் அடிப்படைத் தேவைகளோடு ஏங்கித் தவிக்கும் மக்களையும் ,சிரியப் போராளிகளையும் பிரித்தல் .

2. தவறான திசை நோக்கி சிரியப் போராட்டத்தை காட்டுவதன் ஊடாக சர்வதேச முஸ்லீம் உம்மத்தின் சிரியா தொடர்பான பார்வையை பலவீனப் படுத்தல் .

3. போராளிகளின் விநியோகப் பாதைகளையும் ,உதவிகளையும் தடுப்பதன் ஊடாக பசர் அல் அசாதின் இராணுவத்தை மீண்டும் பலப்படுத்தல் .

4. போராளிகளை உடனடியாக அழித்து விடும் சாத்தியப்பாடு இல்லாது விடினும் வலுச் சமநிலை மாறிய ஒரு தொடர் சிவில் யுத்தத்தை ஏற்படுத்துவதன் ஊடாக தமது தலையீட்டை நியாயப் படுத்தல் .

5. ஒரு போலியான ஆட்சி மாற்ற நாடகம் மூலம் தமக்கு சார்பான தேசிய அதிகார அரசியலை சிரியாவில் தொடர்தல் . (இங்கு இஸ்லாமிய சாயல் ஒரு பூசு பொருளாக சவூதியை அல்லது துருக்கியை முன் வைத்து காட்டப்படலாம்.)

                                          அந்தவகையில் மீடியா சினைபர்கள் வீழ்த்திக் கொடுக்க நினைக்கும் உடனடி இலக்குகள் .


1. சிரியப் போராட்டத்தின் உச்சக்கட்ட இலக்கான 'குளோபல் இஸ்லாமிக் ஸ்டேட் ' என்ற கிலாபா கோட்பாட்டை அவ நம்பிக்கை படுத்தல் .

2. சிரியப் போராட்ட அமைப்புகள் மீது கரி பூசி அவநம்பிக்கை ஏற்படுத்தல். 

3. சர்வதேச முஸ்லீம் உம்மாவின் சிரியா தொடர்பான பார்வையை வெறும் உள்நாட்டு கலவரமாக மட்டுப்படுத்தல் .


இது போன்ற குறிப்பான விடயங்களை குறிவைப்பதட்காக ஈரானோடு ,
சவூதி அரேபியாவோடு , துருக்கியோடு கைகோர்த்து இயங்கும் மீடியா சினைப்பர்கள் சிரிய விவகாரத்தில் சூடாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் . 
    











          

No comments:

Post a Comment