
"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ! அறிவை நீ நம்பு அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது ... " என்று நேற்று ஒரு கவிஞன் சொன்ன கவிதை வரிகள் எனக்கு நடப்பு நிகழ்வுகளை பார்க்கும் போது என்னை அறியாமலே எனது உதடுகள் மொழிகிறது ! இலங்கையின் 'CHOGM ' திருவிழாவை பற்றித்தான் சொல்ல வருகிறேன் .
பொருளாதார ரீதியிலும் ,அரசியல் ரீதியிலும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள அவசியமான ஒன்றாகவே இந்த பொதுநல வாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடப்பதற்கான நியாயமாக சொல்லப்படுகிறது . ஆனால் இந்த அமைப்பின் வரலாற்றுப் பேருண்மை முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிப் பொறி அரசியலின் வடிவமாகவே கட்டமைக்கப் பட்டது என்பது பலருக்கு புரியாதது . அவர்களின் ஆதிக்க அதிகாரங்கள் கைமாறலாம் . அவர்களுக்கு இடையில் போட்டியும் நிகழலாம் ஆனால் கூட்டாக ,தனியாக சுரண்டும் தத்துவம் மட்டும் என்றும் மாறாது .
காலனித்துவதை அநியாயம் என்றோம் ,அக்கிரமம் என்றோம் , ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் நவகாலனித்துவம் பக்குவமாக எமக்குள் தேர்ந்தெடுத்த கைத்தடிகளை வைத்து அவனது செலவற்ற சாதகங்களை சர்வதேச மயப்படுத்தியதை விடுதலை என்கிறோம் !? நேற்று பறித்தவனிடம் இருந்து பறித்தா எடுத்தோம் ? இல்லையே ! கொடுக்கும் போதும் அவன் நிபந்தனையும் இட்டு எல்லையையும் போட்டு ! அவனது அரசியல் ,பொருளியல் ,வாழ்வியல் என கலாச்சார மயப்படுத்தி விட்டுத்தானே சென்றான்.
நேற்றுவரை சுரண்டலையும் ,சுயநலத்தையும் அரசியலாக கொண்ட ஒருவனின் திடீர் மாற்றத்தில் மட்டும் பூரண பொதுநலன் இருக்கும் என நம்புவதில் இருந்து எமது ஏமாற்றம் புலப்படவில்லையா !? 1948 இற்கு முன் அவனது சொந்தக் கங்கானிகளை வைத்து நேரடியாக செய்ததை இன்று சர்வதேச நியாயம் என்ற பெயரில் 'ரிமோட் கண்ரோல் ' மூலம் அவனது கைப்பாவைகளை வைத்து செய்யும் போது ஏற்றுக்கொள்வது விடுதலையின் எந்த வடிவம்? அவனது வாழ்வியலை நம்பி அவனது நியாயங்களை நம்பி அந்த சுரண்டல் வாதத்துக்கு விழா எடுப்பதில் என்ன பயன்!?
ஐரோப்பாவில் ஒரு தேசத்தில் ஒருசமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது ,மக்கள் மன்னனின் மாளிகையை நோக்கி படையெடுத்தனர் . மாளிகைக்கு வெளியில் கூடிநிற்கும் மக்கள் திரளைப் பார்த்த இராணி ஆச்சரியமாக கேட்டார் ! ஏன் இவர்கள் இவர்கள் கூடி நிற்கிறார்கள் ? அதற்கு உண்பதற்கு ரொட்டிகள் இல்லாத காரணத்தால் இங்கு கூடியுள்ளார்கள் என அரசன் கூற , உடனே இராணி ஏன் 'கேக்' இருக்கின்றதே!அதைக் கொடுக்கலாமே ? எனக் கூறினாராம்! அதுபோல் தான் இலங்கை மக்களது நிலையாகும் .
இருக்கும் ஆனால் இருக்காது இதுதான் இலங்கை அதில் தான் இந்த CHOGM !?, தலாவருமானத்தை தாண்டிய பொருள் விலையேற்றத்தை சுமந்து கொண்டு ஒவ்வொரு சாதாரண குடிமகனும் ஏக்கத்தோடு பார்த்து நிக்க ,இந்த CHOGM கூட எதிர்கால சுமையாக வந்து விடுமா !?
அப்படியானால் எமக்கு கிடைத்த சுதந்திரம் !? அப்பட்டமான பூச்சுத்தல் என்பதில் சந்தேகமே இல்லை .
மக்கள் நலன் என்பதே அரசியலாக சொல்லப்பட்டாலும் சிலரது சுயனலனில் மனித சமூகம் அடகு வைக்கப்படுவதே முதலாளித்துவத்தின் அடிப்படை விதி .அந்த வகையில் யார் அதிகாரத்தில் வந்தாலும் சிக்கல்களை நியாயங்களாக தருவார்கள் தவிர தீர்வுகளை இன்று தரமுடியாது;இன்றைய ஆதிக்க வடிவத்தின் பொதுவிதி . காலத்தின் தேவை ஒரு சித்தாந்த மாற்றம். அந்தத் தகுதி இந்தியாவரை ஆண்ட இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு . அதனால் தான் என்னவோ காந்தியிடம் ஒருமுறை இந்தியாவை யார் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் ? என கேட்டபோது ஆபிரஹாம் லிங்கனை கூறாமல் உமர் (ரலி ) என்று கூறினார் !?
No comments:
Post a Comment