Sunday, February 2, 2014

சிந்திக்க சில வரிகள் ......(காலத்தின் தேவை கருதிய மீள்பதிவு .)


 முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)



                                            நிகழ்கால சூழ்நிலைகளில் முஸ்லீம்களாகிய எமது வாழ்வு ,நடத்தை என்பவற்றின் மீது கேள்வி எழுப்பும் ஒரு வசனமாகவும் , ஒரு முஸ்லிமின் நடத்தை இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த வசனம் அமைந்துள்ளது . ரசூல் (ஸல் ) அவர்களின் நடத்தை வழி ஆதாரத்தின் படி நிராகரிப்பாளர்களின் மீது கடுமை காட்டுதல் என்பதன் அர்த்தமாவது இஸ்லாம் அல்லாத சிந்தனா வாதத்தின் கடும் பிடியாளர்களோடு ,ரசூல் (ஸல்) பலத்தோடு இருந்த சந்தர்ப்பத்திலோ அல்லது எதிர்க்க பலமற்று இருந்த சந்தர்ப்பத்திலோ எவ்வாறு நடந்து கொண்டார்கள் ? என்ற விளக்கத்தை சுற்றியே எம்மை பார்க்கத் தூண்டவேண்டும். அதன்படி மனித நேயம் என்ற எல்லைக்குள் இஸ்லாமிய சிந்தனா வாதத்தை பரிகசிக்காத ,எதிர்க்காத மனிதர்கள் மீது ஒரு கண்ணியமான உறவை பேணுதல் என்பதும் இஸ்லாத்தின் கட்டளை என்பதை சுன்னா தெளிவாகவே எமக்கு காட்டி நிற்கும் . 

                                                 ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் முஸ்லீம்களின் நடத்தை என்பது இந்த வஹி வழிகாட்டலுக்கு மாற்றமாக , தலைகீழாகவே அமைந்துள்ளது !! (அதே நேரம் அல்லாஹ்வின் உதவியையும் ,பொருத்தத்தையும் வேறு எதிர்பார்க்கிறார்கள் ! )அதாவது அந்த நடத்தை நிராகரிக்கும் சிந்தனா வாதத்தோடு சமரசம் செய்தல் , இணங்கிப் போதல் , அந்த 'குப்ரிய ' சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பிற்கு அமைந்த வாழ்வியல் வாதங்களுக்கு சார்பாக இஸ்லாத்தை திரித்துக் கூறுதல் ,பேசவேண்டிய தருணங்களில் மௌனம் காக்கத் தூண்டுதல் போன்ற நடத்தைகளின் ஊடாக 'குப்ரை' திருப்திப் படுத்துவதோடு , விரல் நீட்டி இந்த இயக்கத்தின் நடத்தை போல் எமது நடத்தை இல்லை , அந்த அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருகிறது , இவர்கள் தீவிரவாதிகள் என காட்டிக் கொடுத்து குப்பார்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தான் இனி வாழ்க்கை உள்ளது; என செயல்படவும் தொடங்கி விட்டார்கள் .

                                            கீழே வரும் சம்பவங்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் போது  , நிராகரிப்பவர்களின் அதிகாரத்தின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ வாழும் நிலை ஏற்பட்டால் ஒரு முஸ்லிமின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறந்த சான்றாக அமைகின்றது .

                                      ரசூல் (ஸல் ) அவர்கள் ஒருமுறை குறைசிக் காபிர்களின் கடுமையான நக்கலுக்கும் ,நையாண்டிக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது . அப்போது அந்த காபிர்களின் முன் நின்று கோபப்பட்டவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) பின்வருமாறு கூறினார் ." குறைசிகளே ! நான் சொல்வதை சற்று கவனியுங்கள் . எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக ! உங்களிடத்தில் நான் உங்களை அழிவிற்கு இட்டுவிடும் ஒரு முடிவை கொண்டே வந்துள்ளேன் . (அதாவது அதி விரைவாக உங்கள் கதை முடிந்து விடப் போகிறது )"என்ற  இவரின் இந்த ஆவேசமான வார்த்தைகள்  குறைசிகளை திடுக்கிட வைத்தது. 

                                                      இதே போல இன்னொரு சம்பவம் இது உமர் (ரலி ) இஸ்லாத்தை தழுவிய நேரம் நடந்தது . அவர்கள் தான் இஸ்லாத்தை தழுவிய செய்தியை யாரிடம் சொன்னால் அது பகிரங்கமாகும் ? என விசாரித்ததில் 'ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜுமகி 'என அறிந்து அவனிடம் சொன்னார்கள் .அவன் மக்கள் மத்தியில் சென்று "ஓ  குறைசிகளே !கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான் " என்று கத்தினான் . அவனோடு கூடச் சென்ற உமர் (ரலி ) " இல்லை இவன் பொய் கூறுகிறான் .நான் மதம் மாறவில்லை .மாறாக முஸ்லிமாகி விட்டேன் ." என்று கூறியவுடன் . காபிர்கள் ஓன்று கூடி அடிக்க ஆரம்பித்தார்கள் உமர் (ரலி )யும் அவர்களோடு சண்டையிட்டார்கள் .இறுதியில் அவர்கள் களைத்து சோர்ந்து விடும் நிலைக்கு வந்த போது கூறினார்கள் . "உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஓன்று மக்கா உங்களுக்கு அல்லது எங்களுக்கு என ஆகிவிடும் " என்று கூறினார்கள் .

                                   இந்த சம்பவத்தின் பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) வந்த உமர் (ரலி ) அல்லாஹ்வின் தூதரே ! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தானே இருக்கிறோம் ?" எனக் கேட்டார்கள் .அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் "ஆம் !எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தான் இருக்கிறீர்கள் " என்று கூறினார்கள் .அப்போது உமர் (ரலி )! "இனி நாம் ஏன் மறைவாக செயற்பட வேண்டும் ? இனி சத்தியத்தை வெளிப்படையாக கூறியே ஆகவேண்டும் " எனக் கூறியவராக இருந்த சொற்ப முஸ்லீம்களை இரண்டு அணியாக பிரித்து ஒரு அணிக்கு ஹம்சா (ரலி ) அவர்களை தலைமைதாங்க வைத்து மறு அணிக்கு தான் தலைமை தாங்கியவராக புழுதி பறக்க அணிநடை சென்று கவுபாவுக்குள் நுழைந்தார்கள் .(இதன் பின்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உண்மைக்கும் பொய்க்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் எனப் பொருள் படும் ' அல் பாரூக் ' என்ற பெயரை உமர் (ரலி )க்கு சூட்டினார்கள் .) காபிர்கள் கதிகலங்கிப் போனார்கள் .

                          இந்த சம்பவங்கள் எல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருந்த நிலையில் தான் நிகழ்ந்தவை . இன்று காவி அணிந்த காழ்ப்புணர்ச்சிகள் குர் ஆணை மொழி பெயர்த்து எம்மீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்புகின்றன !? 'அபூலஹபை விமர்சித்த சூராவைக் காட்டி இப்படி பேசும் ஒருவனுக்கு இறைவனாக இருக்க தகுதி இல்லை என ஒரு தரக்குறைவு தம்பட்டம் அடிக்கிறது !!.அஹ்லாக் ,அஹ்லாக் என ஆதாரம் காட்டி இஸ்லாத்தை ஒரு மதமாக முன்வைத்து அதன் சித்தாந்தப் பெறுமானம் பேசப்படாத குறையே இந்த குறைமதிகள்   'வஹியை இழுத்து கேலித்தனம் செய்ய காரணமாக ஆகிவிட்டது!! 

                        இது   இஸ்லாத்தை சாகடித்து ஒரு சிறுபான்மை வாழ்வு எமக்கு அவசியமா ? என சிந்திக்க வேண்டிய தருணம் .ஓ முஸ்லீம் உம்மத்தே ! எம்மிடம் மட்டுமே ஒரு தெட்டத் தெளிவான வாழ்வியல் வழிமுறை உண்டு என்பதே எமது அசைக்க முடியாத அகீதா . யாரும் வெறுக்கும் நிலையிலும் மறுக்கும் நிலையிலும் கிண்டலடிக்கும் நிலையிலும் இந்த சத்தியமே வெற்றியடையும் என்பதும் எமது அகீதா . அல்லாஹ்வுடைய அருள் என்பது அவன் எங்களுக்கு தந்திருக்கும் வாழ்க்கை முறைதான் . 'வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு அல்லது இஸ்லாத்தோடு மரணித்தல் 'என்பது எமது முடிவாக மாறும் பட்சத்தில் இஸ்லாம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற எந்த நிலையிலும் கண்ணியத்தோடு  வாழும் என்பது வரலாறு மட்டுமல்ல நாம் எதிர் கொள்ளும் நிதர்சன நியாயமும் ஆகும் ..

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் .


           இந்த பதிவு சித்தாந்த ரீதியில் முதலாளித்துவ வடிவத்தை முன்வைக்கும் அடிப்படையில்  எழுதப்பட்டதல்ல .நிகழ்காலத்தின் உண்மைகளை அரசியல் தரத்தில் மனித சமூகம் புரிந்து கொள்ள  வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு சிறு முயற்சியாகும் .

                           ஒவ்வொரு தேசியமும் தனது எல்லைகளுக்குள் நலனையும் நியாயத்தையும் பேண முற்படும் போது . அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் மனிதன் கருத்தளவில் மிருகத்தை விட கேவலமாகப் பார்க்கப் படுகிறான் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் .

                            இவ்வாறே ஒவ்வொரு தேசியமும் தனக்குள் பெரும்பான்மை எனும் ஜனநாயக நியாயத்தில் கரைந்து போகும் போது இனவாதம் ,மதவாதம் என்ற உருவமெடுத்து  பேரினவாதம் என்ற பார்வையில் சிறுபான்மை அடக்குமுறை அரசியலாக்கப் படுகின்றது . இப்போது அது தவிர்க்க முடியாமல் எஜமான் அடிமை என்ற கீழ்த்தரமான தேசிய  அரசியலாகின்றது .

                                                        இந்த சாபக்கேடான பார்வைகளுக்குப் பின்னால்  
அவைகளை இயக்கும் தரத்தில் அமர்ந்திருப்பது முதலாளித்துவம் தான் என்பதை மறுப்பவர்கள் முடிந்தால் தங்கள் நியாயங்களை சொல்லட்டும் .சுயநலம் , தான்தோன்றித்தனம் என்பவற்றை தவிர அதிகாரங்களோ அரசியலோ இன்று ஆதிக்கத்தில் இல்லை .


                                                     U .N இன் வீட்டோ அதிகாரம் முதல் , N A T O வின் சர்வாதிகாரம் வரை சர்வதேச சட்டங்களும் ,அமைப்புகளும் சுயநலத்தில் அல்லாமல் இயங்கவில்லை என்பதை நியாயப்படுத்த தைரியமுள்ள ஒருவரை வரச் சொல்லுங்கள் . 

                                                     மதச் சார்பின்மை என்ற மதத்தின் கீழ் ஆளப்படுவதே நியாயம் எனக் கூறிவிட்டு ஆடு புலி ஆட்டமாக சிறுபான்மையை ஜனநாயக முற்றுகையில் வெட்டுக்காய் ஆக்கி சந்தர்ப்ப வாத அரசியலில் குளிர் காயும்  இந்தியா , இலங்கை போதுமே முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்க .

                                                     அமெரிக்கா ஈராக்கிலோ , ஆப்கானிலோ புகுந்த அரசியலுக்கும் , பாலஸ்தீன விவகாரத்தின் சர்வதேச அதிகார சக்திகளின் பார்வை , பிரான்ஸ் மாலி மீது ஆக்கிரமித்த அரசியலுக்கும் , அல்லது இந்தியா இலங்கையில் அமைதி காப்பு போர்வையில் அனுப்பிய I .P .K .F இராணுவத்திற்கும் , சோமாலியாவின் வறுமைக்கு நிவாரணம் கொடுத்தேன் பேர்வழி என்ற போர்வையில் நுழைந்து நிர்வாணமாக அடிவாங்கி வெளியேறிய U .S மரின்களுக்கும்  இடையில் ஒரு பொதுத் தொடர்பு உண்டு .

        அல்லது தனது அரசியல் இலாபத்துக்காக U .S மரின்கலுக்கு எதிராக மக்களை திருப்பிய யுத்தப் பிரபு ஜெனரல் பரா ஐடிட்டுக்கும் , பர்மிய கோரப் படுகொலைகளுக்கும் , அதை எச்சரிக்கிறேன் பேர்வழி என ஏறத்தாள எல்லாம் முடிந்த பின் தலைமைத்துவ முகம் காட்ட பர்மா வந்த துருக்கியதூதுவர்கள் போன்ற சம்பவங்களின் பொதுவான  இடைத்தொடர்பு சமூக நலன் என்பதைவிட சாக்கடை முதலாளித்துவ அரசியல் தான் . 

                                செர்பிய இராணுவ முகாம்களில் பொஸ்னிய முஸ்லீம் பெண்கள் கிறிஸ்தவ சிப்பாய்களின் கருக்கொள்ளப்படும் வரையான காம  வெறியாட்டத்தின் முன் சிதைக்கப் பட்டபோது , ஈராக்கின் முஸ்லீம் பெண்கள் மீதான அமெரிக்க இராணுவ வெறியாட்டம் வெளித்தெரிந்த போதோ அடங்கி இருந்த மனித உரிமை ,பெண்ணுரிமை அமைப்புகள் ஆப்கானில் ஒரு பெண்ணின் கழுத்தை சிராய்த்து சென்ற ஒரு தோட்டாவுக்குப் பின் துள்ளி எழுந்த பிரச்சார அரசியலும் இந்த முதலாளித்துவ சுயநலப் பார்வையின் வடிவமே .

                                       ஓ மனித சமூகமே ! நீ நீதியை தேடினால் நியாயத்தை தேடினால் உனது மௌனத்தை உடைத்து சரியானதை புரிந்து கொள்ள முயற்சி செய் . உலகின் சம்பவங்களை கோர்த்துப்பார் ஒரு உண்மை உனக்குப் புரியும் அது இந்த சர்வதேச அநியாயக் காரர்கள் ஒட்டுமொத்தமாக பயங்கர வாதமாக விரல் நீட்டிக்காட்டுவது இஸ்லாத்தின் மீதே ஆகும் . அநியாயம் அதைப் பார்த்து அஞ்சுகிறது என்றால் நியாயம் அதன் பக்கம் தான் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேறு வார்த்தை தேவையில்லை .

1 comment: