Tuesday, November 13, 2012

வெலிக்கடை சிறை யுத்தம் ஒரே பார்வையில் .....


கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த  வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட கலவரம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். இருப்பினும் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அத்துடன் காயமடைந்த நிலையில் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் இவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். விசேட அதிரப்படை சிரேஷ்ட அத்தியட்சகர் சீ. ரணவனவும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குகிறார்.
 
சிறைக் கைதிகள் மத்தியில் பாவனையிலுள்ள போதைப் பொருட்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றைப் பறிமுதல் செய்யும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் நேற்று மாலை சோதனை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்த வேளையிலேயே கைதிகளுக்கும் படையினருக்குமிடையில் மோதல் வெடித்துள்ளது.
 
சிறைச்சாலையிலுள்ள ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அதிலிருந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
கைதிகள் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர். இருப்பினும் இச் சம்பவத்தினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாப்பதற்காக உடனடியாக வெலிக்கடை சிறைச்சாலை பிரதான வீதி மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திசை திருப்பப்பட்டன. இருப்பினும் துப்பாக்கிச் சூடு காரணமாக அப் பகுதியில் நின்றிருந்த பொலிசார், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளனர்.
 
சுமார் 4.30 மணியளவில் ஆரம்பித்த மோதல் சம்பவம் கலவரமாக வெடித்து 5 மணித்தியாலங்கள் நீடித்த நிலையில் இரவு 9.30 மணியளவிலேயே நிலைமையை படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சுமார் 2000க்கும் மேற்பட்ட படையினர் உடனடியாக அங்கு பாதுகாப்புக் கடமைக்காக வரவழைக்கப்பட்டனர். மாலை 6 மணியளவில் படையினர் சிறைச்சாலைக்குள் நுழைய முற்பட்ட போதிலும் கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதித்தே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
 
இச் சமயம் அப் பகுதியில் முற்றாக மின்சாரம்  துண்டிக்கப்பட்டதுடன் கைதிகள் தப்பிச் செல்ல முடியாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் சிறையிலிருந்து வெளியேறி வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சகர வண்டி ஒன்றில் ஏறி தப்பிக்க முனைந்த மூன்று கைதிகள் ஸ்தலத்திலேயே படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான கைதிகளைக் கொண்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் 1983 ஆம் ஆண்டு வெடித்த கலவரத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கலவரம் இது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்திலும் இதேபோன்றதொரு கலவரம் வெடித்ததில் 25 கைதிகளும் 4 பொலிசாரும் காயமடைந்திருந்தனர். 
 
இதேபோன்று 2010 ஆம் ஆண்டிலும் சிறைக்கைதிகள் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்யும்  நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போதும் மோதல்கள் வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட பொலிசாரும் சிறைக் காவலர்களும் காயமடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
இதற்கிடையில் சிறைவாசம் அனுபவித்துவரும் பாதாள உலகைச் சேர்ந்த இருவரே இந்தக் கலவரத்திற்கு தலைமை தாங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பாதாள உலக அங்கத்தவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன்பொருட்டே கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ச்சியாக பொலிசார் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
வெலிக்கடை சிறைக்கலவரத்தின்போது உயிரிழந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹமட் ரம்சதீன் நௌபர் எனும் கைதியின் சடலத்தை இதுவரை அவரது உறவினர்கள் பொறுப்பேற்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் உட்பட மேலும் 4 கைதிகளின் சடலங்கள் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் சடலங்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
வெலிக்கடை சிறைக்கலவரத்தின்போது படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 27 கைதிகளில் இருவர் முஸ்லிம்களாவர். 
 
இச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த முஹமட் சலாகுதீன் அஸ்வர்தீனின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தின்போது கொழும்பு புதுக்கடையில் வசித்துவந்த முஹமட் அஸ்வர்தீன் (வயது 40) என்பவரும் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இவரது ஜனாஸா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் ஒரு வார காலத்திற்கு முன்னர் இவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகவும் 1500 ரூபா பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு அவரை மீட்பதற்கிருந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தனர்.
 
"நவம்பர் 4 ஆம் திகதி அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் அவருக்கு 1500 ரூபா தண்டப்பணத்தை அபராதமாக விதித்தார். இருப்பினும் குறித்த பணத்தைச் செலுத்துவதற்கான வசதி எம்மிடம் இருக்கவில்லை இன்று திங்கட்கிழமை (12.11.2012) குறித்த பணத்தைச் செலுத்திவிட்டு அவரை மீட்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் நேற்றுக் காலை எமது வீட்டுக்கு வந்த பொலிசார் அஸ்வர்தீன் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க வருமாறும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். பொலிஸ் பிரேத அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு தலையில் துப்பாக்கிச் சூடுபட்ட நிலையில் அஸ்வர்தீனின் சடலம் இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்" என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
 
மூன்று பிள்ளைகளின் தந்தையான அஸ்வர்தீன் அன்றாட கூலித் தொழில்புரிபவர் எனவும் இவர் ஏன், எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான காரணத்தை இதுவரை பொலிசார் தம்மிடம் தெரிவிக்கவில்லை எனவும் அவரது தாயார் பாத்திமா கனி கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.
 
வெலிக்கடை சம்பவத்தில் முஸ்லிம் கைதிகள் எவரும் உயிரிழக்கவில்லை என்ன ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும் இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி அஸ்வதீனுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹமட் ரம்சுதீன் நௌபர் என்பவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள பெயர் விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment