Friday, October 25, 2013

முஸ்லீம் எனும் அடையாளத்தை விட்டுக் கொடுத்தால் நாம் யார் !?

(ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ( இறுதிப் பகுதி )

  அந்த 1990 அக்டோபர் 29 ம்  திகதி யாழ்ப்பாண முஸ்லீம் பகுதி அதிகாலையிலேயே விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப் படிருந்தது . சேம்பரில் ஏற்றப்பட்ட தோட்டாக்கள் எம்மில் பதியும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது .ரிகரை நெருங்கிய புலி விரல்கள் அழுத்தத் துடிக்கும் ஆசையோடு துருதுருத்துக் கொண்டிருந்தது. 'மெக்சிமம் ' பிடுங்கி விட்டு விரட்டி அடிப்பது மட்டும்தான் கட்டளை என்பதால் முஸ்லீம் மூளைகளை சிதறடிக்கும் இரத்த விளையாட்டுக்கு இப்போது சந்தர்பம் இல்லையே என அந்த ஆயுத பாணியான  வீர வேங்கைகள் வெறுப்போடு வெறுங்கை சிவிலியன்களான எம்மை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

     பின்னாளில் இளம்பருதி என அழைக்கப்பட்ட அந்நாள் ஆஞ்சநேயர் புலிகளின் கட்டளையை அறிவிக்கிறான் . ("பராக் பராக் இதனால் (சோனி )எனப்படும்) முஸ்லீம்களுக்கு அறிவிப்பது என்வென்றால் கிழக்கு பகுதியில் வாழும் முஸ்லீம்களின் செயல்களால் கோபாவேசத்தில் துடித்துக் கொண்டிருக்கும் கிழக்குப் புலிகளின்  முஸ்லீம்  வேட்டைக்கு நீங்கள் உள்ளாகி அழிந்து போகாமல் இருக்க உங்களை உயிரோடும் மானத்தோடும் அனுப்பி வைக்கிறோம் " என்ற முடிவுதான் அதுவாகும் .வேடிக்கையான நியாயம் !

   ஒரே இயக்கம் ,ஒரே தலைவர் ,ஒரே தலைமை ,ஒரே கட்டளை என நேற்றுவரை பேசியவர்களின் இந்த வார்த்தைகள் விசித்திரமாக இருந்தது ! கிழக்குப் புலிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அந்த 1990 களில் அவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் !? பிரபாகரனுக்கு வாகரைப் பாலம் அப்போதே சிம்ம சொப்பனமாகவா இருந்தது !? என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க குறைந்த பட்சம் கிழக்குப் புலிகள் வடக்கில் வந்து ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியாத ஒரு புலித்  தலைமை கேலிக் கூத்தாக இல்லையா !?

   இந்த சம்பவத்தை   நியாயம் காட்ட விடுதலைப் புலிகளாலும் ,இன்று வரை உள்ள அதன் வால்களாலும் ,எஞ்சி சிதறிப் போயுள்ள அதன் நகங்களாலும் ,சதைகளாலும் , சிங்கத்துக்கு சாமரம் வீசும் முன்னாள் உறுப்பினர்களாலும் முடியவே முடியாது . யாழ் பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்த ராஜா சுடப்பட்டதட்கும் மன்னார் அரச அதிபர் மஹ்ரூப் சுடப் பட்டதற்கும் இடையில் ஒரு பொதுக் காரணம் இருந்தது . அது இலங்கை இராணுவத்தோடு , அரசோடு சேர்ந்து புலிகள் விரும்பாத நடத்தையில் அவர்கள் ஈடு பட்டார்கள் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் இருக்கும் உண்மையாகும் .

  ஆனால் வடக்கு கிழக்கின் முழு முஸ்லீம் சமூகத்தையும் விடுதலைப் புலிகள் குறிவைத்த இரத்த தாகத்தின் பின் ஈழ விடுதலை இலட்சியத்தை தாண்டிய ஒரு 'அசைன்மெண்ட் பொலிடிக்ஸ் 'இருப்பது  நிரூபிக்கப் பட இந்தியன் றோ போல ,அமெரிக்க C .I .A போல , இஸ்ரேலின் மொசாட் போல முஸ்லீம்களாகிய எம்மிடம் உளவுப் பிரிவில்லை . அல்லது இந்த உளவுப் பிரிவுகள் போலவே முஸ்லீம் எதிர்ப்பு என்ற பொது அஜன்டாவுக்குள் புலிகள் வந்ததில் இவர்களை இணைத்து சந்தேகப் படாமல் இருக்கவும் முடியவில்லை .

 " மட்டக் கிழப்பான் ...." என கிழக்கு முஸ்லீம்களை கீழ்த்தரமாக பார்க்கும்  சாதீயத்தின் ஏதோ ஒரு வடிவம் வடக்கு முஸ்லீம்களிடம் ஒட்டி இருந்தது . முஸ்லிமை முஸ்லிமே கீழ்த்தரமாக பார்க்கும் இந்த அசிங்கத்துக்கு சூப்பரான ஆப்பு விடுதலைப் புலிகளால் கிடைத்தது . குப்பார் குப்பார் தான் . தாகூத் தாகூத் தான் ;இங்கு இஸ்லாம் முஸ்லீம் என்ற எதிரியின் பொதுப் பார்வைக்குள் ஒன்று சேர்க்கப் பட்டே அடிக்கப் படுவோம் என்ற  ஒரு பொது உண்மை அப்போது எனக்குப் புரிந்தது .

 இங்கு சாபி ,ஹனபி ,ஹன்பலி , மாலிகி என்றோ ,தப்லீக் , ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ,சலபி , தவ்ஹீத் என்றோ அரபி ,அஜமி என்றோ குப்பார்கள் எம்மை பார்க்கப் போவதில்லை . எமது தனித்துவம் வெளிப்படும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் நிச்சயம் நாம் வேட்டை யாடப்படுவோம் . நடந்ததும் அதுதான் ,நடப்பதும் அதுதான் . அதற்காக முஸ்லீம் என்ற அடையாளத்தை என்றும் எம்மால் விட்டுக் கொடுக்கவா முடியும் !
  

2 comments:

  1. மாஷா அல்லாஹ்
    ஒரு உம்மத் என்கின்ற சிந்தனை முஸ்லீம்களிடம் தான் இல்லை
    எதிரியோ எம்மை ஒரு உம்மத்தாகத் தான் பார்த்து வேட்டையாடுது
    என்கிற உண்மையோடு சோனியின் பதிவுகளை முடிக்கின்ரீர்.

    ஆனால் எதிரிகளின் நிலைப்பாடுகளை தொடராக எழுதுங்கள். எம் முஸ்லீம் உம்மத்த்தின் ஒற்றுமை அதிலிருந்தாவது பிறக்கட்டும்.

    ReplyDelete