Wednesday, October 2, 2013

ஈழப் போராட்டத்தின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ....(PART 04)


              விடுதலைப் புலிகளே ! உங்கள் இனத்துக்கு எதிரான ஒரு கொடூரமான ஒடுக்கு முறைக்கு எதிராகத் தானே ஆயுதம் ஏந்தி போராடப் புறப்பட்டீர்கள் . பின் ஏன் அதே தவறை முஸ்லீம்களான எம்மீது செய்தீர்கள் !? அந்த 1990 அக்டோபர் நாட்கள் ஒரு ஆறாத காயமாகவே எமக்குள் ஆகிவிட்டது .

                நாம் துரோகிகளாம்!? காட்டிக் கொடுத்தோமாம்!? ஸ்ரீலங்கா ஆர்மி முதல் இந்தியன் ஆர்மி வரை பந்தம் பிடித்து பக்குவமாய் விரல் நீட்டி காட்டிக் கொடுத்து 'சம்திங்' வாங்கியோர் உங்களில் நிறையப்பேர் உண்டு ! அல்பிரட் துறையப்பவுக்கும் ,மாத்தையாவுக்கும் ஒரே தீர்ப்பு .அவர்களை மட்டும் துரோகிகள் ஆக்கினீர்கள் !?


                        முஸ்லீம்களை மட்டும் ஏன் கொத்தோடு குலையாக துரோகிகள் ஆகினீர்கள் !? காட்டிக் கொடுத்தவர்கள் முழுச் சமூகத்தோடும் சென்றா காட்டிக் கொடுத்தார்கள் !? இன வெறிக்கு தம்பி  பிரபாகரனின் தமிழ் ஈழ  அகராதியில் துரோகி என  ஒரு ஓத்த சொல் உண்டென்பதை அந்த அக்டோபர் நாட்கள் நன்றாகவே கற்றுத் தந்தது .

               வடமாகாண முஸ்லீம்களை பலவந்தமாக விரட்டி அடித்தது முதல் ,காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நிராயுத பாணியான முஸ்லீம்களை விதம் ,விதமாக 'பொசிசன் ' எடுத்து கெட்டிக்காரத்தனமாக சுட்டுக் கொன்றது முதல் இறுதி யுத்தத்தின் தொடக்க  வரிகளில் முதூர் முஸ்லிம்களின் இரத்த வரிகளால் 'ஹைலைட் ' செய்தது வரை அப்பட்டமான ஒரு இனக்  குரோதம் வெளிப்படுகிறது . 

                அநீதியை எதிர்ப்பது ,அநீதிக்கு எதிராக தோள் கொடுப்பது இஸ்லாத்தின் பொது விதி . இங்கு முஸ்லீம் ,காபீர் என்ற பாகுபாடு பார்க்காமல் நீதி செலுத்தவே இஸ்லாம் பணிக்கிறது .

                    ஒருமுறை மதீனாவில் வைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) முன்பொருமுறை மக்காவில் இருந்த குறைசித் தலைவர்கள் அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த நிலையில் செய்து கொண்ட அநீதிக்கு எதிரான 'ஹிஸ்புல் புலூல் ' என்ற ஒப்பந்தம் பற்றி குறிப்பிடும் போது "இன்று அவ்வாறான ஒரு ஒப்பந்தம் நிகழும் சந்தர்ப்பம் வந்தால் நான் அதில் பங்களிப்பேன் " என கூறியுள்ளார்கள் .

                    நீதி செலுத்துதல் என்ற பொதுப்பண்பை ஊக்குவிக்கும் ஒரு அழுத்தமான கருத்தாகவே இதை கொள்ளமுடியும் . மாறாக குப்பார்களுடன் இஸ்லாத்தின் விதிகளை மீறி உறவுபூண்டு சூழ்நிலைகளை எதிர்கொள்தல் என்பதாக இந்த கருத்து அமையாது .

               ஆனால் இந்த விடயங்கள் பற்றி பூரண தெளிவில்லாத முஸ்லீம் உம்மா அந்த ஈழப்போரின் சூடான நாட்களில் சிங்கள இன வெறியர்கள் தமிழர் களுக்கு எதிராக செய்த கொடுமைகளை விரும்பவோ ,ரசிக்கவோ இல்லை .கவலை கொண்டது . தன்னால் என்ன செய்ய முடியும் என ஒருகணம் சிந்தித்தது .

                                                             ஆனால்  அநீதிக்கு அநீதியால் பதில் சொல்லும் தமிழர்களது நடவடிக்கைகளையும் முஸ்லீம்கள் விரும்பவில்லை .இந்த முரண்பாட்டுப் பிரிகோடு ஈழப் போராட்டத்தில் வட ,கிழக்கு முஸ்லீம்களை பூரண பங்காளர்களாக மாற்றத் தவறியது . 

                           இருந்தும் விடுதலைப் புலிகளோடும் , ஏனைய தமிழ் இயக்கங்களோடும் முஸ்லீம்களில் சிலர் பூரண பங்காளர்களாக இணைந்தனர் . களமாடினர் களப்பலி ஆகினர் .அதேபோல தென்பகுதி முஸ்லீம்களில் சிலர் இலங்கை அரச படையில் இணைந்தனர் களப்பலி ஆகினர் .பூரண விளக்கமின்மை மற்றும் சூழ்நிலைத் தாக்கங்கள் இதற்கு காரணமாக ஆகியது .

                 குமுதினிப் படகில் சென்ற தமிழ் சிவிலியன்களை கொடூரமாக படுகொலை செய்த இலங்கைப் படையினரையும் முஸ்லீம்கள் வெறுத்தனர் .அதே போல அனுராதபுரத்தில் சிங்கள சிவிலியன்களை  படுகொலை செய்த புலிகளையும் முஸ்லீம்கள் வெறுத்தனர் .

           எனவே காட்டிக் கொடுத்தோம் இலங்கை இராணுவத்தோடு ஒத்துழைத்தோம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மட்டுமல்ல அடிப்படை இல்லாதது . எனவே முஸ்லீம் சமூகத்தின் மீதான உங்கள் அநீதி தெளிவாகவே 'பொட்டு வைத்த ' யூதத் தனம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
                                                                                    ( இன்ஷா அல்லாஹ் தொடரும் ..)

                  

No comments:

Post a Comment