Sunday, October 6, 2013

ஈழப் போராட்டத்தின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ... (PART 5)

 இனவாதம் தலையில் ஏறி சிங்கள சிவிலியன் வாழ்வின் மீதும் அத்து மீறியதன் பின்னால் தமிழர் போராட்டம் தரமிழந்து போனதை வட ,கிழக்கு மாகாண முஸ்லீம்கள் உணர்ந்து கொண்டனர் .இன்னும் அந்த ஈழப் போராட்டத்தை ஈனர் போராட்டமாக மாற்றிய ஆரம்ப  நிகழ்வு 1990 அக்டோபரில் நிகழ்ந்தது .

              அது தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் வாழ்ந்த பூர்வீக குடிகளான முஸ்லீம் சமூகத்தை பலாத்கார வெளியேற்றம் செய்ததாகும். கேட்கப் பார்க்க ஆள் இல்லாவிட்டால் எதையும் செய்வானாம் என்பதுபோல் விடயங்கள் நடந்தன .


                'செக் பாயிண்ட் ' போட்டு உள்ளதை பிடுங்கி "இதெல்லாம் ஈழத்தின் சொத்து " என வீர வசனம் பேசி பகல் கொள்ளைக்கு 'பொலிடிகல் ' நியாயம் சொன்னது எனக்கும் என் சமூகத்துக்கும் அதிர்ச்சி அளித்தது .உலகமும் கண்டுகொள்ளவில்லை .

           ஏதோ மாமியார் வீட்டில் இருந்து மருமகளை விரட்டியது போலவே லண்டன் B .B .C யும் செய்தி வாசித்ததாக பின்னாளில் என் நண்பன் சொன்னான் .

          பின்பொருமுறை வேலுப்பிள்ளை பிரபாகரன் லண்டன் B .B .C யில் "நேரம் வரும்போது முஸ்லீம்களை மீள அழைப்போம் " எனக் கூறியபோது , 'டிவோர்ஸ் ' விடயத்தை 'கவுன்சிலிங் ' போட்டு முடித்த திருப்தியில் வடமாகாண முஸ்லீம்களை ஏதோ LTTE வீட்டு பொண்டாட்டி போல ஆக்கப் பார்த்தார் B .B .C யின் சங்கர் அண்ணா !

         அப்போது ஒரு உண்மை எனக்கு தெளிவாக புரிந்தது . அது தம்பியின் காட்டு தர்பார் இலங்கையில் இருக்க அதற்கு அண்ணரின் அரசியல் நியாயப் படுத்தல் லண்டனில் இருந்து ஒலிக்கிறது என்ற உண்மையாகும் .கடைசிவரை வடக்கு ,கிழக்கு முஸ்லீம் விவகாரம் ஒரு இனத்துடைப்பாக ,இன ஒடுக்கு முறையாக நோக்கப்படவே இல்லை .

             நிவாரணப் பிண்டங்களாகவே முஸ்லீம் உலகினாலும் நோக்கப்பட்டோம் . அகதி என்ற வார்த்தை எம்மைப் பார்த்து உச்சரிக்கப் பட்டபோது நெஞ்சம் வலித்தது .வெறும் இரண்டு மணி நேரத்தில் முஸ்லீம் சிவிலியன்களை அநியாயமாக கையேந்திகளாக மாற்றிய சாதனைக்காக ஈழத் தாய் கோழி அடித்து விடுதலைப் புலிகளுக்கு சாப்பாடு போட்டிருப்பாளோ இல்லையோ ,சமாதியில் இருக்கும் சேர் ! பொன்னம்பலம் இராமநாதன் திருப்தி அடைந்திருப்பார் . எப்படி ?

        1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லீம் கலவரத்தின் போது சேர் ! பொன்னம்பலம் இராமநாதன் முழுக்க முழுக்க சிங்களவர்களுக்கு சார்பாக முஸ்லீம்களுக்கு எதிராக பரிந்துரைத்தார் . இந்த வரலாற்றுப் போக்கில் இரு பேரினங்களும் முஸ்லீம் எதிர்ப்பில் தெளிவான உறவைக் கொண்டுள்ளன . இந்த கசப்பான முஸ்லீம் எதிர்ப்புணர்வு பிரபாகரனுடைய மரபணுவிலும் கலந்து போனது ஒன்றும் ஆச்சரியமில்லை .

                                                                  (இன்ஷா அல்லாஹ் தொடரும் )


No comments:

Post a Comment