Friday, October 11, 2013

ஆயுதக் கலாச்சாரத்தில் புதைந்த நியாயங்கள் ! ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ....(PART 06)
                      நான் பிறந்த பூமியில் கிடைத்த அனுபவங்கள் பல பாடங்களை எனக்கு கற்றுத் தந்தது . விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் இஷ்டம்போல் வடக்கு கிழக்கில் ஆட்டம் போட்டனர் . வட தமிழீழ எல்லையையும் ,தென் தமிழீழ எல்லையையும் பற்றி தெரியாதவன் கூட தோளில் ரைபிள் தொங்கும் துணிவில் எமக்கு முன்னாள் அரசியல் பேசினான் . அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் சிங்கள இராணுவத்தை சுடுவது என்பது மட்டுமே .

                      சித்தாந்தம் பேசிய இயக்கவியல்' சோத்துப் பார்சளாக ' பேசப்பட்டது. 1980 களின் தொடக்கத்தில் இருந்தே ஈழ விடுதலைப் போராட்டத்தின் அசுர வளர்ச்சி இயக்கங்களுடனான போட்டிகள் உள்ளார்ந்த படுகொலைகளோடு ,ஒவ்வொரு இயக்கமும் தன்னை நியாயப் படுத்தவும் ,மக்கள் ஆதரவை திரட்டிக் கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தது .

               ஆட்டைக் கடித்து ,மாட்டைக் கடித்து ,மனிதனைக் கடித்து ,கடைசியில் அவர்கள் கடவுளாக நம்பிய சிலைகளையும் விட்டு வைக்கவில்லை .கோயில் நகைகளும் கொள்ளையடிக்கப் பட்டன .குற்றங்கள் மாறி மாறி ஒவ்வொரு இயக்கங்கள் மீதும் போடப்பட்டது .'சீன் கொனரி , ரோஜர் மூர் போன்ற ஜேம்ஸ் பாண்ட் மூவியின் ஹீரோக்கள் போல தமிழர்களில் அதிகமானோர் தமிழ் இயக்கங்களை நம்பிக்கொண்டிருந்தனர் .

               ஆனால் 'ரெகுலா ' திரைப்படத்தில் இரத்தக் காட்டேரியாக வரும் 'கிறிஸ்டோபர் லீக்களை ' தான் தாம் வளர்க்கிறோம் என்பது மக்களுக்கு புரியவில்லை . அதைவிட புரியாதிருந்த விடயம் எல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய பயங்கரமான 'பிரடேடர்களை ' (கொடிய உயிர்க்கொல்லிகளை ) விடுதலைப் புலிகள் என்ற பெயரில் தாம் வளர்ப்பது புரியாமல் அந்தக் காலத்தில் வெளிவந்த திரைப்படங்களின் பெயர்களை ஒவ்வொரு இயக்கங்களுக்கும் சூட்டினர் !

LTTE - அலைகள் ஓய்வதில்லை .
EROS - தூரத்து இடிமுழக்கம் .
TELO - தூறல் நின்னு போச்சி .
EPRLF -  பயணங்கள் முடிவதில்லை .
PLOT - விடியும் வரை காத்திரு .

                    இப்படி பெயர் சூட்டி நிகழ்காலம் ,எதிர்காலம் பற்றிய எந்த அரசியல் பார்வையும் இல்லாமல் ஒரு ஆயுதக் கலாச்சாரத்தை தமிழர்கள்  கட்டிவளர்தனர் .மக்களுக்காக போராட்டமா ? போராட்டத்துக்காக மக்களா ?இந்தக் கேள்விக்கான விடை கேட்டவர்கள் 9MM பரிசோடு துரோகிகள் ஆக்கப் பட்டார்கள் . ராஜினி திரணகம போன்ற சிலர்  மட்டுமே சரித்திரமாக மாறினார்கள் .ஆனால் நியாயம் புதைக்கப்பட்ட இந்த படுகுழி மிக நீண்டது ஆழமானது எல்லா ஈழப் போராட்ட இயக்கங்களுக்கும் இதில் பங்குள்ளது  .

                     இது இப்படி இருக்க மனிதக் கேடயங்கள் என்ற போரியலையே இயக்கங்கள் நம்பியிருந்தன .விடுதலையின் விலைகள் என்ற பெயரில் ஒரு அவலமான இராணுவ கலாச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது .எல்லா இயக்கங்களையும் அழித்து விடுதலைப் புலிகள் தம்மை தனிப்பெரும் இயக்கமாக அறிமுகப் படுத்தியபோது அதை ஒத்துக் கொண்டார்கள் .

                     'கேடயமாய் எம்மை காத்த எம் மக்களே ! வாளாகவும் இனி மாறுங்கள் '... என்ற இவர்களது பிரச்சாரப் பாடலில் அவர்களே ஒத்துக்கொண்ட விடயமாகும் . ஒரு புறம் இன அழிப்பை பற்றி சற்றும் கவலைப்படாத சிங்கள பேரினவாதம் ! தமிழர்களை மணல் மூடைகளாக மாற்றிய அற்புதப் போராளிகள் என அதர்ம நியாயங்கள் விரிந்து சென்றன .

                     அழிவுகளையும் ,அழிப்புகளையும் பிரச்சாரப் படுத்தி ஆதரவுத் தளங்கள் ,நிதித் தேடல்கள் என தற்கொலை அரசியல் தரப்படுத்தப் பட்டது .விரிந்து சென்ற ஆயுதக் கலாசாரம் சூழலை ஆக்கிரமித்தது . காலப்போக்கில் சூழலாகவே மாறிப்போனது .பாடசாலையில் 'காந்தியை சுட்டது கோட்சே ' என ஆசிரியர் கூறினால் , 'சேர் சுட்டது எந்தவகை பிஸ்டல் !? பட்டது மார்பிலா நெற்றியிலா !? என கேட்கும் தரத்தில் மாணவர்களும் மாறிப்போய் இருந்தார்கள் .

                    வெற்றுத் தோட்டாக்களையும் , வெடிக்காத தோட்டாக்களையும் , எதோ முத்திரை சேகரிப்பு போல சிறார்கள் செய்யத் தொடங்கி இருந்தார்கள் . சாதீயம் தலைக்கேறிய தமிழ் சமூகத்தில் இராணுவ வியலும் இயக்க வடிவில் சாதிகளுக்குள் உட்புகுந்தன .

                                                     சாதாரண பிரச்சினைகளுக்கு கூட 'கிரனைட்டை '
கொண்டு வந்து மிரட்டும் தரத்தில் மனிதம் அங்கு கேள்விக்குறி ஆக்கப் பட்டிருந்தது ! இத்தகு சூழ்நிலையில் தான் முஸ்லீம்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் .

                     இந்த சூழ்நிலைத் தாக்கங்களில் முஸ்லீம் இளைஞ்சர்களும் இழுபடத் தொடங்கினர் .கௌரவ மிரட்டல்கள் மூலம் முஸ்லீம்களின் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டன .முஸ்லீம் உம்மத் தன்னைப் பற்றி சிந்தித்தது . தனது பாதுகாப்பு வாழ்வியல் உத்தரவாதம் பற்றி மிக ஆழமாகவே சிந்தித்தது .

          சமூக செல்வாக்கு மிக்க நபர்கள் தமது அறிவுக்கு எட்டிய வகையில் இதற்காக முயற்சி செய்தார்கள் .இவர்களது நோக்கம் எந்தப் பேரினவாதத்துக்கும் எதிராக ஆயுதம் ஏந்துவது அல்ல .தனது சமூகத்தின் சுய பாதுகாப்பு மட்டுமே .

              இங்கு நாவாந்துறையில் இருந்த தமிழனிடம் இருந்த 'கிரனைட் பற்றி அலட்டிக் கொள்ளாத விடுதலைப் புலிகள் யாழ்ப்பாண சோனக தெரு முஸ்லீமிடம் இருந்த 'கிரனைட் ' பற்றி தீவிரமான பார்வையே பார்த்தது . இஸ்லாமிய தமிழன் ஆக விரும்பாத 'காக்கா '(முஸ்லீம் ) கையில் ஆயுதம் இருப்பது ' ஜிஹாத் ' என்ற தெரியாத விடயத்தில் தெரிந்த வார்த்தையை போட்டு விளக்கம் கொடுத்து, முஸ்லீம்களை தமிழர்களுக்கு இன்னொரு எதிரியாக அநியாயமாக இனம் காட்டினர்  .

                                                               (இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும் )

                     

No comments:

Post a Comment