Saturday, October 26, 2013

வருகிறது முஹர்ரம் இப்படி வரவேற்போம் !

   ஈமான் கொண்டோரே !நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ;அன்றியும் ,சைத்தானின் அடிச்சுவடுகளை பின் பற்றாதீர்கள் .நிச்சயமாக அவன் உங்கள் பகிரங்க விரோதியாவான் .

        எனவே தெளிவான ஆதாரங்கள் உங்களிடம்  வந்த பின்னும் , நீங்கள் சறுகி விடுவீர்களானால் ,(உங்களை தண்டிப்பதில் )நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ;தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் .                                                    (சூரா அல் பகரா வசனங்கள் 208,209)


                 இன்னொரு முஹர்ரத்தையும் நாம் நெருங்கி விட்டோம் .ஆனாலும் அரசியல் அநாதைகளாக , கேட்பார் அற்றவர்களாக அல்லாஹ்வின் எதிரிகளின் சகல விதமான அடாவடித் தனங்களையும் சந்தித்தவர்களாகவே இந்த இஸ்லாமிய புதுவருடத்தையும்  அடைய இருக்கின்றோம் .வழமை போலவே ஒரு சராசரி நாளாகவா இந்த நாளும் முஸ்லிமை  வந்தடையப் போகின்றது ? 


                 ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய ஆண்டுக்கணிப்பின் இலட்சியவாத பேருண்மை ,ஒவ்வொரு முஸ்லிமையும் நான் யார் ? எங்கிருந்து வந்தேன் ? எதற்காக வந்தேன் ? எங்கே செல்லப் போகிறேன் ? எனும் வினாக்களுக்கு ஆழமான பதிலை புரியவைக்கும் ஒரு நிகழ்வாகும் .

                  ஒரு சிலவேளை மக்காவில் மிக ஆழமான காயம்பட்ட மூத்த சஹாபா பெருமக்களுக்கு அந்த உண்மை இயல்பாகவே புரிந்திருக்கும் .ஏனென்றால் இஸ்லாம் எனும் இலட்சியத்தோடு இல்லை அந்த இலட்சியமாகவே மாறி நின்று அன்று போராடியவர்களின் வெற்றி அத்தியாயம் இந்த ஹிஜ்ரத்தில் இருந்துதான் மைல்கல் ஆகின்றது .

                 முஹர்ரத்தின் வரவை இத்தகு வடிவத்தில் இருந்து நோக்கும் பக்குவம் எமக்கில்லை .காரணம் சத்தியத்தை உணர்ந்து அதன் அடைவுக்கான தியாகங்களை சுவையானதாக கருதும் மனப்பக்குவத்தில் நாமில்லை . அதற்கான அடிப்படைக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது . அதை உணர்ந்து கொள்ள இப்போது நாம் எத்தகு சூழ்நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல்களில் இருந்து விடயத்தை ஆராய்வது பொருத்தமானது .

                குப்ர் முற்றாக சூழ்ந்த ஆதிக்க கட்டமைப்பு , அதன் நாகரீக கலாச்சார பதிப்புகளோடு கூடிய அசிங்கமான வாழ்வியல் போக்கில் முஸ்லீம்களாகிய நாம் விரும்பியோ ,விரும்பாமலோ இழுத்து வரப்பட்டிருக்கிறோம் .அந்த வகையில் அத்தகு தாக்கங்களின் புரிதல்கள் ,நடத்தைகள் ,தீர்வுகள் என்பன ஒரு அன்றாட நிகழ்வாகவே போய்விட்டது .

           அது வருடக்கணிப்பு என்ற விடயத்திலும் இஸ்லாமியப் பார்வையும் தேடலுமற்ற ,அல்லது இஸ்லாமிய வருடக்கணிப்பின் வரலாற்றின் மீது  பூரண உளத் தாக்கமற்ற மனோபாவம் கொண்டவர்களாக முஸ்லீம்களாகிய எம்மை மாற்றியுள்ளது .ஆனாலும் ஒரு சம்பிரதாயமாக இந்த முஹர்ரத்தையும்  வரவேற்கிறோம் .

         ( ஆனால் எமது வாழ்வியல் நடத்தைகளின் வருடக்கணிப்பு பிரயோகம் என்பது ஆங்கில 'கலண்டரை ' அடிப்படையாக கொண்டு இடம்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது .இன்று எம்மில் ஒருவரிடம் இன்றைய திகதியை ,அல்லது குறித்த ஒரு நாளைப் பற்றி கேட்டால் ,ஆங்கில 'கலண்டர் ' பிரகாரம் பதில் சொல்வது சாதாரண இயல்பு .இது ஏன் என்றால் எது உலகின் அதிகார ஆதிக்க சக்தியாக இருக்கின்றதோ ,அந்த சிந்தனையின்  தாக்கமும் விருப்பு வெறுப்பும் மனித வாழ்வியலை தீர்மானிக்கும் விடயமாகிவிடும் . இந்த பொது விதியில் முஸ்லீம்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல .)

          முதலில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் மிகத் தெளிவான 'இஜ்திஹாதே ' ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய கலண்டர் முறையாகும் .இந்த விடயத்தில் உமர் (ரலி )யின் சமகாலத்திலோ ,அவருக்குப் பின்னாலோ எந்த ஒரு கலீபாவோ ,இமாமோ முரண்படவோ ,மாற்றுக்கருத்தோ கொள்ளவில்லை .

             இஜ்திஹாத் மூலம் பெறப்பட்ட முடிவு ஒரு இபாதத் என்பதிலும் எந்த இமாம்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகளும் இல்லை .அந்த வகையில் 1924 ம் ஆண்டு வரை இருந்த இஸ்லாமிய கிலாபா அரசின் சகல விதமான நிர்வாக நடவடிக்கைகளும் இந்த ஹிஜ்ரா  கலண்டரை அடிப்படையாக கொண்டே இடம்பெற்றுள்ளன . முஸ்லீம் உம்மாவும் தனது அன்றாட நடத்தைகளை ஹிஜ்ரா கலண்டரை அடிப்படையாக வைத்தே செய்தும் வந்துள்ளது ;என்பது மறுக்க முடியாத உண்மை .

          முஸ்லீம் உம்மத்தில் ஆங்கில ஆண்டுக்கணிப்பு நூதனமாக எப்போது உட்புகுந்தது? என்று பார்த்தால் ,இஸ்லாத்தின் அரசியல் அதிகார ஆதிக்கத்  தரம் வீழ்த்தப்  பட்டு குப்ரிய அதிகார ஆதிக்க வடிவத்தினுள் முஸ்லீம் கட்டுப்பட்டு போன பின்புதான் ஆகும் .எனவே இங்கும் ஆட்சிக்கும் வாழ்வியலுக்கும் இடையிலான தவிர்க்க முடியாத இடைத்தொடர்பு முஸ்லீம்களால் மிகக் குறிப்பாக நோக்கப்பட வேண்டியதாகும் . இஸ்லாமிய அரசற்ற பூரண  இஸ்லாமிய வாழ்வு முஸ்லிமுக்கு சாத்தியமே அற்றது .

                மேலும் உண்மையிலேயே ஆங்கில கலண்டர் முறை கிறிஸ்தவ மதத்தையும் ,சமரச பேரத்தின் அடிப்படையிலும் அதன் பின்னால் ஆண்டுவந்த மன்னர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ,நிர்ப்பந்த மாற்றங்களை சுமந்த வடிவமே ஆகும் .

        அத்தகு மேட்டுக்குடி அரசர்களின் பெயர்களையும் , நாள் மாத மாற்றங்களையும் , கிறிஸ்தவ மதவியலின் கோட்பாட்டிடமான ,கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்ற அடிப்படையையும் கொண்டு கட்டமைக்கப் பட்ட ஒரு கணிப்பு முறையே  ஆங்கிலக் கலண்டர் ஆகும் .எனவே இத்தகு முறைமையில் முஸ்லிமும் பங்களிப்பு செய்வது ஆழமாக சிந்திக்கப் படவேண்டிய விடயம் .

                           உதாரணமாக ஏப்ரல் 1ம் திகதியை முட்டாள்கள் தினமாக கூறுவதும் ,டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்து பிறந்த நாளாக பெயரளவிலாவது  கருதுவதும் சிறுவயது முதல் முஸ்லீம்களாகிய நாம் கடைப்பிடிக்கும் கணிப்பு முறையாகும் .இந்த நம்பிக்கையில்லாத நம்பிக்கையின் கீழ் இருந்துதான் எம்மை அறியாமல் ஒரு வேற்று நாகரிகத்தின் கருத்து ஆதிக்கம் ஏற்பட்டு விடுகின்றது . அதாவது 'பொசிடிவ் 'ஆகவோ 'நெகடிவ் 'ஆகவோ ஒரு வழிதவறிய குப்பாருக்காக முஸ்லீம்களாகிய நாம் பயன்பாட்டுப் போக இந்த ஆங்கிலக் கலண்டர் முறை ஒரு காரணமாகி விடுகிறது .

         இன்னும் உமர் (ரலி ) கலீபாவாக இருக்கும் அன்றைய பொழுதுகளில் ஆங்கிலக் கலண்டர் முறையும் ,இன்னும் வேறுபட்ட காலக் கணிப்பு முறைகளும் இருக்கத்தான் செய்தது . ஆனால் அதை எடுத்து பயன்படுத்துவதில் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த காரணத்தினால் தான் . ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாகரீகத்துக்கான கலண்டரை 'இஜ்திஹாத்' செய்திருக்கலாம் .

           எமது சத்திய  மீள் கட்டுமானமும் ,பூரண இஸ்லாமிய மயப்பட்ட நாகரீகத்தையும் இஸ்லாத்தின் அதிகாரத்தில் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் . அது அற்ற நிலையில் குப்பாரின் நரித்தனமான சதிகளில் முஸ்லீம்களாகிய நாம் சிக்குவது தவிர்க்க முடியாதது .அதற்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றே அவர்கள் எமக்கு கற்றுதந்துள்ள ஆங்கிலக் காலக் கணிப்பீட்டு முறையாகும் .

           சூழ்நிலை ,நிர்ப்பந்தம் ,தவிர்க்க முடியாமை போன்ற பதில்களோடு குப்ர் தெளிவாகவே தன்னைத் தழுவ அழைக்கிறது .எமது" செவிமடுத்தோம் வழிப்பட்டோம் " என்ற நடத்தை யாருக்காக? என்பதே எதிர்வரும் முஹர்ரத்தை முன்னிறுத்தி நாம்  தீர்மானிக்க வேண்டிய நேரமிது .நாம் முஸ்லீம்கள் என்ற அசைக்க முடியாத பதிலை சொல்ல ,செயலால் பூரணமாக காட்ட எமது கேடயமான கிலாபா அரசு இன்று அவசரத் தேவையாக இருக்கின்றது .அதன் கீழ் மட்டுமே இஸ்லாமிய வாழ்வோடு கூடிய எமது கண்ணியம் பாதுகாக்கப் படும் இன்ஷாஅல்லாஹ் .

         எனவே அவ்வழியில் சிந்திப்போம் , அதற்காக பிரார்த்திப்போம் ,அதன்வழி பூரண  தியாகத்தோடு முயற்சிப்போம் .இந்த உறுதிப்பாட்டுடன் இந்த முஹர்ரம் வரவேற்கப் படட்டும் .அல்லாஹு அக்பர் ....!.அல்லாஹு அக்பர் ....!

No comments:

Post a Comment