Tuesday, October 29, 2013

குறை மதியோடு இஸ்லாத்தின் மீது பகுத்தறிவை பாவிக்காதீர்கள் !


      இஸ்லாம் முஸ்லீம்களை பொறுத்தவரை வாழ்க்கையையே வணக்கமாக்கி உள்ளதோடு ,சில செயல்ரீதியான அடிப்படைக் கடமைகளையும் வணக்கமாக்கியுள்ளது . அந்த அடிப்படை வணக்கங்கள் சில பல அசைவுகளையும் ,நடத்தைகளையும் , நேரத்தையும் ,காலத்தையும் ,சில நிகழ்வுகளின் நினைவு கூறல்களையும் சம்பந்தப்படுத்தி அமைந்திருக்கும் .

       அகிலத்தின் ஏகபோக இரட்சகனான அல்லாஹ்வை உணர்ந்து ,புரிந்து ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமே முஸ்லீம்களாகிய நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவோம் .அவன் மனித சமூகத்திற்கு வழிகாட்ட தேர்ந்த அவனது இறுதித் தூதரான முஹம்மது (ஸல் ) அவர்களின் மூலம் எமக்கு கற்றுத்தந்த ,காட்டித் தந்த ,எதிர்வு கூறிய விடயங்களில் அவற்றை பௌதீக விதிகளுக்கு கீழ் இருந்து புரிந்து கொண்டாலும் ,புரியாவிட்டாலும் அது சரியானது ,தேவையானது என எவ்வித சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வோம் .அதுதான் (ஈமான் ) எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .


       அந்த ஈமான் என்ற விடயத்தில் இருந்துதான் நாம் முஸ்லிமா இல்லையா ? என்பதே தீர்மானிக்கப் படும்போது அத்தகு விடயங்களில் சந்தேகம் கொள்வது எவ்வாறு முடியும் !?ஆனாலும் மாற்று சிந்தனைகளாலும் ,இஸ்லாம் அல்லாத கோட்பாட்டு வடிவில் இருந்தும் வரக்கூடிய தப்பான பார்வைகள் தொடர்பில் பதில் அளிப்புகள் அவர்களை பூரண திருப்தி படுத்துமா ?என்பது சந்தேகமே .ஆனாலும் அவர்கள் புரியும் விதத்தில் பதில் கொடுப்பது எமது கடமையே .

    பகுத்தறிவு வாதம் என்பது பொதுவாகவே மனித நடத்தைகளின் பல விடயங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தும் .அதிலும் குறிப்பாக நாஸ்திக வாதத்துக்கு சார்பான பகுத்தறிவு பொதுவாகவே ஆஸ்திக வாதிகளின் நடத்தைகளை முற்றாகவே குறைகாணும் .குறித்த அச்செயல் பற்றி தேடல் இல்லாது குறுகிய நிலைப்பாட்டில் இருந்து கணிப்பீடு செய்து முடிவுகளை முன்வைக்கும் .

   இஸ்லாத்தில் இறைவழிபாடு மற்றும் அது தொடர்பான நடத்தைகளை ,அசைவுகளை வெறுமனே ஆன்மீக பரிபாசையில் புரிந்து கொள்ளும் போது பல விடயங்கள் பகுத்தறிவுக்கு எட்டாமல் போவது உண்மையே .உதாரணமாக தொழுகையின் அசைவுகள் ,ஹஜ் கடமையின் போது சைத்தானுக்கு கல்லெறிதல் போன்ற விடயங்களை குறிப்பிடலாம் .

       அதே நேரம் இத்தகு விமர்சன வாதிகள் ஒரு நாட்டின் இராணுவத்தை ,பொலிஸ் படையை ஒழுக்கவியல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செயல்முறையின் கீழ் பல அடிப்படை பயிற்று விப்புகளை , அசைவுகளை ,தொனிகளை வைத்திருப்பதை இட்டு எவ்வித விமர்சனமும் கொள்ள மாட்டார்கள் ! காரணம் கட்டுக்கோப்பான படையணிக்கு இவை கட்டாயமானது என இவர்களது உள்ளம் ஏற்றுக் கொண்டதே ஆகும் .

    ஒரு இராணுவ வீரன் தன் மேலதிகாரிக்கு முன் தன் உடலையும் ,கால்களையும் வித்தியாசமான முறையில் அசைத்துக் காட்டி தனது கையை ஒரு விசுறு விசிறி சல்யூட் அடிப்பதில் என்ன யுத்த தந்திரம் இருக்கிறது !?இதற்கும் அவன் எதிரியோடு சண்டை போடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது !? என எந்த பகுத்தறிவு வாதியும் கேள்வி கேட்பதில்லை ஏன் !?

                  ஆயுதங்களை ஒரே திசையில் ஏந்தியவர்களாக ஒரு ஒழுங்கில் கைகளையும் கால்களையும் வித்தியாசமான முறையில் அசைத்து செல்லும் இராணுவ அணிவகுப்பை எந்த பகுத்தறிவு வாதியும் ஏளனம் செய்வதில்லையே ஏன் !? அதற்கும் எதிரியோடு சமராடுவதட்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என எந்த பகுத்தறிவு வாதியும் கேள்வி கேட்பதில்லையே !?

    காரணம் இத்தகு பணிக்கு தவிர்க்க முடியாமல் ஒரு உறுதியான கட்டுக்கோப்பு அவசியம் என அவனது உள்ளம் ஏற்றுக் கொண்டதே ஆகும் . அதே போலவே ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தின் மூலம் ஒரு சிறப்பான விசேட பணிக்கு தயார் செய்யப் படுகிறான் .அப்பணி கூட்டாக தனியாக நிறைவேற்றும் நிலை நோக்கி பயிற்று விக்கப் படுகிறான் . அந்த வகையில் தான் இஸ்லாத்தின் வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன.

        இப்ராஹிம் (அலை ) என்ற இறைவனின் விருப்புக்குரிய ,விசுவாசத்துக்குரிய ஒருவர் 'ஹஜ்' என்ற இபாதத்தில் எமக்கு பயிற்று விப்பாளராக நியமிக்கப் பட்டுவிட்டார் .அவரது நடத்தையை தொடர்வதில் தான் அந்த பயிற்சித் திட்டம் பூரணமடைகிறது . அதன் ஒரு அம்சமே இந்த சைத்தானுக்கு கல்லெறியும் விடயமாகும் .இப்படிப் பார்த்தால் தனது கையை ஒரு வகையாக வளைத்து சல்யூட் அடிக்கும் சிப்பாய்க்கும் ,ஹஜ்ஜில் சைத்தானுக்கு கல்லடிக்கும் முஸ்லிமுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் . உண்மையை சொன்னால் முஸ்லீம் என்பவன் இறைவனின் இராணுவமே ஆகும் . உலகில் அவன் முன் இருக்கும் பணி மகத்தானது .

                                                                                  (  இன்ஷா அல்லாஹ் தொடரும்....)

                                                         
                                                                              

No comments:

Post a Comment