Thursday, September 18, 2014

'ஜம்மியத்துல் உலமாவின்' 75 இலட்சமும் இலங்கை அரசியலின் போக்கும் !

                                        முதலாளித்துவ முதலைகளின் முதலீடுகளுக்காக பரந்த 
அடிப்படையில் திறந்து விடப்பட்ட சந்தையாக இலங்கை இப்போது மாறிக்கொண்டு இருக்கிறது .அவர்களுக்கு சேவகம் புரியும் ஊழியர் தரத்தில் சிவிலியன் வாழ்வு சிக்கவைக்கப்பட்டுள்ளது .தாய்வானை போன்ற ஒரு செயற்கையான உல்லாச புரியாக சடுதியாக இலங்கை மாறினாலும் ஆச்சரியம் இல்லை .ஒரு சில நேரம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்ற ஜனாதிபதியின் கூற்றின் இரகசியம் அதுவாக கூட இருக்கலாம் . 

         இயற்கை வனப்பு மிக்க பல பகுதிகளில் அதிரடியான காணி சுவீகரிப்புகள் இடம்பெற்றுள்ளன .அதில் உல்லாச ஹோட்டல்கள் ,மற்றும் வெளிநாட்டு கம்பனிகளின் கட்டட நிர்மாணங்கள் வேகமாக இடம்பெறுகின்றன .அபிவிருத்தி ,மற்றும் வெளிநாட்டு வருமானம் என்ற மேட்பூச்சின் உள்நோக்கம் முதலாளித்துவ சுயநலமிகளின் பல்பக்க பக்கா இலாபமே .

       சமூக ஒழுக்கம் ,அதுசார் கலாசார விழுமியங்கள் மீது இன்று பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது .இந்த நாசகார அரசியல் மூலம் சீர்கேட்டை மையப்படுத்திய கசப்பான எதிர்காலமே எஞ்சப்போகிறது . இனவாத யுத்தத்தின் சடுதியான முடிவுக்கு பின்னால் சர்வதேசமும் கைகோர்த்து செயல்பட்டது இத்தகு சந்தை உருவாக்கத்துக்கு தான் என்றாலும் மறுப்பதற்கு இல்லை .

    கசீனோ போன்ற மேட்டுக்குடி சூதாட்டங்கள் தொடங்கி ,இலத்திரனியல் விளம்பரம் ஊடான விபச்சார அழைப்பு வரை உல்லாசப்பிரயாணிகளை கவருவதற்காக மிகத் தாராளமாக இன்று இடம்பெறுகிறது .இவைகள் எல்லாம் பௌத்த பாரம்பரியத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்கும் என நினைக்கும் சிலர் முஸ்லீம் எதிர்ப்பு என்ற திசை திருப்பும் அரசியலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் அர்த்தம் என்னவென்றால் கௌதம புத்தரையும் அடகு வைத்த ஒரு அரசியல் பித்தலாட்டம் ஒன்று இலங்கையில் நடக்கின்றது என்பதாகும் .

          முஸ்லீம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான முறுகல் என்பது திட்டமிட்டு வலிந்து பிறப்பிக்கப்படும் அரசியலாகும் .அதன் உச்ச நிலை போலீஸ் ,அல்லது இராணுவ சர்வதிகாரத்துக்குள் இலங்கை மக்களின் இயல்பு வாழ்வை கொண்டு வருவதாகும் .அதன்மூலம் முதலாளித்துவ சுயநலவாதத்தை வெளியிட்டு பாதுகாப்பதாகும் .அல்கைதா அச்சுறுத்தல் என்ற அகிலவலையை இலங்கையில் விரித்துள்ள நீண்டகால நோக்கம் அதுவாக இருக்கலாம்.

           சமூக கருத்தியலை தனக்கு சாதகம் ஆக்குதல் அல்லது சூழ்நிலையை விகாரம் ஆக்குதல் மூலம் தனது நிர்ணயங்களை சாதிப்பது முதலாளித்துவ அடிப்படை பாணி .அந்தவகையில் காட்டப்படும் காட்சிகளை நம்பி ஏமாறுதல் என்பது முழு உலகமும் சந்தித்து வரும் நிதர்சன நிகழ்வு .இந்த நாடக அரசியலில் நேற்று இனவாதத்தை வைத்து பொறிவைக்கப்பட்ட இலங்கை வாழ் மக்கள் இன்று மதவாத பொறியை நோக்கி முற்றுகை கோணத்தில் நகர்த்தப்படுகிறார்கள்.

       ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் பிரித்து ஆளுதல் என்ற காலனித்துவ ஏகாதிபத்திய விதியை நம்பியே 
மேட்டுக்குடிகள் அரசியல் செய்கிறார்கள் .இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.

                             இப்படி ஆபத்தான அரசியல் பொறிக்குள் நாம் சிக்க வைக்கப்பட்டுள்ளோம் .நிலைமை புரியாமல் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் முடிச்சு போட உலமா சபை முயல்கிறது .அதுதான் 75 இலட்சம் செலவு செய்து நல்லிணக்க மாநாடு நடத்த முயற்சிப்பதை தான் சொல்கிறேன் .

No comments:

Post a Comment