Friday, September 19, 2014

இலங்கை அதிபரின் இராஜதந்திரமும் சீன மயமாகும் இலங்கையும் !!


       சீன மக்கள் குடியரசு தலைவர் க்ஷீ ஜி்ங்பின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொண்டிராத அபிவிருத்தித் திட்டமான துறைமுக நகர் எனும் கடலை நிரப்பி டுபாய் ஸ்டைலில் ஒரு நகரை உருவாக்கும் மெகா திட்டத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, அதன் பின் அது முன்னெடுத்துள்ள அரசியல் தீர்வுகள் என அனைத்தையும் சீனத் தலைவர் பாராட்டியுள்ளார். பரஸ்பரம் சீன இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை புதிய லெவலில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எல்லாம் சரி தான். இலங்கை அரச அதிபர் இதில் மிகச் சாணாக்கியமாக காய் நகர்த்தியுள்ளமையானது அவரது இராஜதந்திரத்தை நிரூபணம் செய்துள்ளது. 
      யுத்தம் செய்த காலத்தில் சர்வதேசங்களை சமாளித்த நிலையிலேயே புலிகளை ஒழித்துக்காட்டியிருந்தார். ஆனால் பல போர்குற்ற ஆதாரங்கள் சனல் 4-வில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய் வெளிவர தொடங்கின. அது தொடர்பில் விசாரணை நடாத்தப்படும் என்ற இலங்கை அரசின் முடிவுகளை உலகம் நம்பத்தயார் இல்லாத நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க தயாரானது. விசாரணையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று இலங்கை அரசிற்கு நன்றாகவே தெரியும். அதே வேளை அதனை தடுக்கும் அளவிற்கு இலங்கை அரசு சர்வதேசத்தில் வல்லரசு கிடையாது. என்ன செய்யும் இலங்கை அரசு என யோசித்த வேளையில் இப்போது இலங்கை அதிபர் அதற்கு ஒரு செக் வைத்துள்ளார்.

      ஐ.நா.வி்ன் சர்வதேச விசாரணையின் பின்னால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நேட்டோ நாடுகள் நிற்பதை நன்றாக தெரிந்த நிலையில் தான் சீன அதிபர் க்ஷீ ஜிங்பின் இலங்கை அரசின் நடவடிக்கைகளை பலமாக ஆதரித்துள்ளதுடன் அவர்களின் செயல் நடவடிக்கைகள் சரியென கூறியுள்ளார். இது அவர் சர்வதேசத்தை குறிப்பாக ஐ.நா.வை நோக்கி சொல்லும் ஒரு செய்தியாகும். இந்த அளவிற்கு சீன அதிபர் அதுவும் இலங்கையி்ல் வைத்து சொல்லியுள்ள செய்தியானது, சீன அதிபரை இலங்கை அதிபர் தன் வசப்படுத்தி விட்டார் என்பதனையே உணர்த்துகிறது. 

          இலங்கையில் அதிபரிற்கு எதிரான ஒரு இராணுவ புரட்சி உருவாகலாம் என்ற எதிர்வு கூறல்கள் மிகைத்த நிலையில் அவர் அதனை சமாளிக்க முடியாமல் பல விட்டுக்கொடுப்புக்களை அரசியல் ரீதியாக இதுவரை செய்திருந்தார். பல விடயங்களை கண்டும் காணாதது போல் நடந்து கொண்டார். சீனாவுடனான பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடுகள் என்பது உண்மையில் இலங்கை அதிபரை மிலிட்டரி கூஃ மூலம் கவிழ்த்து ஆட்சியை தம் வசப்படுத்தலாம் என நினைத்த சிலரிற்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளது. இலங்கை அரச அதிபர் ஆட்சியில் இருந்து வீசப்பட்டால் சீன இராணுவம் அவரிற்கு அந்த ஆட்சியை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் என்பதே அது. 

   இலங்கை அதிபர் மிகத்திறமையாக இரண்டு விடயங்களை சீனாவை உள்ளிழுத்து தன்னை தற்காத்துக்கொண்டார். ஆனால் சீனா இவ்வளவு தூரம் சும்மா எதையும் செய்யாது. அதற்கு ஒரு பெரிய நலன் இருக்கும் என்றாலே அது சில எல்லைகளை தாண்டி செயற்படும். அந்த எல்லைகளைதான் என்ன?

     நெருங்கி வரும் அமெரிக்க இந்திய உறவு, மாலை தீவுகளில் அமெரிக்கா அமைக்கும் சப்மெரீன் பேஸ், டியாகோகார்சியாவில் உள்ள அமெரிக்க இராட்சஸ தாக்குதல் தளம் போன்ற பல இராணுவ சமன்பாடுகளிற்கு விடையாக இலங்கையில் பிரமாண்டமான முப்படைத்தளத்தை அது அமைக்க எண்ணியிருக்கலாம். 

         மதம் என்ற அடிப்படையில் கன்பூஷியஸ் சீனாவும், பௌத்த இலங்கையும் பெரிய வேறுபாடுகளை கொண்டிருக்கவில்லை. சீனா உற்பத்திகள் இலங்கை சந்தையை பெரிதும் ஆக்கிரமித்துள்ளன. இரவில் வீதிகளில் அலையும் சீன மாந்தர்கள் வரை அதன் எல்லைகளின் வீச்சுக்கள் அகலம். இலங்கையின் ஐந்தாவது இனமாக சீன இனம் உருவாக நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன. இலங்கை மீதான சீன ஆதிக்கம் என்பது இலங்கையை ஒரு சீனக் கொலனியாக மாற்றும் எல்லைவர கூட செல்லலாம். எங்கள் ஊரில் சொல்வார்கள் “ சோலியன் குடுமி சும்மா ஆடாது” என்று. அது போலவே சீனாவும் எதையும் சும்மா செய்யாது என்பதே அரசியல் உண்மையாகும்.

No comments:

Post a Comment