Thursday, September 18, 2014

இலங்கையிலும் அபிவிருத்தியாமே !?

      யாவும் போலி எல்லாம் பித்தலாட்டம் என்பது முதலாளித்துவம் சொல்லி நிற்கும் ஒரே தெளிவான அரசியலாகும் .ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்றம் ,பெரும்பான்மை ,சிறுபான்மை இப்படியான எல்லாமே வெறும் பெயரளவுப் பெறுமானங்களே ஆகும். மக்களாகிய நாம் ஏமாளிகளாக இருப்பதால் ஏமாற்றப் படுகிறோம் ;என்பது மட்டுமே உண்மையாகும் .

    பொதுவாக மக்களுக்கு நன்மை செய்தல் என்பதே அரசியல் அதிகாரத்தின் அடிப்படை நோக்கம் .ஆனால் இன்று அது சில மேட்டுக்குடி முதலாளிகளின் நன்மைக்காக மக்கள் என்பதாக அது மாற்றப்பட்டுள்ளது .

    அரசியல் என்பது இன்று சம்பதிப்பதட்கான சிறந்த வழி, இதன் காரணமாக சுயநல வாதிகளும் ,குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்களும் ,அதன் ஆதிக்க பிதாக்களாக மாறிவிட்டார்கள் .இப்படி சொல்வதை விட இன்று உலகை ஆளும் முதலாளித்துவம் எனும் சித்தாந்தம் வகுத்துள்ள அடிப்படை நியதியே அதுவாக இருக்கிறது என்று கூறலாம் .

                       நேற்று காலனி ஆதிக்கம் பாரிய வீதி நிர்மாணங்களையும் ,
புகையிரத பாதைகளையும் அதன் ஆதிக்க நிலங்களில் அமைத்தது .
அதன் நோக்கம் குறித்த பகுதியின் வளங்களையும் ,செல்வங்களையும் 
தமது மூல தேசங்களை நோக்கி துறைமுகங்கள் ஊடாக எடுத்துச் செல்லவே ஆகும் .அதுவும் அந்த மூல தேசங்களின் குறித்த மேட்டுக்குடிகளின் நன்மைக்காகவே .

       பின் சுதந்திரம் என்ற பெயரில் சுரண்டல் தத்துவத்துக்கு நவ காலனித்துவ முகமூடி போட்டார்கள் . அதற்குள் ஏற்றுமதி ,இறக்குமதி வெளிநாட்டு வருமானம் ,நாட்டின் முன்னேற்றம் போன்ற பகட்டை காட்டி தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள் .உலக ஒழுங்கு என அவர்கள் சொல்வது அந்த மேட்டுக்குடிகளின் நன்மையே ! இப்போதும் அதே அதிவேக நெடுஞ்ச்சாலைகள்,அதே துறைமுகத்தோடும், விமான நிலையங்களோடும் தொடர்பு படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இப்போதைய சுரண்டலின் நியாயப்பெயர் அபிவிருத்தி !!!

                            அது எமது உழைப்பையும் குறைந்த ஊதியத்தோடு உறிஞ்சிக் கொண்டு உச்ச இலாபத்தை கொள்ளையிட்டு செல்கிறது .இன்னும் வெளிநாட்டு வருமானம் என்ற பெயரில் ஊக்குவிக்கப்படும் 
உல்லாசப் பிரயாணத் துறைக்காக பெண்களின் ,சிறுவர் ,சிறுமியரின் மானத்தையும் கடைச்சரக்கு ஆக்கி விபச்சாரம் பாலியல் தொழில் என்ற அடைமொழியோடு அரச அங்கீகாரம் பெறுகிறது .

          சில கண்துடைப்பான தடைகளும் ,எச்சரிக்கைகளும் காட்டப்பட்டாலும் கசீனோ முதல் அணைத்து ஆடம்பர சூதாட்டங்களும் இன்று கௌரவமான தொழில் சட்டங்களின் கீழ் பதியப்பட்டுள்ளது .அதுவும் அபிவிருத்தி என்ற பெயரில் !!நடப்பு முதலாளித்துவம் இந்த சுரண்டலை அங்கீகரிக்கிறது என்பதே உண்மையாகும்.

      அதிஷ்ட இலாப சீட்டு என்ற பெயரில் 20 ரூபா சூதாட்டத்தின் தண்டப் பிரஜைகளாக மக்களின் முக்கால் வாசிப்பேர் பழக்கப் படுத்தப்பட்டு உள்ள்ளனர் .அதுவும் அபிவிருத்தியின் பெயரில் !! மக்களின் தலைக்கு மேல் கடன்சுமை கண் மண் தெரியாமல் எகிறியுள்ளது .ஆனால் நாடு மட்டும் அபிவிருத்தி அடைகிறது .

      இவர்கள் மக்களாகிய எமது காதில் பூச்சுத்த முயல்வது புரிகிறது ;ஆனால் அது சைனிஸ் பூவா ,ஜப்பான் பூவா !? என்பதில் தான் சற்று சந்தேகம் நிலவுகிறது .இதைத்தானா பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என முன்னோர்கள் சொன்னார்கள் !! வாழ்க சனநாயகம் வளர்க முதலாளித்துவம் .

No comments:

Post a Comment