Monday, January 13, 2014

ஒரு வரித் துணியின் ஆதங்க வரிகள் ! அதுதான் புலித் துணியின் சோக சரிதை !(100% உண்மை கலந்த கற்பனை. )


     ஒரு விலை மாதுவின் கசங்கிய துணியை விட கேவலமான அரசியல் வரலாறுதான் எனக்கு இன்றுள்ளது .எனது தேவை பலரின் இலாபங்களுக்காக பயன்பட்டுப் போனதால் இன்று வெட்கித்துப் போகிறேன் . விடுதலை வேட்கை என்ற நியாயத்தோடு எகாதிபத்தியங்க்களின் தாகம் தீர்க்க பயன்பட்டுள்ளேன் என்பது ஆயிரம் நியாயங்களை சொன்னாலும் அசிங்கமானதுதான் .தாயக மண் ,இலட்சியம் என்ற மேட்பூச்சில் ஒரு அற்பமான இனவாதப் பாதையில் மனித விழுமியங்களை மிதித்தவாறே பயணித்த அந்தப் பொழுதுகள் அன்று பெருமைப்படும் விடயமாகத்தான் இருந்தது .



         இன்று நானிருக்கும் நிலை !! அமெரிக்க 'சட்டலைட் ' இடம் கேட்டு , இந்திய 'ரடாரில்' பார்த்து , சீனர்களின் மல்டி பெரல்களால் பேரினவாதம் பிளந்து கட்டியபோது சிதறித்தான் போனேன். என்னோடு ஒட்டிவந்த அந்த மாவீரர் !!! சதையை வீர வணக்கத்தோடு கூட்டி அள்ளி புதைக்கும் அவகாசத்தையும் அந்த இறுதிக் கணங்கள் இழந்திருந்தது . பலரின் துரோகத்தில் என் தரப்பு நயமாக வஞ்சிக்கப்பட்டது புரிந்த போதும் அழிவது தவிர மாற்று வழி எனக்கு இருக்கவில்லை .அதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட இறுதி 'சாய்ஸ் '!! யார் யாரை நம்பிச் செய்த கொடூர 'அசைன்மெண்டுகள் ' எல்லாம் கை கொடுக்க வரவில்லை .முதலாளித்துவ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!

         வெவ்வேறுபட்ட இலாப அருவடைகளுக்காக இலங்கையின் யுத்த வயல் இனவாத அணியாயங்களால் விதைக்கப் பட்டது . ஆக்கிரமிப்பு , பழிவாங்கல்  , மேலாதிக்கம் என்று குறுகிய பார்வைகளால் மனிதாபிமானம் புதைக்கப் பட்டது . அரச பயங்கர வாதமாக விடயங்கள் சூடு பிடித்தது . பதிலடியை அவர்களது பாசையில் என் தரப்பு சொல்லப் புறப்பட்டது . சிங்கம் ,புலி விளையாட்டு எனும் யுத்த அரசியல் சந்தை தெளிவாகவே திறந்து விடப்பட்டது . 

       இங்கு  "எடு கையில் வெடிகுண்டை புலியே நீ வாடா !அட இன்னும் சிங்களவன் கையில் உன் நாடா !? என கட்டளையிடும் போது 'தலைவர் சொல் மிக்க மந்திரமில்லை 'என்ற புது மொழியோடு காட்டப்படும் இலக்குக்கு வெடிவைக்கும் விசுவாச உடலுக்கு கட்டான வடிவம் கொடுக்கும் ஒரு 'யூனிபார்ம் ' நானாவேன் . சிங்களதேசம் , சிங்களச் சிப்பாய் ,ஆக்கிரமிப்பு ,பேரினவாதம் என்ற வார்த்தைகளை கேட்கும்போது கொதித்து எழும் உடலின் சூடு என்னையும் தாக்க ஒரு வெறித்தனமான பார்வையோடு புலித் துணியாக வலம்வரத் தொடங்கியது ஈழப் போரின் இரண்டாம் கட்டத்திலேயே ஆகும் . ஒரு காக்காவின் (முஸ்லிமின் ) தையல் மெசினில் தான் உடுப்பாக உருவம் பெற்றேன் . அந்த மெசினை 1990 அக்டோபரில் வடக்கில் இருந்து காக்காமாரை (முஸ்லீம்களை ) விரட்டி கொள்ளையடித்த பொருட்களோடு கண்ட ஞாபகம் இருக்கிறது .


        காத்தான்குடி பள்ளிக்குள் புகுந்தபோது இது பேரினவாதம் இல்லையா !? என எழுந்த சந்தேகத்தை இயக்க விசுவாசம் அதன் கொடியின் சிகப்புக் கலரால் அறிவை மூடியது ! காக்காமாரின் (முஸ்லீம்களின் ) இரத்தத்தில் ஈழத்தை தேடினோம் !!! துரோகிகளாம் ,காட்டிக் கொடுதவர்களாம் !! தலைமையின் நியாயங்கள் 'கிளஸ் நிகோ ' ரைபிலை புலித்தனமாக சீற வைத்தது . வெடிபட்டு வீழ்ந்த அந்த ஏழு வயது சிறுவன் !! இவன் யாரிடம் யாரை காட்டிக் கொடுத்தான் !? அட இதுதாண்டா இனத் துடைப்பு 1983 இல் சிங்களப் பேரினவாதம் எமக்கு தந்ததை 1990 களில் நாம் காக்கா மாருக்கு (முஸ்லீம்களுக்கு ) நாம் கொடுக்கிறோம் !!! இது சரியா தவறா !? எச்சரித்த மனிதத்தால் அடிக்கடி கசங்கிப் போவேன் .இருந்தும் ஈழத்து இஸ்திரியால் மீண்டும் ஒரு மெருகூட்டம் அதே இரத்த விளையாட்டை தேடிப்போகும் .இப்படி அடங்காப் பிடாறித் தனத்துக்கு நான் 'யூனிபார்ம் ' அவ்வளவுதான் .

         கொலைகார இனவாதத்தால் பேசப்படும் பிணவாத அரசியல் இந்த கேடுகெட்ட முதலாளித்துவ சித்தாந்தம் உலகை ஆளும் வரை அழியப் போவதில்லை .பெரும்பான்மை ,சிறுபான்மை என்ற பக்கச் சார்பில் மனிதத்தை மிதிக்கத்தான் போகிறது .அடே யாரோ என்னை மிதித்துக் கொண்டு போகிறார்கள் ! யார் அது !? இவர் முன்னால் அவரும் ..பின்னால் இவருமான ...ஒரு தமிழ் அரசியல் வாதி . எனக்கு நேற்றைய ஒரு பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறது ." எதிரி காலில் ஏறி நின்று செருப்பு ஆகினாய் தமிழ் மண்ணை எண்ணை ஊற்றி நெருப்பு மூட்டினாய் ! கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையும் ஆகினாய் ! என்று பாடியவர் அல்லவா !? இன்று இவர் யாராம் !? துரோகி ,துரோகி என பிஸ்டல் குறியில் பலரை போட்டவர் ,இன்று வெள்ளையும் சொல்லையுமா !? பழைய 'யூனிபார்ம் ' ஆன என்னை மறந்து விட்டார் !! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !

                                                                                                                                                                                                                                                                           (தொடரும் ....)

No comments:

Post a Comment