Wednesday, January 8, 2014

ஓ முஸ்லிமே ! இந்த சூதாட்ட அரசியலில் சூனிய வாழ்வா உனது தேடல் !?


   குடிமக்களுக்கு சேவை செய்வதற்காக அரசா ? சில மேட்டுக்குடிகளின் சுரண்டல் ஆதிக்க அதிகாரத்தை சகித்துப்போய் ஏதோ வாழ்ந்து விட்டு செல்பவனா குடிமகன்  !? ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற சூதாட்ட அரசியலின் துரும்புச் சீட்டா குடிமகன் !? நம்பிய பின் மோசடி செய்வதெனும் அதிகார நியதியின் கீழ் அடிப்படை  உரிமைகளை கூட ஏதோ பிச்சை வேண்டுவது போல் கையேந்தி ஏங்கித் தவிப்பது தான் வாக்குப் போட்டதன் பலனா !? ஏன்? எதனால்? 


      அரசியல் அதிகாரம் என்பதற்கான வரைவிலக்கணம் இன்று இதுதான். குறித்த சில மேட்டுக்குடிகளின் சுயலாபம் ,சுயநலம் என்பவற்றை இலக்காக்கி குடிமக்களின் பாகுபாடுகளையும் , பலவீனங்களையும் பயன்படுத்தி அவர்களின் வாழ்வாதார அடிப்படைத் தேவைகளை கட்டுப்படுத்தி ,அதனூடாக தமது இருப்பை தவிர்க்க முடியாத ஒன்றாக காட்டி நிற்கும் இலாபம் கொழிக்கும் ஒரு வியாபாரமே ஆகும் .

     பரந்து வியாபித்துள்ள முதலாளித்துவ கோட்பாட்டின் கீழ் ஒப்பந்தங்கள் ,நிபந்தனைகள் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களையும் , வளங்களையும் யாரிடமோ விலைபேசி விட்டு , அந்த மூன்றாம் தரப்பின் விருப்பு வெறுப்புக்காக மக்களை சதிகளாலும் ,விதிகளாலும் கட்டுப்படுத்தும்  ஒரு அடிமை சாசனமே இன்று அதிகார அரசியல் ஆகும் .

     தேசம் ,தேசியம் என்ற வகையில் எல்லைகளுக்கு அப்பால் உடன்பாடுகள் ,ஒப்பந்தங்கள் ,முரண்பாடுகள் என்ற சர்வதேச அரசியலையும் , இன ,மொழி ,நிற ,சாதி ,வர்க்க ரீதியான குறுந்தேசிய பாகுபாட்டையும் கருவியாக பயன்படுத்திய உள்நாட்டு அரசியலுமே இந்த மேட்டுக் குடிகளின் கருவிகளாகும் .

       இந்தவகையில் தேசப்பற்று ,தாய்மண் என்ற பொது நிலைப்பாட்டில் விசுவாசம் வேண்டிய பக்தி பூர்வம் என்ற ஒரு எல்லை வட்டம் பொதுவாக இங்கு காணப்படும் . கட்சி, பெரும்பான்மை ,சிறுபான்மை ,மாநிலம் ,மாகாணம் என்ற பிரிகோட்டு மனோபாவமும் மறுபக்கம் பேணப்படும் .இத்தகு எமாற்றின் பெயர்தான் இன்றைய அரசியல் ஆகும்.

        தேசத்திற்கு அச்சுறுத்தல் ,தாய் மண்ணின் பாதுகாப்பு , என்ற விசுவாச நிலைப்பாடு ஓங்கி ஒலிக்கப்படும் நிலையில் ,அதை அதி முக்கிய விடயமாக ஏற்றுக்கொண்டு , "தாய் மண்ணே வணக்கம் " என பிரார்த்தித்தவாறு 'உடல் இம்  மண்ணுக்கு உயிர் தேசத்திற்கு ' என தேசியத்தை கடவுளாக்கிய ஒருவகை எமாற்றின் மூலம் அதிகார மேட்டுக் குடிகள் தமது பொய்களையும் ,புரட்டுகளையும் , சுரண்டல்களையும் ,திருகு தாளங்களையும் பக்குவமாக மூடிமறைத்து விடுவர் .

       இன்னொரு பக்கம் பிரதிநிதித்துவ அரசியலுக்காக கட்சி அரசியல் செய்ய, பெரும்பான்மை ,சிறுபான்மை ,இன ,மத ரீதியான பல்வேறுபட்ட முரண்பாடுகளை தூக்கி நிறுத்திய , தூண்டி விடுகின்ற சதி வடிவங்களை உள்நாட்டில் அறிமுகப் படுத்துதல். இந்த உள்ளார்ந்த கொந்தளிப்பின் ஊடாக தமது பொய்களையும் ,புரட்டுகளையும் , சுரண்டல்களையும் ,திருகு தாளங்களையும் பக்குவமாக மூடிமறைத்து விடுவர் .

         உச்சக்கட்டமாக உருஞ்சுதல் , சுரண்டுதல் அதற்காக சற்று பிச்சை போடல என்ற ஆண்டான் அடிமைதுவத்தின் நெறிப்படுதப்பட்ட சாசன வடிவத்தை வைத்து மக்களை நிர்வகித்தல் தான் இன்று அரசியல் என போற்றப்படுகிறது .இஸ்லாமிய பரிபாசையில் இந்த அரசியலின் ,நகர்வு , விளைவு ,அது தரும் நாகரீகம் ,கலாச்சாரம் இப்படி எல்லாவற்றையும் ஒரே வார்த்தையால் பக்குவமாக சொல்லிவிடும் . அது 'ஜாஹிலீயத் 'என்ற பதமே ஆகும் .

          ஓ முஸ்லிமே உனது விடுதலையும் ,மனித சமூகத்தின் விடுதலையும் நிச்சயமாக இந்த ஜாஹிலீய அரசியலில் இல்லை  . அது இருப்பது மனித வரலாற்றின் ஒரு நீண்டபொழுதுகள் உண்மை ,நீதி ,சமத்துவம் ,நியாயம் என்பவற்றை வெற்றிகரமாக பிரயோகித்து அதன் பலனை மனித சமூகத்துக்கு பெற்றுத் தந்த இஸ்லாத்தில் மட்டுமே ஆகும் . 

No comments:

Post a Comment