Wednesday, January 9, 2013

ரிசானா நபீஸ் மரணமும் விமர்சனங்களும்!



by Abu saiyaf  இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனை,தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை ஒருவர் காட்டு மிராண்டித் தனமாக படுகொலை செய்வதிலிருந்து தடுக்கும், மனிதர்களை வேட்டையாட சுதந்திரம் கேட்பவர்களுக்கு அது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாக இருக்கலாம்.

சகோதரி ரிசானா நாபிக் அவர்களுடைய விடயத்தில் நாம் கவலை கொள்வது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை அல்ல, றிசான நாபிக் அவர்கள் மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றம் ஷரீஅத் நீதி மன்றில் கையாளப் பட்ட விதம் மற்றும் அவர் பக்க நியாயங்களை முன்வைத்து வாதாட அவருக்கு சட்ட உதவி கிடைக்காமை போன்ற விடயங்களாகும்:
ரிஸானா நாபிக் குழந்தைக்கு பாலூட்டும் பொழுதோ அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறும் பொழுதோ அருகில் எவரும் உதவிக்கோ சாட்சிக்கோ இருக்க வில்லை.
வீட்டிலும் பொலிஸிலும் பலமாக தாக்கப்பட்டு அச்சுறுத்தலின் பேரிலேயே ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிவித்திருந்தார், இவ்வாறான ஒரு நிலையில் நிலவும் சந்தேகத்தின் பயன் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப் படி ரிசானாவுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர் கேரள தேச மலையாள மொழி பேசும் ஒருவர்.

வைத்திய சான்றிதல் குறித்த சந்தேகங்கள் சட்ட வைத்திய நிபுணர்களால் எழுப்பப் பட்டிருந்தன.

ரிசானாவின் அல்லது குறித்த குழந்தையின் தாயின் மன நிலை பாதிக்கப் பட்டிருந்ததா என்பதற்கான வைத்திய சான்றிதழும் பெறப்படவில்லை.
ரிசானா நாபிக் அவர்களது தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதாட சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திடம் நிதி ஒதுக்கீடுகள் இருக்க வில்லை.

அவ்வாறு சட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளோ ஒரு காப்புறுதியோ அல்லது ஒரு நிதியமோ இலங்கை வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் இது வரை உருவாக்கப் பட வில்லை.

ரிசானாவின் உண்மையான வயதினை நிரூபிக்கும் சட்ட வலுவுள்ள ஆவணங்கள் நீதி மன்ற நடவடிக்கைகளின் போது எந்த தரப்பினாலும் முன் வைக்கப் படவில்லை. அவ்வாறான சந்தேகங்கள் நிலவுகின்ற நிலைமையில் ஷரீஅத் நீதி மன்றம் அதனை ஊர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

நாட்டில் இருந்த சட்டங்களை வைத்தே இலங்கை அரசு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது, தீர்ப்பு வழங்கப் பட்ட பின்னர் இலங்கை அரசின் முன்னிருந்த ஒரே மாற்று வழி ஜனாதிபதி மன்னரிடம் ஒரு கருணை கோரும் மனுவை சமர்ப்பிப்பது தான்.

என்னைப் பொறுத்த வரை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தனது மொழி பெயர்ப்பாளர்களை மாத்திரம் நம்பியும் , வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் வெளி விவகார அமைச்சும் சவூதி அரேபியாவுக்கான முன்னால் தூதுவர் ஒருவரை மாத்திரம் நம்பியும் ரிஸானா விடயத்தில் உறுப்படியான நகர்வுகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமை கண்டிக்கப் பட வேண்டிய விடயங்களாகும்.

அதே போன்று றிசான நாபிக் விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவ்வப்போது சில அறிக்கைகள் விட்டாலும் அவருக்கு உரிய நேரத்தில் சட்ட உதவிகளை பெற்றுக் கொடுக்க வோ சிவில் தலைமைகளுடன் இணைந்து அதற்கான ஒரு நிதியத்தை தொற்றுவிக்கவோ ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதே உண்மையுமாகும் !

மனித உரிமைகள் அமைப்புகள் ஷரீஅத் சட்டத்தை விமர்சிப்பது என்பது புதிரான விடயமும் அல்ல, அதேவேளை இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதி அவர்களை குறை கூறுவதும் ஆரோக்கியமான விடயமல்ல என்பதனை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்
.!

No comments:

Post a Comment