Friday, October 12, 2012

"AIR PIRACY" - துருக்கியின் “வான் கொள்ளை” சொல்லும் சர்வதேச நியாயங்கள்...




ஸியோனிஸ சாம்ராஜ்யத்திற்கான டமஸ்கஸ்ஸின் வாசற் கதவை திறக்க உஸ்மானிய கிலாபத்தின் தலைமை தேசம் துருக்கி தன்னால் ஆனதை செய்கிறது என்பதனை தவிர எழுத ஒன்றுமில்லை......



by: Abu Maslama     Airbus-320 ஜெட் ரக சிரியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் மொஸ்கோவில் இருந்து டமஸ்கஸ் நோக்கி தனது வழமையான பறப்பினை மேற்கொண்ட வேளையில் துருக்கியின் இரு சண்டை விமானங்களால் சர்வதேச வான்பரப்பில் வைத்து பலவந்தமாக திசைதிருப்பப்பட்டு துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது. “ஆற்சேபனைக்கு இடமான பொருட்களை ஏற்றி சென்றிருக்கலாம்” என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சர் Ahmet Davutoglu இதற்கு காரணம் சொல்லியுள்ளார்.

முன்னராக இராணுவ தளபாடங்களை ஏற்றிய சிரிய விமானங்கள், துருக்கிய வான்பரப்பின் மேல் பறப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்த மறுநாளே இந்த நடவடிக்கையை துருக்கி எடுத்துள்ளது. எல்லைகளில் பரஸ்பரம் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடாத்தும் நிலையில் துருக்கியின் இந்த நடவடிக்கையானது இராஜதந்திர பின்புலத்துடன் கூடிய ஒரு நகர்வாகவே அவதானிக்கப்படுகிறது. 

எட்டு மணி நேரமாக பறந்த விமானம் துருக்கிய பைட்டர் ஜெட் விமானங்களின் சைகையின் பின்னர் Ankara's Esenboga Airport ல் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த 30 பிரயாணிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு அதன் பின்னரே மீண்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

சிரியாவின் காலாகாலமான ஆயுத விநியோகம் செய்யும் தேசமான ரஷ்யாவின் உயர் அதிகாரி ஒருவர் இது பற்றி கருத்து வெளியிடுகையில் “இராணுவ தளவாடங்களோ, அல்லது அவற்றின் பகுதிகளோ, ஆயுதங்களோ அந்த விமானத்தில் ஏற்றப்படவில்லை. அவ்வாறு ஏற்ற வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. நாம் சிரியாவிற்கு ஆயுதம் விற்பது எல்லோரிற்கும் தெரியும். எதற்காக நாம் பயணிகள் விமானத்தில் மறைத்து வைத்து ஆயுதங்களை அனுப்ப வேண்டும். எமது கார்கோ கரியர்ஸ் விமானங்களில் நாம் நேரடியாகவே தேவையேற்பட்டால் ஆயுதங்களை அனுப்புவோம். துருக்கியின் இந்த செயற்பாடானது சிரியாவின் பெயரை மட்டுல்ல ரஷ்யாவின் பெயரையும் இழுக்காக்கியுள்ளது” என கூறியுள்ளார். 

 "air piracy" எனும் விமானக்கடத்தலே இது. சோமாலியாவின் கடற்கொள்ளையரிற்கும் துருக்கியின் விமானப்படையினரிற்கும் இடையிலான வித்தியாசத்தை என்னால் உணர முடியவில்லை என சிரியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்த கருத்தை லெபனானின் அல் மனார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

சிரியாவிற்கு வழங்கப்படும் மின்சார விநியோகத்தை இனிவரும் நாட்களில் நாம் நிறுத்தப்போகிறோம் என துருக்கிய மின்சார துறை அமைச்சர் இப்போது மிரட்டியுள்ளார். 910km எல்லையை சிரியாவுடன் கொண்ட துருக்கி அதன் ஆர்டிலறிகளையும், தாக்குதல் விமானங்களையும் சிரியாவில் எல்லையில் நகர்த்தி வருகிறது. “துருக்கி தாக்கப்பட்டால் நாம் அதனை பாதுகாப்போம் என நேட்டோ” சொல்லியுள்ளமையில் இருந்து சிரியா மீதான தாக்குதல் யுத்தத்தின் முதல் அணியாக துருக்கியையே அமெரிக்கா முன்னிறுத்தவுள்ளது. 

சிரியாவினுள் நுழைதல் என்ற திட்டத்தின் பிரதான தடைக்காரணி ரஷ்யா. அதனை சமாளிக்க இரு நாடுகளின் எல்லை பிரச்சனையாக இதனை மாற்றியுள்ளது அமெரிக்கா. சில காலங்களிற்கு முன்னர் துருக்கியை பலம் பொருந்திய இஸ்லாமிய நாடாக மேற்கு நாடுகள் பிரகடனம் செய்த போதே இவர்களது உண்மை முகம் என்ன என்பது பற்றி நாம் கூறியிருந்தோம். பர்மாவிற்கு (மியன்மார்) துருக்கிய அதிபரின் பாரியார் சென்ற போது, அந்த விஜயம் சிரியா ஆக்கிரமிப்பிற்காக சர்வதேச பார்வையை தயார்படுத்தல் என்பது பற்றியும் நாம் கூறியிருந்தோம். 

இது போதாதென்று இப்போது அமெரிக்க பாதுகாப்பு மந்திரி  Leon Panetta ஒரு பெரிய புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். “ஜோர்தானிற்கு தாம் அனுப்பிய 150 இராணுவ வல்லுனர்களும் சிரியாவின் அகதிகள் வாழும் முகாம்களில் கடமையாற்றுவர் என்றும், அவர்கள் ஜோர்தானை சிரியாவின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதோடு, சிரிய அகதி முகாம்களின் மீது சிரிய அரசு இரசாயன தாக்குதலை மேற்கொண்டால் அதிலிருந்து மக்களை காப்பாற்றும் மனித நேய செயற்பாட்டிற்கு பாரிய பங்களிப்பு செய்வர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். நாம் கடந்த வருடம் “சிரிய யுத்தம் - மேடின் அமெரிக்கா” என்று கட்டுரையில் இது தொடர்பாக எதிர்வு கூறியிருந்தோம். 

ஸியோனிஸ சாம்ராஜ்யத்திற்கான டமஸ்கஸ்ஸின் வாசற் கதவை திறக்க உஸ்மானிய கிலாபத்தின் தலைமை தேசம் துருக்கி தன்னால் ஆனதை செய்கிறது என்பதனை தவிர எழுத ஒன்றுமில்லை......

No comments:

Post a Comment