Wednesday, October 17, 2012

சூழ்நிலை மாயம், ஒரு இலட்சியத்தடை .



  சூழ்நிலை, நிர்ப்பந்தம் என்பன இறுதி இலக்கு பற்றிய தெளிவற்ற தற்காலிக தீர்வுகளையும் அடைவுகளையும் வேண்டி நிற்கும் .இது சரியானது போல் இருந்தாலும் ஆதிக்கத்தில் இருக்கும் தாக்கங்களிலும் அதன் வழி முறைகளிலும் தங்கி விடுவதை நியாயம் காணும் .இறுதியில் அதுவே ஒரு மூளைச்சலவை ஆகிவிடும் .

             நான் கீழே தரும் சம்பவங்கள் நடந்தது 1980 களின் தொடக்கத்தில் இலங்கையின் இனவாத யுத்தம் சூடு பிடிக்க தொடங்கிய காலப்பகுதியில் ஆகும் . அஞ்சி ஒடுங்கும் மனோ நிலையில் இருந்து தற்காப்பு நிலை தாண்டி தமிழர்கள் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக பழிவாங்கும் வெறியோடு தமது போராட்ட' டயரியை' எழுத்தத் தொடங்கிய  காலமது ."துவக்கு துவக்கு துவக்குப் போரை துவக்கு துவக்கு " எனும் வீராவேச வாய்வேட்டுக்களை நாடக பாணியாக தமது அரசியல் இலாபத்துக்காய் பாடிச்சென்ற தமிழர் விடுதலை  கூட்டணித் தலைமைகள் தமது நெற்றிக்கு 9mm ஈய பொட்டு வைக்க தம்பி மாரை தயார் படுத்திய காலமது .


                                                         தமிழ் ஈழம்  என்பது பேசுபொருள் மட்டும்தான் ஆனால் சூழ்நிலை ,நிர்ப்பந்தம்  ஒரு சிங்கள சிப்பாயை இரத்தமும் சதையுமாய் சிதறடிப்பதில் ஒரு குரூர திருப்தியை தமிழர்கள் கண்டார்கள் . ஒரு தமிழனை கொதிக்கும் தார் ஊற்றி துடிக்க துடிக்க சிங்களவர்கள்  படுகொலை செய்தது போல . கண்ணிவெடியில் கால் சிதறி துடித்துக் கொண்டிருக்கும்  ஒரு சிங்கள இராணுவ வீரனை 'கிரனைட்' வீசி அவன் தலையை சிதறடித்து சிதைந்த அவன் மூளை துகள்களை துப்பாக்கி' பரல் 'களால் கிண்டிப்பார்ப்பதில் ஒரு ஆனந்தம் கண்டார்கள் அந்த தமிழ் இளைஞ்சர்கள் .  ஒரு நிறைமாத தமிழ் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை 'பைனட்டினால் ' கிழித்து அந்த சிசுவை வெளியில் எடுத்து தரையில் அடித்து சிதறும் சதை சூட்டினில் சிங்கள சமூகம் கத கதப்பை கண்டது போல .(பின்னைய காலத்தில் சிங்கள சிவிலியன்களையும் ,முஸ்லீம் சிவிலியன்களையும் விடுதலைப் புலிகள் இவ்வாறுதான் செய்தார்கள் ).இந்த இனவாதம் ஒருவகையான பழிவாங்கும் மனநோயையே ஏற்படுத்தியது . மொத்தத்தில் இந்த சூழ்நிலை எனும் கருத்தியல் சிந்தனைகளின் தொழிற்பாட்டை சிறைப்படுத்தி வைத்திருந்தது . 


                                                          ஈழம் என்றால் யுத்தம் யுத்தம் என்றால் ஈழம் ! ஆயுதம் ஏந்துவது ஒரு 'பேசன் ' சுடுவது ஒரு பேரின்பம் ! பாடசாலையில் காந்தியை சுட்டது 'கோட்சே ' என்றால் மாணவன் கேட்கும் கேள்வி சுட்டது எந்த வகை' பிஸ்டல் ' பட்டது தலையிலா மார்பிலா ? நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா ?! அதாவது சூழ்நிலை மாயம் என்பது ஒரு சிறந்த இலட்சிய வாதத்தின் தெளிவான தடை . இங்கு விளக்கத்திற்கோ, விமர்சனங்களுக்கோ முக்கியத்த்துவம் இருக்காது . மாறாக ஒரு பக்கப்  பார்வையையே அது ஏற்படுத்தும் .  




No comments:

Post a Comment